மன்னாரில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில்!

sri-lanka-navy.jpgமன்னார் –  முருங்கன் வீதியில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைக்கான ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன்  மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவில் 7 கடல் மைல்களுக்கான பிரதேசம் யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில்  படகுகள் மூலம் புலிகள் தாக்குதல்களை நடத்த முடியாதளவில் கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிறீன் ஓஷன் கப்பல் மூலம் காயமடைந்த பொது மக்கள் மூன்று முறை திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 40 தொன் உணவுப் பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வள்ளங்கள் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. புலிகளிடமிருந்து தப்பி கடல் மார்க்கமாக வரும் பொது மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க சிறு படகுகள் கொண்ட கற்படை உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் 77 பொது மக்கள் கடல்வழியாகத் தப்பி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *