‘வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேசத்தை கட்டியெழுப்பும் நிதி பயன்படுத்தப்படும்’

ranjith-shiyambalapitiya.jpgவிடு தலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அம்மக்களுடனான சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதற்காகத் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உபயோகப்படுத்தப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே வேளை, தற்போதுள்ள சகல சவால்களுக்குள்ளும் இவ்வருடத்திற்கான அரச வருமானமாக 850 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கான வரி அறவீட்டுச் சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நூற்றுக்கு ஒரு வீதமாக அறவிடப்படவுள்ளதுடன் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட புரள்வுக்கே இவ்வரி அறவிடப்படுவதுடன் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து இவ்வரி அறவிடப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி வரிச் சட்டமூலம் தொடர்பாக மேலும் விளக்கிய அமைச்சர்:-

இலங்கைக்கான அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சகல ஏற்றுமதிகளுக்கும் இவ்வரி விலக்குச் செய்யப்படவுள்ளது. அத்துடன் சகல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கும் இவ்வரி விலக்குச் சலுகை வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது விசேட வர்த்தகப் பொருட்கள் வரி முறைமை நடைமுறையிலுள்ளது.

இந்த வரிமுறைமையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் இவ்வரி விலக்கு உரித்துடையது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கும் இவ்வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கிணங்க, விவசாயிகளுக்கான உரவகை, எரிபொருள், சமையல் எரிவாயு, சகல மருந்துப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் இவ்வரி விலக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அன்னிய செலாவணியைப் பெற்றுத்தரும் சேவைகளுக்கும் இவ்வரி விலக்கு வழங்கப்படும்.  நாட்டிலுள்ள வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யும் பங்களிப்பினைக் கருத்திற் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கும் இவ்வரிவிலக்கு உரித்துடையதாகிறது. இலங்கையின். தேயிலைத்துறை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளிலும் இவ்வரி விலக்கு உட்படுகிறது.

பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயுள்ள வடக்கின் ரயில்சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் வடக்கிற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் யாழ்.தேவி வடக்கிற்குச் செல்லும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *