மரபுவழி இராணுவத்துக்கு கெரில்லாயுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைப் படையினரை மரபுவழி இராணுவமாகவன்றி மனிதாபிமானப் படையினராகக் கட்டியெழுப்பிய தன் மூலமே வடபகுதி நடவடிக்கையில் வெற்றிவாகை சூட முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விமானப் படையினருக்கு வர்ணவிருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை சீனன் குடாவில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். விமானப் படையின் நான்கு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் 30 உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
தாய்நாட்டின் ஐக்கியத்தையும், கெளரவத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறார்களென்று பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் உலகப் படையினருக்கு ஒரு முன்மாதிரியாக இலங்கை விமானப்படையினர் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எதிரியின் இலக்கை மாத்திரம் துல்லியமாக இலக்கு வைக்கும் நமது விமானப் படையினர் ஒரு போதும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுக் கட்டடங்களை இலக்கு வைத்தது கிடையாது. அந்தளவுக்கு எமது படையினர் ஒழுக்கமுடையவர்களாக உள்ளனர். உலகின் முதலாந்தர பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தை எமது படையினர் இன்று மண்டியிட வைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்களிப்பை விமானப்படையினர் ஆற்றியிருக்கிறார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்வில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைத்தளபதிகள் அவர்களின் பாரியார்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- வடக்கில் எமது இராணுவ முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது விமானப் படையினர் பாரிய சேவையை வழங்கியிருக்கிறார்கள். படையினர் போக்குவரத்து, கடல் கண்காணிப்பு போன்ற விடயங்களில் அளப்பரிய சேவைகளைப் புரிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்புகளை மீட்பதில் தரைப்படையினருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தரை, கடல் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், தற்கொலைப் படகுகள் போன்றவற்றை அழிப்பதில் பாரிய பணியாற்றியிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வன் போன்ற தலைவர்கள் மெளனமாக்கப்பட்டபோது எமது விமானப்படையினரின் திறமைக்கே பாராட்டு கிடைத்தது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
palli
கருனா; தோழர்; சங்கரி மற்றது மற்றது இப்படியான ரகசியங்களைதானே சில்மிசமாய் சொல்லுறியள்.