வடக்குத் தெற்கு என்றோ கிழக்கு மேற்கு என்றோ சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்றோ பேதங்கள் இல்லாமல் வாழக்கூடிய ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் அண்மையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்; எமது நாட்டின் பிரதான வளங்களில் ஒன்றாக கடல் வளத்தை எமது ஜனாதிபதி அடையாளங் காட்டியுள்ளார். நமது நாடு சகல வளங்களையும் கொண்டது. நமது நாட்டைச் சுற்றிவர கடல்வளம் உள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம்.
நீண்டகாலமாக பயங்கரவாத பிரச்சினைகளால் பயிர் செய்யப்படாத காணிகளில் இன்று கிழக்கில் விவசாயம் செய்யப்படுகிறது. கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த வாய்ப்பு விரைவில் வடபகுதி மக்களுக்கும் கிடைக்கும். இந்த சுதந்திரத்தை மீண்டும் நமக்கு வழங்குவதற்காக தமது, இன்று உயிரைத் தியாகம் செய்த படையினரை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்களால் தான் இன்று வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
அடுத்தபடியாக உங்களது பிரதேச அமைச்சர் அமீர் அலியின் முயற்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு எத்தனை கற்கள் கொண்டு கட்டப்படவுள்ளதோ அத்தனை கற்களையும் விட அதிகமான முறை என்னிடம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தைப் பற்றிப் பேசியுள்ளார். பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. நமது முயற்சிகளுக்குத் தடையாக சர்வதேச வலைப்பின்னல்களில் அகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வழியில் சென்றுவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்
Thambiah Sabarutnam
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் தென்னிலங்கையின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியே முன்னிக்கின்றது. இலங்கை வரலாற்றில் முக்கிய தீர்வு முயற்சிகளான, 1957ம் ஆண்டு பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம், 1987ல் செய்துகொள்ள்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம், 2000ம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம் கொண்டுவந்த தீர்வுப்பொதி என்பனவற்றை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியே முறியடித்து வந்துள்ளது. சுதந்திர இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்து, இந்திய வம்சாவழி மலையக தமிழ்மக்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்து, தனிச்சிங்கள சட்ட ஆலோசனையை முன்வைத்து, தமிழர்களுக்கு எதிரான இன வன்செயல்களை முன்னின்று நடாத்திவந்த பிரதான சிங்கள பேரினவாத கட்சி, ஐக்கிய தேசிய கட்சியே. இன்றும் கூட, ஒருபக்கத்தில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என போலியாக சொல்லிக்கொண்டு, மறுபக்கத்தில் அதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி சீர்குலைத்து வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம், இனப்பிரச்சினை தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் தற்பொழுது கூட்டிவரும் சர்வகட்சி கூட்டங்களிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி ஒதுங்கியிருப்பதாகும்.
ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தொடர்ச்சியாக பேரினவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தபோதும், தமிழர்களின் தலைமைகளாக ஆரம்பம் முதல் இருந்து வந்த கட்சிகளான தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, இரண்டும் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணி என்பன மட்டுமல்லாது, இன்றைய புலிகள்வரை அனைவரும் அந்த ஐக்கிய தேசிய கட்சியுடனேயே அரசியல் கூட்டு வைத்து வந்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர, இனப்பிரச்சினை தீர்வை எதிர்க்கும் வேறு சில சிங்கள பேரினவாத சக்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் செயல்படுவதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஜே.வி.பியின் போலி சோசலிச முகமூடி கிழிக்கப்பட்டு, ஜே.வி.பியின் இனவாத முகம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும். மறுபக்கத்தில் ஹெல உருமய என்ற சிங்கள இனவாத அமைப்பும் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் ஜே.வி.பி போல சொல்லில் ஒன்றும் செயலில் இன்னொன்றுமாக இல்லாமல், வெளிப்படையாகவே தமது சிங்கள, பௌத்த இனவாத கொள்கைகளை முன்வைத்து வருகின்றனர். பெரும்பாலும் பௌத்த மதகுருமார், உயர் அரசஅதிகாரிகள், நடுத்தர வர்த்தகர்கள் போன்றோரைக்கொண்ட ஒர் அமைப்பாகவே ஹெல உருமய உள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு இந்த சக்திகளை உடனடியாக சரியான வழிக்குக் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. தென்னிலங்கையில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், இனப்பிரச்சிகை;கானக்கான தீர்வு முயற்சிகளை குழப்பக்கூடிய அளவில், பேரினவாத சக்திகளின் வலு உள்ளதென்பதை யாரும் மறுக்கமுடியாது. அந்த சூழ்நிலையை மாற்றி அமைப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு முக்கியமான பொறுப்பு உண்டு. ஆனால் தூரதிஸ்டவசமாக, இலங்கை அரசாங்கத்துக்குள்ளேயும் பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் கணிசமாக உள்ளன. பேரினவாத சக்திகளின் ஆதிக்கத்தை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் கட்டுக்குள் வைக்காவிட்டால், இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்படும். கடந்தகாலத்தில் இவ்வாறு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் பாடங்களை கற்றுக்கொள்ள தவறினால், இனப்பிரச்சினை தீர்வில் ஒரு அடிதன்னும் முன்னோக்கி செல்ல முடியாது.