“சண்டே லீடர்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. தகவல், ஊடகத்துறை அமைச்சர்களான அனுரபிரிய தர்ஷணயாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இக் கண்டனத்தை நேற்று வெளியிட்டனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற போது, இச் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் மேலும் குறிப்பிடுகையில், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் நல்லுறவைப் பேணி வந்தார். அவர், அவரது திருமண வைபவத்திற்கு அழைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஜனாதிபதியே பிரதானமானவர். அரசாங்கத்திற்கும், அவருக்குமிடையில் தனிப்பட்ட முறையில் எதுவிதமான பிரச்சினையுமே கிடையாது. இப்படுகொலைச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை தேடிக் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.