அரசிலிருந்து விலகியபின் எதிரியைப் போன்று தன்னைப் பார்ப்பதாக கரு ஜயசூரிய கவலை

sl-parlimant.jpgஅரசிலிருந்து விலகிய பின்னர் அரசிலுள்ளவர்கள் தன்னை ஒரு எதிரியைப் போல் கருதுவதாக விசனம் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய, அரசிலிருக்கும் போது வீரர்களைப் போலும் அரசை விட்டு விலகியவுடன் பகைவர்களைப் போலும் கருதும் கொள்கையொன்று அரசிடம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். சிரச ஊடகம் மீதான தாக்குதல் திட்டத்தை பொரளையிலுள்ள ஒரு வீட்டுத் தொகுதியில் வைத்து ஐ.தே.க.எம்.பி.க்களான கரு ஜயசூரியவும் ரவிகருணா நாயக்கவும் பாதாளக் குழுவினருடன் இணைந்து உருவாக்கியதாக செவ்வாய்க்கிழமை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக புதன்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கரு ஜயசூரிய மேலும் கூறியதாவது;

சிரச ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் என்னையும் ரவி எம்.பி.யையும் தொடர்புபடுத்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே குற்றஞ்சாட்டினார். நாங்கள் பாதாளக் குழுவினருடன் இணைந்து பொரளையில் வைத்து சதித்திட்டம் தீட்டியதாக கூறினார். சுகவீனமடைந்திருந்த நேசன் பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரி கிஷாந்த குரேவை பொரளையிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றிலுள்ள அவரின் வீட்டுக்கு சென்று நான் பார்வையிட்டேன். அப்போது அங்கு ரவி எம்.பி.யும் ஏற்கனவே வந்திருந்தார்.

நாங்கள் இருவரும் அங்கு எதிர்பாராத விதமாகவே சந்தித்தோம். அத்துடன், நான் பாதாளக் குழுவினருடன் தொடர்பு வைத்திருப்பவனும் அல்ல. அதேவேளை, யார் யாருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பென்பது எனக்குத் தெரியும். ஒரு நோயாளியை பார்க்கச் செல்வதற்குக் கூட இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு உரிமையில்லையா? நான் அந்த வீட்டுக்கு சென்று வந்த பின்னர் அந்த வீட்டுக்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடமாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எம்மை பின் தொடர்கின்றனர். இது ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம். நான் அரசிலிருந்து விலகிய பின்னர் என்னை எதிரியைப் போல் பார்க்கின்றனர். அரசிலிருக்கும் போது வீரர்களாக போற்றப்படுபவர்கள் அரசிலிருந்து விலகியவுடன் பகைவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதை ஒரு கொள்கையாகவே அரசு வைத்துள்ளது.

இது அரசுக்கு குறுகிய கால நன்மைகளைக் கொடுக்கலாம். ஆனால், நீண்டகால பலன் விரோதமாகவே அமையும். மக்கள் இந்த நாட்டில் நல்லாட்சியையே எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல் மிகுந்த ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. நானும் 7 வருடங்கள் இராணுவ சீருடையை அணிந்தவன். எமக்கும் இந்த நாட்டின் மீது பற்றுள்ளது.பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதில் எமக்கு மாறுபட்ட கருத்தில்லை. இராணுவ வெற்றிகளுக்கு நாம் தலை வணங்குகிறோம். சிரச மீதான தாக்குதலை நான் அருவருப்புடனேயே பார்க்கின்றேன். அதேபோன்று, எதிர்க்கட்சியினரை பின் தொடர்தல், கண்காணித்தல், அச்சுறுத்தல் போன்ற விடயங்களையும் வெறுக்கின்றேன். எனவே, இவை தொடர்பில் அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *