மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P) என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”. கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார் வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.
எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.
நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.
இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.
indiani
இலங்கையில் வட-கிழக்குப்பிரதேசம் தமிழர் தாயகமாகவும் அம்பாறை முஸ்லிம்களின் பிரதேசமாகவும் மலையகம் மலைகத் தமிழர்களின் பிரதேசமாகவும் ஏற்றுக் கொள்ளாமல் இனிமேல் இலங்கையில் சமாதானம் ஏற்பட முடியாது. இதற்கான அறிகுறிகளை தற்போது உருவான கிளிநொச்சி மீட்பும் அதன் பின்னர் நடைபெற்ற சிங்கள பெளத்த வெற்றிக்களிப்பும் எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் அடுத்த மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய ரவுனை கைப்பற்றிய களிப்பு என்னவோ இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான வெற்றியாகவே இலங்கை அரசும் இராணுவமும் கருதுகிறது. அதைவிட கடந்தமாதம் இராணுவ அதிகாரியின் ‘சிங்கள நாடு தமிழர்கள் அடங்கி வாழவேண்டும்’ என்ற கருத்துக்கள் இவற்றையே எடுத்துக் காட்டுகிறது. இப்படியான வெற்றிக்கான – தோல்விக்கான நிலைமைகளை உருவாக்குவதில் அல்லது மட்டமான அரசியலற்ற செயல்களைத் தூண்ட விடுதலைப்புலிகளே காரணமாக இருந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்த இயக்கத்தவர்களை கொலை செய்வதிலும் மக்கட்காக எழுதியவர்களை கொலை செய்வதிலும் தொடங்கிய நாட்டாண்மை தனிமனித எதேச்சாதிகாரப் போக்கை தற்போது இலங்கை இனவாதிகள் புலிகளிடமிருந்து தான் படித்துள்ளனர். அதையே அவர்கள் தமிழர்க்கும் இது பின்னர் முஸ்லீம்களுக்கும பிரயோகிக்கின்றனர்
தமிழர்க்காக போராட வந்த புலிகள் தமது தவறுகளில் இருந்தாவது தம்மை திருத்தி சரியான பாதையில் சிங்கள இனவாதிகளும் யோசித்து நடக்கும்படியான செயற்ப்பட்டடிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை புலிகளின் இந்த தோல்வியில் இலங்கை அரசுக்கு எதிராக போராட இன்னுமோர் அமைப்பு தயாராகும் நிலையை எம்மால் அவதானிக்க்க கூடியதாக உள்ளது. இந்த புதிய நிலையை இவ்வளவு காலமும் புலிகளே தமது கொலை வெறியினால் அடக்கி வைத்திருந்தனர்.
இந்த அரசும் சிங்கள இராணுவமும் தமிழர்க்கு இனப்பிரச்சினை இல்லை, இனப்பிரச்சினைக்கு தீர்வு தேவையில்லை, இது புலிகளின் பயங்கரவாதம் என்று முடித்து விடலாம் என்ற கனவு காண்பதாகவே நான் கருதுகிறேன். புலிகள் செய்தது பயங்கரவாதமே. காரணம் புலிகள் தமக்கும் தமிழர்க்கும் கிடைத்த பல சந்தர்ப்பங்களை கைநழுவ விட்டதும் இந்திய அரசுடன் மோதியதும் தமது சுய நலங்களுக்காவே அன்றி தமிழர்க்காக அல்ல. இது வெளிப்படையான உண்மை. ஆனால் தமிழர்க்காக தமிழர் தாயகத்திற்காக போராட ஆரம்பித்த பலர் புலிகளின் அழிவில் இதை தொடர முனைந்து விட்டனர்.
மாற்றுகருத்துதோழர்
“உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார் வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். ”
1915ல் தென்னிலங்கையில் நடந்த முஸ்லிம் இனவழிப்பு 1956லிருந்து இன்றுவரையான தமிழின அழிப்பு மற்றும் வன்முறைகள் இலங்கைதீவில் நடக்காது வேறு எங்கு நடந்தது? தமிழினஅழிப்பு மலையகமக்களின் குடியரிமைபறிப்பு மனிதவுரிமை மீறலுக்குள் அடங்காத இல்லை தமிழர்கள் மனிதர்கள் இல்லையென்று சொல்லவருகிறீர்களா. அஸ்ரபினாலும் அவரது அடியொற்றி அரசியல் நடத்தும் அதாவுல்லாவாக்களினாலும் ஜிகாத் ஓசாமா.. எனும் ஆயுதகுழுக்கள் மற்றும் முஸ்லிம்ஊர்காவல்படையினர் மூலமாக இன்றுவரை கிழக்க மாகணத்தில் தமிழர்களை இனவழிப்பு செய்யும் செயல் மனிதவுரிமை மீறலாக தெரியவில்லையா? ஏதோ சிங்களவர்களில் ஜாதிக ஹெல உறுமயதான் இனவாதிகள் சுதந்திரகட்சி ஜதேக ஜேவிபி… எல்லாம் சமதர்மவாதிகள் எனவும் முஸ்லிம்கள் மீது புரியபடும் மனிதவுரிமைமீறல்தான் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய மனிதவுரிமை மீறல் என காட்ட முற்படும் கருத்துபுனைவு ஜாதிக ஹெல உறுமயாவின் இனவாதத்திற்கு இணையான முஸ்லிம் அடிப்படைவாதமாகும்.