இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15) தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15) காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.
இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களது விபரம் :- பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர், சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர். கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்.. கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.