திட்ட மிட்டபடி சகல பஸ் கட்டணங்களும் இன்று முதல் (6) குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ளது. பஸ் கட்டண அதிகரிப்பை இடை நிறுத்துமாறு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ள போதும் திட்டமிட்டபடி கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுத் தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.
டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 4.3 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் உள்ள 780 மார்க்கங்களில் நிலவும் பஸ் கட்டண முரண்பாடும் சீர்செய்யப்படுவதாக ஆணைக்குழு கூறியது. இதன் பிரகாரம், 231 மார்க்கங்களில் பஸ் கட்டணம் ஒரு ரூபா, முதல் 22 ரூபா வரை குறைக்கப்பட உள்ளதோடு 237 மார்க்கங்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் கட்டணங்கள் குறைக்காத பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டணம் குறைக்காத பஸ்கள் தொடர்பாக முறையிடுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டணக் குறைப்பின்படி ஆரம்பக் கட்டணத்திலும் ஒன்பது ரூபா கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. 12 ரூபா முதல் 33 ரூபா வரையான கட்டண தொகைகள் ஒரு ரூபாவினாலும் 35 ருபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 61 முதல் 96 ரூபாவரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் 98 ரூபா முதல் 118 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 120 ரூபா முதல் 142 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் குறைக்கப்படுகின்றன. அரைச் சொகுசு, சொகுசு பஸ் கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படுகின்றன. பஸ் கட்டணங்கள் கடந்த டிசம்பர் மாதத்திலும் குறைக்கப்பட்டது தெரிந்ததே.