இந்திய மருத்துவ குழு திருகோணமலை சென்றுள்ளது

india-dr.jpgஅமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவ உதவிக் குழு திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சென்றுள்ளது.  இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவது 52 பேர் கொண்ட இந்திய மருத்துவ குழுவின் நோக்கம்.

எட்டு விசேட மருத்துவர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் உட்பட சகல ஆளணி வசதிகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடியது இந்த மருத்துவக்குழு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழு தன்னுடன் சகல மருத்துவப் பொருட்கள் முதற்கொண்டு, சத்திரசிகிச்சை உபகரணங்கள் வரையான சகல வசதிகளையும் எடுத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆளணி உபகரணங்கள் யாவும் சுமார் 20 லொறிகளில் ஏற்கனவே புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அநேகமான இவ்வார இறுதிக்கு முன்பதாக இவர்கள் தம்முடைய சேவையை ஆரம்ப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் வசந்த்குமார் தலைமையிலான இந்த இந்திய மருத்துவக்குழு இன்று காலை புல்மோட்டைக்குப் புறப்படுமுன்னதாக கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இலங்கை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களை வரவேற்று வழியனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்கே இங்கு தங்கியிருக்குமென்று தற்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாலும் தேவைக்கேற்ப காலம் நீடிக்கப்படலாம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *