வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் மக்களை வவுனியா மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நான்கு கிராமங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மெனிக்பாம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆனந்த குமாரசாமி, பொன். அருணாச்சலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் கிராமங்களை பார்வையிட்டார். ஏற்கனவே, மெனிக்பாம் கதிர்காமம் கிராமத்தில் மக்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று கிராமங்களிலும் கதிர்காமர் கிராமத்தையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரம் குடும்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.
இக்கிராமங்களில் உள்ளக பாதை, மின்சாரம், குடிதண்ணீர், பாடசாலைகள், ஏனைய திணைக்களங்களின் முக்கிய அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.
இவ்விஜயத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.