முல்லைத்தீவிலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் நேற்று படையினர் வசமானது. முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறி வரும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் இந்தப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. ஒட்டுசுட்டானில் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணி நேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களின் போது இருபதுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், புலிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாங்குளம் – முல்லைத்தீவு ஏ-34 பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களை நேரடியாக சென்றடைய முடியும். இதனை சாதகமாக பயன்படுத்தி புலிகள் தமது பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ள படையினர் புலிகள் தமது நிர்வாக மற்றும் களஞ்சிய வசதிகளை முன்னெடுப்பதற்கு இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக திகழ்ந்துள்ளதென கூறியுள்ளனர்.
இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தமது முதலாவது நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான நெடுங்கேணியை கைப்பற்றினர். அங்கிருந்து வட பகுதியின் ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கையை மேற்கொண்டு நேற்று நண்பகல் ஒட்டுசுட்டான் நகருக்குள் பிரவேசித்துள்ளனர். இராணுவத்தின் 14வது சிங்க ரெஜிமண்ட் பிரிவினர் மேஜர் யு. எஸ். என். கே. பெரேராவின் வழிகாட்டலிலும், 642வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் பி. ரி. ஹத்னாகொடை தலைமையிலான படையினரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்த மோதல்களின் போது படையினர் புலிகள் பயன்படுத்தி வந்த புதுகுடியிருப்புக்குச் செல்லும் வீதியையும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் துண்டித்துள்ளனர். இதேவேளை புளியங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுசுட்டானை கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு உதவியாக விமானப் படையின் விமானங்களும் நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
தற்பொழுது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆனையிறவையும், முல்லைத்தீவையும் நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.