வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதம் தாங்கிய பாதாளவுலகக் கோஷ்டியினர் அம்மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பொலிஸாருக்குக் தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார். குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்கள் அக்கோஷ்டியினரை இனங்கண்டு கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றன. அத்துடன் தேர்தல் தினத்தில் வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றை அடக்குவதற்கு மேலதிகமான படையினரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனவரி 19 ஆம் திகதி இரவு புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைக்கு முன்னர் எந்தவொரு பாரிய தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லை. இதுவரையில் இடம் பெற்ற தேர்தல் வன்முறைகளில் புத்தளத்தில் இடம்பெற்ற தாக்குதலே மிகப்பெரியது இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் அத்துடன் இத்தாக்குதலுக்கு பாதாள உலகக் கோஷ்டியினரே பயன்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் காயமடைந்த ஐ.தே.க. ஆதரவாளர் ஒருவரின் காயத்திற்கு 32 தையல்கள் போடப்பட்டுள்ளன என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவும் இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் பாயிஸின் வாக்கு மூலத்தை பெற முடியாதுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சாந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொலிஸ் தேர்தல் தலைமைச் செயலகத்தின் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண, வடமேல் மற்றும் மத்திய மாகாணத் தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறும் எனவும் அதற்காக 20 ஆயிரம் பொலிஸ், 10 ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு படை என்பன பரந்துபட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.