நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply to accu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??

    Reply
  • SUDA
    SUDA

    //இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் // வைகோ

    வை.கோ! கொந்தளிப்பை ஏற்படுத்தும் அரசியல் பிழைப்பு மட்டும்தான் உனக்குத் தெரியும். ஆரோக்கியோமான, ஆக்கபூர்வமான எந்தவொரு அரசியல் திட்டமும் உம்மிடம் கிடையாது. சில அரைவேக்காடுகள் கொந்தளித்ததன் விளைவுதான் இன்று வன்னி மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் தமிழ்நாட்டு மக்களையும் உசுப்பேத்தி கொந்தளிக்க விட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதிர்!!

    Reply
  • accu
    accu

    வைகோ சார் இந்தச் சங்கிலிப்போராட்டதில் உங்கள் எஜமானி ஜெயலலிதாவும் இருப்பாரா?

    Reply