எதிர்க்கட்சிக்கு பிரசாரம் செய்ய தொனிப்பொருள் எதுவும் இல்லாத நிலையிலேயே “சிரச’ தாக்குதல், லசந்த படுகொலை – அமைச்சர் ராஜித சேனாரட்ன

stop-terr-media.jpg
கிளிநொச்சியை அரசு வெற்றிகொண்டபின் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்துக்கு எதுவுமில்லாத நிலையிலேயே சிரச மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் லசந்தவும் கொல்லப்பட்டார். அரசுக்கு எவ்வித இலாபமும் இல்லாத இச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப் படுவார்களென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்; “அரசாங்கம் கிளிநொச்சியை வெற்றிகொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சிரச ஊடகம் மற்றும் சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த மீதான தாக்குதல் தொடர்பில் அரசு மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. அரசு படிப்படியாக வெற்றி ஈட்டி வருகின்ற நிலையில் இதனை சகிக்க முடியாமலே எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். சிரச மற்றும் லசந்த மீதான தாக்குதல்தாரிகளை அரசாங்கம் நீதியின் முன்நிறுத்தி உண்மையை தெரியப்படுத்தும். இவை தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, லசந்தவின் நெருங்கிய நண்பர். லசந்த தனது திருமணத்துக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி வரமுடியாது என தெரிவித்ததுடன் அவரது பாரியார் சகிதம் விருந்துக்கு வருமாறு லசந்தவை அழைத்துள்ளார். இதேபோல் லசந்த நோய்வாய்ப்பட்ட சமயம் ஜனாதிபதி தனது தனிப்பட்ட வைத்தியரை அனுப்பி சிகிச்சையளித்துள்ளார். லசந்தவுடன் ஜனாதிபதி இணைந்து பணியாற்றியுள்ளார். இவ்வாறு லசந்தவுக்கும் ஜனாதிபதிக்கும் நெருக்கமான உறவு இருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இவ்வாறு வீணான குற்றங்களை சுமத்தி புலிகளுக்கு சக்தியளிக்க வேண்டாம். ரணில் விக்கிரமசிங்க இருக்கின்ற சமயமே பிரேமதாஸ கொலை செய்யப்பட்டார். புலிகள் தோல்வியில் இருக்கும் சமயம் சதி வேலைகளில் ஈடுபடுவர். மகேஸ்வரன் மீதான தாக்குதல் தொடர்பிலும் அரசு மீது பழிபோடப்பட்டது. அமைச்சரான நான் ஜனாதிபதியை சந்திப்பதை விட அதிகமாக மகேஸ்வரன் சந்திப்பார். இதனை நான் மகேஸ்வரனிடமே கேட்டுள்ளேன். கிளிநொச்சிக்கு பின்னர் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையிருந்தது. கடந்த ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த சமயம் சிரச தாக்கப்பட்டது. அதுபோல் 8 ஆம் திகதி அரசு மீது நம்பிக்கையில்லா விவாதம் நடைபெறவிருந்த சமயம் லசந்த சொல்லப்பட்டார்.

இவை அரசின் இலாபத்துக்காக இடம்பெற்றதா அல்லது வேறுயாருடைதோ இலாபத்துக்காக இடம்பெற்றதா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலால் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த இலாபமும் இல்லை. விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். லசந்த தாக்குதல் தொடர்பில் மங்கள சமரவீர மற்றும் சந்திரிகா ஆகியோர் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போதே ரிச்சர்ட் டி சொய்ஸா கொலை இடம்பெற்றது. அப்போது ரணில் விக்கிரம சிங்க அரசிலிருந்தார். சந்திரிகா ஆட்சியில் அவருக்கு நெருக்கமாகவிருந்த மங்கள சமரவீர அமைச்சராக விருந்த போதே லசந்த இரு முறை தாக்கப்பட்டார். ரோகண குமார படுகொலை செய்யப்பட்டார். இவர்களின் தலைமையிலேயே இவை இடம்பெற்றன. மங்கள சமரவீரவே ஊடக மாபியாவென தெரிவித்த நிலையில் இப்போது ஊடக சுதந்திரம் இல்லையென கூறுகின்றார். வெட்கமில்லாது இப்போது கதைக்கின்றனர். தோல்வியுற்று இறுதிக் கட்டத்திலுள்ள புலிகளுக்காக இவர்கள் சதி செய்கின்றனர்’.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *