சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பவுல் கெஸ்டெல்லா இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்றுக்காலை இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்தவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியாவுக்கான இரண்டு உதவி பிரதிநிதிகளுக்கும், வன்னி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக்காலை இடம் பெற்றுள்ளது.
வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்புத் தேடிமோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.