சர்வகட்சி மாநாட்டை உடனடியாக கலைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் செயலாளருமான விஜித ஹேரத், சர்வகட்சி மாநாடு தயாரித்துள்ள தீர்வுத் திட்டம் பிரிவினை வாதம் பலமடையவே வாய்ப்பளிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இனமக்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு தேட முடியுமெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரிய விதத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் ஆயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்களைச் கொன்று குவித்து வரும் அமெரிக்காவுக்கு இலங்கையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கேட்பதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் ?ச்பாதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
“இன்றைய அரசு அதிகாரத்துக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்வதிலேயே ஆர்வங்காட்டியது. ஜெனீவா பேச்சுவார்த்தையின் போதும் போர் நிறுத்தத்தை பாதுகாப்பதிலேயே ஆர்வம் காட்டியது. தென்னிலங்கை மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டது. நாட்டு மக்களின் இந்த வெற்றியை அரசாங்கமும் அரசில் உள்ள சில தலைவர்களும் தம்மால் ஈட்டப்பட்ட வெற்றிபோல் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். நாட்டின் பொருளாதார பின்னடைவை மூடிமறைக்கவும் இதனைப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. நாட்டின் பொருளாதார வளங்களை இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தாரை வார்க்கும் ஒரு முயற்சியிலும் அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பது சர்வகட்சி மாநாடல்ல. அதுவெறும் அரசாங்கக் கட்சிகளின் மாநாடாகும். அது எடுக்கும் தீர்வு முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் ஒரு போதும் அங்கீகாரமளிக்கப் போவதில்லை. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்படப் போவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு தீர்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டால் அது பிரிவினைவாதத்தை வலுவடையச் செய்யும் ஒரு திட்டமாகவே காணமுடியும். இந்தியாவில் இருக்கும் பிராந்திய அரசுகளுக்கு அப்பால் சென்ற அதிகாரத் தீர்வாகவே அமைய முடியும். அப்படி வந்தால் தற்போதைய பயங்கரவாத செயற்பாடுகளைவிடவும் மோசமான விளைவுகளையே நாடு எதிர்கொள்ள நேரிடலாம். திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்குவது சர்வகட்சி மாநாடாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இன்று தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றது. பிரதான கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிட்டன. அரசாங்க சார்புக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. எனவே சர்வகட்சி மாநாட்டை உடன் கலைக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சமமாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமநீதி கிட்ட வேண்டும். அதனைச் செய்யத் தவறியதனால் தான் இந்தளவு பேரழிவை நாடு சந்திக்க நேரிட்டது. 1960 களில் ஐ.நா. தலையிட்டு பாலஸ்தீனத்தை வேறுபடுத்தியது. ஐ.நா.வின் சமாதானத் தீர்வுத் திட்டம் நிறைவேறியதா? அதன் விளைவு, இன்று பாலஸ்தீனம் பிணக்காடாக மாறியுள்ளது. அத்தகையதொரு நிலைக்கு இலங்கையை இனியும் தள்ளிவிடமுடியாது. தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் இயக்கத்தை அமைத்து ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்து சமூகங்களும் ஒன்றுபடவேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச் சாளர் கோர்டன்கிட் இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருக்கிறாரே என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த விஜிதஹேரத் கூறியதாவது; “சர்வதேச பயங்கரவாதத்துக்கு ஊக்கமளித்த அமெரிக்கா எமக்கு யோசனை கூற முற்படுகின்றது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் அனைத்து உதவிகளையும் செய்து பாலஸ்தீனத்தில் குண்டுகளைக் கொட்டி அப்பாவி மக்களை கொன்றொழிப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர், அப்பாவி பாலஸ்தீன மக்கள் 400க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஈராக்கை பிணக்காடாக மாற்றிய பெருமை கூட அமெரிக்காவையே சாரும். மிலேச்சத்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா எந்த யோக்கியதையுடன் இலங்கையை சமாதானப் பேச்சை ஆரம்பிக்குமாறு கேட்க முடியும்? அமெரிக்கா முதலில் ஒசாமா பின்லேடனுடனும் அல் ஹைடா அமைப்புடனும் சமாதானப் பேச்சுக்களை நடத்தட்டும். அதன் பின்னர் எமக்கு ஆலோசனை கூறட்டும்’ எனக் குறிப்பிட்டார்.