சரண டையும் நிபந்தனைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா உட்பட இணைத்தலைமை நாடுகள் விடுத்த அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
உடனடியாகத் தோல்வியை எதிர்நோக்கியுள்ள புலிகள் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக “ஐலன்ட்’ ஆங்கில நாளேடு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறும் சரணடையும் நிபந்தனைகள் தொடர்பாக பேசுமாறும் அரசியல் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறும் கேட்டிருந்தன.
“கேலிக்கிடமானதை தவிர வேறொன்றும் இதில் இல்லை’ நிபந்தனையற்ற விதத்தில் ஆயுதங்களை சரணடையச் செய்வதைவிட அதற்கு குறைவானதாக ஒன்றும் இல்லை, என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்துடன், இணைத்தலைமைகளின் அறிக்கையானது புலிகளை காப்பாற்றும் வெளிப்படைத் தன்மையான முயற்சி என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், புலிகளுக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியான பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆயுதப் படையினர் புலிகளை ஒழித்த பின்னர் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அரசியல் கட்சியாக புலிகள் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமென்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.