சிரச- சக்தி ஊடக வலையமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி தாக்குதல் நடைபெற்றதை அறிந்தவுடன் பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி உரிய ஆலோசனைகளை வழங்கியதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தத் தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதற்கு முன்னரும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கும், கிளிநொச்சி வெற்றி தொடர்பான கவனத்தை திசை திருப்பவுமே இத்தகைய தாக்குதல் நடத்தப்படுகின்றன என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச, சிரச ஊடக நிலையத்தின் மீதான தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். ஆனையிறவு மீட்கப்பட்டது தொடர்பாக பேசப்படுகையிலே சிரச ஊடகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராக ஈட்டப்படும் வெற்றிகள் குறித்து பேசப்படுவதை திசைதிருப்புவதே தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளின் நோக்கமாக உள்ளது என்றார்.
அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கூறியதாவது:- இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கீழ்த்தரமான செயலாகும். இதனுடன் தொடர்புடையவர் யார் என்பது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இந்தத்தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இந்தத் தாக்குதலை சு. க. கடுமையாக கண்டிப்பதாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.