இந்தியக் கடல் பகுதியில் உலவும் படகுகளைக் கண்காணிக்க சிறிய அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை ஏவுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கொன்றில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறைச் செயலர் சர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தியக் கடல் எல்லையில் உலவும் சிறிய மீன்பிடி படகுகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இது பெரிதும் உதவும் என அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து துறைமுகங்களிலும் கமாண்டோ படைகளை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.