புலி களின் பிடியிலிருந்து தப்பி வரும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்தும் வடக்கை முழுமையாக மீட்டெடுத்த பின்னர் அப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மேனனை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு மிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தே இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. அதே போல இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கியதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குறித்தும் அதன் பின்னர் வட பகுதியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக பேச்சு நடத்தியதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.
பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபட்டு வருபவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவது குறித்து இரு வரும் ஆராய்ந்துள்ளதோடு, வட பகுதி மக்களின் வாழ் க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்க உத் தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை இந்தியா திரும்பினார்.