புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்திய சமயம் புலிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்தியாதரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் வித்தியாதரன் கைது செய்யப்படவில்லை. புலிகளுடன் தொலைபேசித் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைதானார்.
ஊடகவியலாளர்களுக்கு அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் என்னிடமும் ஜனாதிபதியிடமும் கேள்விகள் கேட்டுள்ளார். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களை அரசு கௌரவத்துடன் நடத்துகின்றது. அவர் கடத்தப்பட்டதாகவும் வெள்ளை வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டவை அனைத்தும் வெறும் கற்பனைகளே.
வித்தியாதரன் நிரபராதி என விசாரணையில் தெரிய வந்தால் அவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளியாக இருந்தூல் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
அகிலன் துரைராஜா
பாதுகாப்பு சம்பந்தமான சேதிகளை வெளியிடுவோரும் பத்திரிகைகள் இணையத் தளங்களும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமானதொன்றாகும். தாம் வெளியிடுகின்ற செய்திகளால் மக்கள் பயனடைந்து கொள்வதென்பது வேறு பயங்கரவாதிகளும் அதனோடு பின்னிப் பிணைந்த உளவுத் துறையினரும் பயனடைந்து கொள்வதென்பது வேறு. இதனை மனதிலிறுத்தி தம் பணி செய்யும் எந்தவொரு பொறுப்புள்ள ஊடகவியலாளரும் போற்றப்பட வேண்டியவர்களே.
மாறாக தகாதவற்றிற்காகவும் சுய நலன்களுக்காகவும் ஊடகத் துறையையும் தமது ஊடகவியலாளர் என்ற துருப்புச் சீட்டையும் பயன்படுத்தத் துணிவார்களாயின் சட்டப்படியான அவர்களின் கைதுகள் குறித்தோ அல்லது நீதிமன்றத் தண்டனைகள் குறித்தோ கவலைப்படாது அவற்றுக்கெதிராக போர்க் கொடி தூக்குவதையும் அறிக்கைகள் விடுவதையும் முற்றாக விடுத்து சாதாரண மனிதன் செய்கின்ற குற்றத்திற்கு வழங்கப்படுகின்ற தண்டனையை விடவும் பொறுப்பிலுள்ள இவர்களுக்கான தண்டனையை இரு மடங்காக கொடுக்கும்படி நீதி மன்றங்களை தாழ்மையுடன் வேண்ட யாவரும் ஒன்று படுவார்களாயின் வையகம் சிறக்கும். ஊடக சுதந்திரமும் நிலைக்கும். நாட்டின் இறையாண்மையும் சட்ட ஒழுங்குகளும் நிலை நாட்டப்படும். –அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்