மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

IDP_Camp_Injuredநினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

IDP_Camp_Injured_Manபிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும். தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

Speech from Vanni 27/11/2010
:http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Comments

 • மதியழகன்
  மதியழகன்

  இப்போ ஜெயபலான வசூலைப் போடுகிறார்…..இவளவு நாளும் மாவீரர்களைக் கொச்சைப்படுத்தி எழுதிய நீங்கள் இப்போ நல்லாதான் ஓதுறீங்க. சரி சரி வசூலைப் போடுங்க…..

  Reply
 • santhanam
  santhanam

  1980 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகின் முன்னணித் தற்கொலைக் குண்டுதாரிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே இருந்துள்ளனர் என்று அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானி Robert Pape தெரிவித்து உள்ளார்.

  அவர் அண்மையில் “Cutting the Fuse: Moving Beyond the War on Terror” என்கிற தலையங்கத்தில் Georgetown University இல் வழங்கிய ஆய்வுரை ஒன்றின்போதே இவ்வாறு கூறி உள்ளார்.

  2000 ஆம் ஆண்டில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் ஒரு சிறிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலைக் கூட நடத்தி இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  மதியழகன் கூலிக்கு மாரடிக்கின்றவர்கள் போல் நுனிப்புல் மேய்ந்தவிட்டு வாடகைக்கு உணர்ச்சி வசப்படக்கூடாது. அரசியல் தலைமைக்கும் மாவீரருக்கும் வேறுபாடு தெரியாமல் அரசியல் தலைமைக்கு ஜால்ரா அடித்து சிஞ்சா போட்ட பட்டியல் தமிழகத்தில் இருந்து ஐரோப்பாவரை நீண்டு உள்ளது. ஜால்ராவும் சிஞ்சாவும் நிதானமாகப் போடவேண்டும். சுருதி தப்பினால் எல்லாம் அம்பலாமாகப் போய்விடும்.

  //2000 ஆம் ஆண்டில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் ஒரு சிறிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலைக் கூட நடத்தி இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.// சந்தானம்
  ஹிஸ்புல்லா தற்கொலைத் தாக்குதலை நடத்தாமல் இருந்திருக்கலாம் ஆனால் ஈராக் அப்கானிஸ்தான் பாகிஸ்தானில் தொடர்ந்தும் தறகொலைத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றனவே.

  Reply
 • palli
  palli

  //1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
  1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008 ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.//
  மாவீரரை மதிக்க வேண்டும், உடல் ஏலாமல் போனவர்களுக்கு உதவ வேண்டும் இது மறுக்கமுடியாத உன்மையும் தேவையும் கூட, ஆனால் மாவீரர் ஆக்கியவர்களையும் அப்படி வணங்க வேண்டும் என்பதில் நியாயம் இல்லை; அதோடு மேலே குறிப்பிட்ட கணக்கு புலி மட்டுமா? அல்லது அனைத்து அமைப்புகளுமா?? அப்பாப்பிள்ளை கூட மாவீரர்தானே; அவரும் கொண்டு அடிபட்டுதானே செத்தார், பாரிஸ்சில் இறந்த புலி மாவீரர், வன்னியில் கொன்ற ரெலோ துரோகி; முதலில் ஒரு பத்து பேர் உங்காந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ யார் மாவீரன், யார் மாவீரர், யார் யார் யாரென??
  மாவீரரை மதிப்போம் வணங்குவோம் பாகுபாடி இன்றி; யாவையும் இழந்த வணக்கத்துடன் பல்லி;

  Reply
 • Nathan
  Nathan

  ஆக்கபூர்வமான கருத்து

  மண்ணுக்கும் மக்களுக்குமாய் மரணித்த ஓவ்வெருவரும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை எப்படி அனுட்டிக்க வேண்டும் என்பது தனிப்பட்டவர்களின் விருப்பம். மாவீரர் நாள் மிகவும் குளிரான நவம்பர் மாதத்தில் வருவதாலும் பல வயதானவர்கள் வலுவிழந்தோர் பங்கு பெற்றுவதாலும் அவை ஒரு மண்டபத்தில் நடத்தவேண்டிய தேவை அமைப்பாளர்களுக்குண்டு. மற்றும் அண்ணளவாக 30,000– 40,000 மககள் கலந்துகொள்ளும் போது பாதுகாப்பு (Health & Safety) உம் கவனத்திற் கொள்ள வேண்டி உள்ளது.

  மற்றும்படி எக்காலத்திலும் நுழைவுக்கட்டணம் அறவிடப்பட்டது கிடையாது. தவறான கருத்து. ஆகவே திருத்திக்கொள்ளவும். மற்றும் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதும் வாங்காததும் அவரவரின் விருப்பம்.

  முன்னாள் போரளிகளின் பராமரிப்பு புனர்வாழ்வுக்கான பொறுப்பு மறுக்கழுடியாதளவிற்கு புலம்பெயர் மக்களிடத்தே உள்ளது. நிதி கேகரித்தவர்களை கண்டுபிடித்து ஒரு அமைப்பிற்குள் உள்வாங்குவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கும்.

  ஆனால் பல தயாள மனமுள்ளவர்கள் இடதுகைக்கும் தெரியாமல் முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கெண்டும் தான் இருக்கிறார்கள். அமைப்பு ரீதியில் இவர்களுககு உதவுவதும் அந்த உதவியை அவர்கள் பெறுவதும் இலங்கையில் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டு அவர்களை ஆபத்தில் தள்ளவும் வாய்ப்புண்டு

  Reply
 • santhanam
  santhanam

  இறந்த போராளிகள் இயங்கியல் கோட்பாட்டுடன் போராடி மடிந்தவர்கள் ஆனால் தலைமைத்துவங்கள் அந்த இளைய உயிர்களை அவர்களது அறியாமை தலைமைவிசுவாசம் என்ற கோட்பாடுடன் பயன்படுபொருளாக பாவித்தார்கள். தலைமை தங்கள் கோட்பாட்டின் விதிகளை மீறி சிங்களதேசத்துடன் அன்னியசக்தினளுடனும் தங்கள் பாதுகாப்பு கருதி தேன்நிலவில் உலாவந்ததை நீங்கள் அவதானிக்கவில்லையா. தமக்கும் மக்களிற்கும் பாரியஇடைவெளி போரளிக்கும் தலைமைக்கும் இடைவெளி இதை ஏன் கையாண்டார்கள்??

  Reply
 • uthayan
  uthayan

  இன்றைய உண்மையை முன்னைனாள் போராளிகளின் மனசுமையை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவாக கூறிஉள்ளீர்கள், நன்றி அண்ணா. இதில் உள்ளது ஒற்றுமை மனிதாபிமானத்தில் ஒன்றிணைவோம் தமிழ்மக்களே…
  கார்த்திகை 27 வன்னியில் இருந்து முன்னைநாள் போராளிகள் கலந்து கொள்ளும் விசேட ஒலிபரப்பு எமது இணையத்தில் ஒலிபரப்படஉள்ளது. நன்றி NERDO.LK

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  வென்றவனுக்கும்,வீழ்ந்தாலும் போராடுபவனுக்கே மாவீரர் தினம் வேண்டும்.வியாபாரிகளுக்கு அல்ல.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  தமது வாழ்வை அர்ப்பணிப்பு செய்த போராளிகளின் நினைவுக்கு முன்னால் தாழ்ந்து போகட்டும் பிளவுகளும் பிரிவுகளும்!!!

  எத்தனையோ வகைவகையான ஆயுதங்களை வாங்க பணம் அள்ளி வீசிய சமூகம் ஏன் மூடிக்கிடக்கிறது? ஆயுதம் வாங்க நாளை பிறக்கும் தமிழீழம் என்று கடன் கேட்டு வட்டியுடன் மீளத் தருவோம் என்று வீடுவீடாய் போனவர்கள் இன்று ஏன் வாய்திறக்கிறார்கள் இல்லை? குறைந்தது தாம் செய்யாவிட்டாலும் சேர்த்த பணம் எங்கே என்ன நடந்தது அந்த பணத்திற்க்கு?

  புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் கிடக்கும் சொத்துக்கள் ஏன் இந்த முன்னாள் புலி உறுப்பினர்களை அந்த புலி வீரர்களை நீங்கள் போற்றிய வாயால் பாதுகாக்க வேண்டாமா? உங்கள் பணத்தில் வாங்கிய அவர்கள் பெற்ற கைதுகள் அவர்களின் மரணங்கள் குடும்பத்தின் இழப்புக்களுக்கு இன்று உங்கள் பணங்கள் தேவைப்படுகின்றது.

  முடங்கிக்கிடக்கும் பணங்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை சொல்லியாவது இந்த ஏக்கம் கொண்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் உங்கள் மீது இருந்த நம்பிக்கை பொய் என்றாவது சொல்லுங்கள். வியாபாரம் தான் பண்ணிவிட்டோம் சுயநலம்தான் எமது குறிக்கோளாக இருந்தது போராட்டம் எமக்கு சுத்தமாத்து என்றாவது சொல்லி விடுங்கள்.

  இராணுவ முகாம்களில் அடைபட்டுள்ள இந்த முன்னாள் புலி வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமாக அவர்களது வாழ்வில் ஒளியூட்ட உங்கள் சேவைகள்? எங்கே? தரப்படுமா? பதிலளியுங்கள்?

  போராடிய பேராளிகள் என்ன? ஆயுதங்களா தூக்கி எறிய? போராடிய பெண்பிள்ளைகள் தமது அடையாளங்களை கெளரவத்தை இழந்து சமூகத்திற்க்கு சேவையாற்ற விழைந்த தமக்கு இக்கதி என்று உள்ள நிலையை மாற்ற புலிகளின் பணங்கள் சொத்துக்கள் முழுவதுமாக பயன்படுத்தப்படல் வேண்டும்.

  புலிகளின் சொத்துக்கள் பணங்களை தம்வசம் வைத்திருந்து கொண்டு மறைவாக இருக்கும் அமைப்புக்களும் இன்று வரையில் நாட்டில் உள்ள முன்னாள் புலிப்போராளிகளுக்காக சேவையாற்றுபவர்களிடம் கையளிக்க வேண்டும். முன்னாள் புலிப்போராளிகளினால் நாட்டில் ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்புகளினூடாக இந்த சேவையினை ஜரோப்பாவிலிருந்தும் நாட்டினுள் இருந்தும் செய்து வருகிறார்கள் இந்த சேவையாளர்கள் தம்முடன் போராடிய புலிப்போராளிகளின் உயிரை அவர்களது குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கும் இந்த பணிக்கு இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.

  உங்கள் பலரிடம் உள்ள பணங்களும் சொத்துக்களும் உங்களடையதல்ல புலிவீரர்களுடையதே களம் கண்ட அந்த போராளிகளினடையதே அவர்களுக்காகவே இந்த பணங்கள் சேர்க்கப்பட்டது அதை அவர்களிடமே கையளியுங்கள். பொறுப்புடன் பணியாற்றிய நிதி சேகரித்த முன்னாள் புலி இயக்க சேவையாளர்கள் இந்த கருத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  போரை முகம் கொண்டு துணிந்து எழுந்து போராடியவர்களின் மனவேகத்திற்கு மதிப்பளித்து அந்த ஆழுமை கொண்ட பரம்பரையினரை எழ எழுந்திட வாழ வாழ்ந்திட உதவி செய்ய வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமையாகும்.

  Reply
 • மேளம்
  மேளம்

  “ஆனால் பல தயாள மனமுள்ளவர்கள் இடதுகைக்கும் தெரியாமல் முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அமைப்பு ரீதியில் இவர்களுக்கு உதவுவதும் அந்த உதவியை அவர்கள் பெறுவதும் இலங்கையில் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டு அவர்களை ஆபத்தில் தள்ளவும் வாய்ப்புண்டடு” நந்தன்

  சரியாகவே சொல்லியுள்ளார் நந்தன். கடந்தமாதம் தொடக்கம் மேளத்துக்குத் தெரிந்த ஒருத்தர்…. புலிகளின் கேணல் தரத்தில் இருந்து முள்ளிவாய்க்காலில் இறந்த ஒருத்தரது குடும்பத்துக்கு (மனைவி+ இரண்டு வயது குழந்தை) மாதாமாதம் வங்கி மூலம் பணம் கொடுப்பதற்கான ஒழுங்கு செய்துள்ளார். அவரோ இந்த திருவிழாக்களுக்குப் போகாதவர்… கார்த்திகைப் பூ காசுகொடுத்து வாங்காதவர்…..ஏன் பின் ஓட்டம் கூடசெய்யாதவர். மனிதம் இன்னும் சாகவில்லை. — மேளம்

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  இந்த மாவீரர் தினம் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டாலும் மற்றைய இயக்கத் தோழர்களாலும் முடிந்தளவு அஞ்சலி செய்யப்பட்டே வந்தது. புலிகளின் மாவீரர் பட்டியலில் மாத்தையா இல்லை காரணம் துரோகி.இப்ப புதுப்பட்டியல் வந்தாலும் பிரபாகரன் இல்லை. காரணம் துரோகியா? தியாகியா? அல்லது பொன்முட்டை போடும் வாத்தா. உணர்ச்சி வசப்பட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்தான் பதிலளிக்க வேண்டும்.

  மொத்தத்தில் அனைத்து இயக்கப் போராளிகளும், பொதுமக்களும், இவர்கள் எல்லோர்க்கும் சேர்த்து முதன்முதலில் தன்னையே அழித்த சிவகுமாரன் இறந்த நாளில் இதனை அனுஷ்டித்தால் பலரும் ஒன்றினைவார்கள். இரண்டு விதமான பாட்டு, மூன்று விதமான கூத்து இடம்பெறாது. ஜெயபாலன் எழுதியதுபோல் தாயகத்தில் அரசபடைகள் மாவீரர் துயிலம் இல்லங்களின் கல்லறைகளைப் பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ அந்த உறவுகளையும் பெயர்த்தெடுக்கின்றனர். இதுதான் உண்மை நிலை.

  Reply
 • மாயா
  மாயா

  பிரபாகரனுக்கு பேத்டே கொண்டாட அப்பாவிகளை சாகடித்து உருவாக்கிய விழா இது. ஆனால் பிரபாகரனையே நினைக்காதது ஏனோ?

  Reply
 • Nathan
  Nathan

  // பிரபாகரனுக்கு பேத்டே கொண்டாட அப்பாவிகளை சாகடித்து உருவாக்கிய விழா இது. ஆனால் பிரபாகரனையே நினைக்காதது ஏனோ?//

  தவறான வாதம். பிரபாகரனின் பிறந்த தினமும் முதல் புலி சங்கரின் மரணமும் அடுத்தடுத்து வருகிறது என்பதற்காக மாவீரர் நாள் அமைக்கப்பட்டது என்பது தவறானது.

  Reply
 • மாயா
  மாயா

  //தவறான வாதம். பிரபாகரனின் பிறந்த தினமும் முதல் புலி சங்கரின் மரணமும் அடுத்தடுத்து வருகிறது என்பதற்காக மாவீரர் நாள் அமைக்கப்பட்டது என்பது தவறானது.//

  மாத்தி வைக்கிறியளே? சிவகுமார் என்ற மாவீரன் செத்த நாளை வையுங்கோ? இல்ல ; திலீபன் செத்த நாளை வையுங்கோ?

  சிலர் தேர் இழுக்க முன்ன தேங்காய் உடைப்பாங்கள். சிலர் தேர் வந்து முடிஞ்சதும் தேங்காய் உடைப்பாங்கள். நடுவிலதான் தேரோட்ம்.

  Reply
 • Ajith
  Ajith

  இங்கு புலிகளின் இராணுவ தோல்வியை வைத்து லாபம் (அரசியல் , பொருளாதார) தேட நினைபவர்கள் பலர். புலிகளின் இராணுவ தோல்வி என்பது என்பது நியாயத்தின் வெற்றி என்று சிலர் தப்பு கணக்கு போட்டு கொண்டாடுகிறார்கள்.தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான தொடர்ந்து வரும் சிங்கள ஒடுக்கு முறை தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாத ஒரு தேவையை ஏற்படுத்தியது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இன்று கூட அதற்கான தேவையின் நியாயம் வலுவாக இருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா போராளிகளும் தமிழ் மக்கள் சின்ஹல ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக தமிழர் தாயகத்தில் தமிழினம் வாழ வேண்டுமென்று விரும்பியவர்கள். சிங்கள இராணுவ ஆகிரமைபிற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் எந்த தவறும் இல்லை . அதற்கு தேவையான நிதி சேகரிப்பு. மக்கள் நிதியளிப்பு என்பன தவறானவை அல்ல. ஒரு சிலர் அந்த நிதியை தவறாக பயன்படுத்தி இருக்கலாம் அல்லது அதனை என்ன செய்வதென்று புரியாமல் இருக்கலாம். இந்த பணம் புலிபோரளிகளின் நல்வாழ்வுக்காக பாவிக்க படவேண்டும் . ஆனால் அந்த பணம் எப்படி புலி போராளிகளுக்கு உண்மையாக பயன்படுத்த படும் என்பதற்கான வழிமுறைகள் என்ன? பாதிக்கபட்ட அப்பாவி மக்களுக்கு என சர்வதேச நிறுவனங்களினால் வழங்கப்படும் உதவிகள் கூட அவர்களை சென்றடைய முடியாத நிலை இன்று அங்கு காணபடுகிறது. இன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணகள் சிங்கள குடியேற்றங்களை உருவாகுவதிலும் இராணுவ மயபடுதலுக்கும் செல்வது பகிரங்க உண்மை. மக்களிடம் பெற்ற பணத்தை சூறையாடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இதை புலிகளின் மீது பழி சுமத்தும் ஆயுதமாக பாவித்து சிங்கள இரனுவமயமக்களுகும் தமது பதவி மோகத்திற்கும் உதவுவதிற்கு நோக்கமாக கொண்டு செயற்படுவார்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். அந்த போராளிகளுக்கு எப்படி உதவலாம் அதற்கான வழிமுறைகள் என்ன,அவர்களுக்கான தேவைகள் என்ன, என்பதை மக்களிடம் விளக்கி ஏன் உங்களால் நிதி சேகரிக்க முடியாது உள்ளது. நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் என்ன தடைகள் உள்ளன? புலிகளை சாட்டி எவளவு காலம் கேள்விகளை மாத்திரம் கேட்டு உங்கள் அரசியலை நடத்த போகிறீர்கள். உங்கள் மீது மக்கள் ஏன் நம்பிக்கை வைகிறார்கள் இல்லை. உங்கள் நோக்கம் பழி வாங்கலே ஒழிய மக்களுககவோ போராளிகளுககவோ அல்ல.

  Reply
 • BC
  BC

  //மாயா – பிரபாகரனுக்கு பேத்டே கொண்டாட அப்பாவிகளை சாகடித்து உருவாக்கிய விழா இது. //
  உண்மையும் அது தான்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தமிழீழம் என்பதனை அறிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியே அதனை கைவிட்டுவிட்ட பின்னர் “வெளினாட்டுச்” சக்திகளால் தத்தெடுக்கப்பட்ட இந்த இயக்கத்துகூட்டம் தமிழர்களுக்கு எதனை சாதித்தது? இந்த “இயக்கங்களின்” சூரர்கள் தமிழர்களிடம் கொள்ளையடித்து கொலை செய்து அன்னியர்களுக்கு லாபம் காட்டியவர்கள். இந்த கொள்ளையை “உன்னதமானது” என்று நாங்கள் நம்ப வேண்டுமா? சோதிலிங்கத்துக்கு என்ன ஆச்சு?

  Reply
 • மாயா
  மாயா

  //ஒரு சிலர் அந்த நிதியை தவறாக பயன்படுத்தி இருக்கலாம் அல்லது அதனை என்ன செய்வதென்று புரியாமல் இருக்கலாம். இந்த பணம் புலிபோரளிகளின் நல்வாழ்வுக்காக பாவிக்க படவேண்டும் . ஆனால் அந்த பணம் எப்படி புலி போராளிகளுக்கு உண்மையாக பயன்படுத்த படும் என்பதற்கான வழிமுறைகள் என்ன? ஒரு சிலர் அந்த நிதியை தவறாக பயன்படுத்தி இருக்கலாம் அல்லது அதனை என்ன செய்வதென்று புரியாமல் இருக்கலாம். இந்த பணம் புலிபோரளிகளின் நல்வாழ்வுக்காக பாவிக்க படவேண்டும் . ஆனால் அந்த பணம் எப்படி புலி போராளிகளுக்கு உண்மையாக பயன்படுத்த படும் என்பதற்கான வழிமுறைகள் என்ன? – Ajith //

  இந்தக் கேள்விகளுக்கு எங்களிடம் விடை தேடாமல் > விடையை நீங்களே சொல்லுங்கள். தண்டித்தவன் எவனும் அங்கும் இல்லை. கொள்ளையடித்தவன் எவனும் வெளியில் சொன்னதும் இல்லை. புலிகளுக்கு காசு சேர்த்தவர்கள் அரசோடு கொஞ்சிக் குலாவுகிறார்கள். தகவல் அனைத்தையும் மெயில் பண்ணுகிறார்கள். இங்கே எழுதுவது எதுவும் தெரியாதவர்களாய் > இன்னமும் புலி வரும் > உறுமும் என்று இருப்பதையும் கொடுக்கும் அப்பாவிகளுக்கு உண்மைகளை சொல்லவே தவிர வேறு எண்ணமில்லை.

  நடந்த தவறுகளையும் > செய்த கொலைகளையும் > முட்டாள்தனத்தையும் பகிரங்கமாக சொல்வீர்களா? இல்லை சொல்வார்களா? இன்னமும் 1200 பேரோடு புலிகள் பிரபாகரனோடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் > வெள்ளைக் கொடியோடு சரணடைந்து இறந்ததாகவும் > எழில் போன்றவர்களை இராணுவம் கடைசியாக ஏற்றிச் சென்றதென்றும் ஏன் புகார் செய்கிறீர்கள்? அவர்களுக்கு அவர்கள் ஓரிடத்தில் பயிற்சி செய்கிறார்கள் என்று அறிவிக்க வேண்டியதுதானே?

  Reply
 • santhanam
  santhanam

  பாகிஸ்தானிய அரசு மூன்று காரணங்களுக்காகவே இலங்கை அரசுக்கு யுத்தத்தில் உதவி செய்தது என்று பாகிஸ்தானின் இராணுவ புலனாய்வு எழுத்தாளர்களில் பிரபலம் மிகுந்த ஒருவரான சமூக விஞ்ஞானி Dr. Ayesha Siddaqa தெரிவித்து உள்ளார்.

  இவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள king’s College இல் War Studies சம்பந்தமாக Ph.D செய்தவர்.

  01.Pakistan’s Arms Procurement and Military Build-up, 1979-99 In Search of a Policy

  02. Military Inc: Inside Pakistan’s Military Economy.

  ஆகியன இவர் எழுதிய புத்தகங்களில் பிரபலம் ஆனவை. இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

  அவர் தெரிவித்துள்ள மூன்று காரணங்களும் வருமாறு:-

  * தென்னாசிய பிராந்தியத்தின் அரசியலில் தலையிடுகின்றமைக்கான ஆளுமையை வளர்த்தல்

  * தென்னாசிய பிராந்தியத்தில் செல்வாக்கை உயர்த்துதல்

  * இந்தியாவால் உருவாக்கப் பட்ட புலிகள் இயக்கத்தை இல்லாது ஒழித்தல்

  Reply
 • selva
  selva

  Jeyabalan,
  I totally agree with you.What you have said is absolutely correct .Venom,hatred and revenge are the characteristics of the Tigers.Those who love people ,those who respect human rights cannot have the characteristics of the Tigers.Even though those who lost their lives were misled by the Tigers we cannot simply ignore them.
  Selva

  Reply
 • kovai
  kovai

  சந்தானம்!
  அந்த அறிஞர் புலனாய்வில் விடுபட்ட ஒன்று.
  புலிகளின் இந்தியச் சரணாகதி மாவீரர் உரை நாளைத் தேர்ந்தெடுத்து, அமெரிக்க 911 போல, இந்திய 2711 ஐ ஏற்படுத்திய சர்தாரி-மகிந்த கூட்டமைப்பின் தொடர் நாடகமே சர்தாரி வருகை.
  ஆப்கானிஷ்தானில் தாலிபான் அரசாங்கம் அமைக்க உதவிப் பின் அந்த நாட்டையே நிர்மூலமாக்க உதவிய பாகிஷ்தான், மகிந்த அரசாங்கத்தை முண்டு கொடுக்க உதவுவது இலங்கையின் பேரழிவிற்கே என்பதை, இவர் வருகை கட்டியங் கூறி நிற்கிறது.

  Reply
 • santhanam
  santhanam

  இவர் சீனாவின் முக்கியவிருந்தாளி அமெரிக்கா இந்தியாவின் வியாபாரம் இவர்களிற்கு ஆபாத்தை ஏற்படுத்தும் என்ற ஒரேகாரணம்.சீனாவின் வியாபாரம் பாகிஷ்தானில் ஒகோ மகிந்த இரண்டுதோணியில் சீனா இலங்கையில் பொருளாதார உதவிமட்டும் ஆனால் இந்தியா பாதுகாப்பு பொருளாதாரம் அரசியல் தலையீடு………….

  Reply
 • நந்தா
  நந்தா

  சோதிலிங்கம்:
  நடக்க முடியாத ஒன்றைநடத்தலாம் என்று புறப்பட்டு சொந்த மக்களின் வாழ்வையே நாசமாக்கியவர்கள் இந்த தமிழீழம் கேட்டவர்கள்.

  இந்த தமிழீழம் என்பது எப்படி “உன்னதமான” கோட்பாடாகும்? அதன் மூலம் தமிழரின் எந்தப் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று இதுவரை எவரும் சொன்னது கிடையாது. இன்றும் தமிழர்களிடையே உள்ள “பல” கட்சிகளே அதற்குச் சான்று.

  அது போகட்டும். இந்த “மாவீரர்கள்” எத்தனை தமிழர்களைக் கடத்திச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்? அந்தக் குடும்பங்களில் குடும்பநாதன் இன்றி அவர்கள் படும் அவலங்கள் இன்றும் தீரவில்லை.

  ஒரு சமூகத்தின் கோடாலிகளாக இருந்து சமூகநாசத்தினை விளைவித்தவர்களுக்குப் பாராட்டு தேவையா?

  Reply
 • நந்தா
  நந்தா

  பாகிஸ்தான் அமெரிக்காவின் ஒரு அடியாள். இந்தியாவின் ஜன்ம சத்துரு. பாகிஸ்தானின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு அமெரிக்கா தவிர எந்த (முஸ்லிம்) நாடும் உதவத் தயாரில்லை.

  இலங்கையை பொறுத்த அளவில் அமெரிக்காவுக்கு அது ஒரு ‘தளம்” மாத்திரமே! “தமிழ்” மொழியைப் பாதுக்காக்க அல்லது தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்காக அமெரிக்கா வருகிறது என்று யாராவது எண்ணுகிறீர்களா?

  பாகிஸ்தான் “அறிவாளிகள்” தங்கள் நாட்டுப் பிரச்சனை பற்றியே வாய் திறக்க திராணியற்றவர்கள்.

  பூகோள நிலைவரத்தின்படி இலங்கையில் அமெரிக்கா கால் பதிக்கக் கூடாது என்று சீனாவும், இந்தியாவும் நினைக்கின்றன. இந்தியாவுக்கு தென்பகுதியில் இருந்து அமெரிக்க வால்களான புலிகளால் “தொல்லை” வரக் கூடாது என்பதன் காரணமாகவே புலிகளின் சமாதிக்கு இந்தியாவும், சீனாவும் உதவியுள்ளன.

  பாகிஸ்தானுக்கு “ஒரு” வியாபார சந்தர்ப்பமே கிடைத்தது. அதனை இப்படி ஒரு “இழுப்பு” இழுத்து பயன் கிடையாது! புலி ஆதரவாளர்கள் திடீரென்று “இந்திய” பக்தர்களாகி “சீனா” என்பது கண்ராவியாக உள்ளது.

  Reply
 • Nathan
  Nathan

  //மாத்தி வைக்கிறியளே? சிவகுமார் என்ற மாவீரன் செத்த நாளை வையுங்கோ? இல்ல ; திலீபன் செத்த நாளை வையுங்கோ? //

  மாயா, அப்ப தியாகி திலீபனின் வீரமரணமடைந்த நாளை மாவீரர் நாளாக்கினால் தான் நீங்கள் வந்து அஞ்சலி செய்வியலோ? இண்டைக்கு திலீபன் என்பியல் நாளைக்கு மாத்தையா செத்த நாள் என்பியல் ஏனெண்டால் உங்களுக்கு அரைக்க அவல் வேண்டுமே.

  இண்டைக்கு ABCD இல் எல்லா எழுத்தும் கொண்ட இயக்கங்களால ஒண்டுமே செய்ய முடியேல்ல. ஆக குறைஞ்சது தங்கட அமைப்பிலிருந்து செத்த போரளிகளின் பேர் விபரம் கூட இல்லை. பல இயக்கங்கள் அவற்றை வைத்திருக்காததன் ஓருநோக்கம் தங்களின் உட்கட்சி படுகொலைகளும் வெளிவநதுவிடும் என்பதால்.

  உங்களைப்போல ஆட்கள் இனி வரிந்துகட்டிக்கொண்டு வந்து மாவீரர் நாளை எப்ப அனுட்டிப்பது எண்டு பட்டிமண்டபம் செய்வியல். கடைசியில ஒருநாளும் தோதா வரவில்ல எண்டு வீட்ட போய் இருந்திருவியல். வேகம் இருந்தால் நீங்களும் ஒருங்கிணைந்து ஒரு நாளை அனுட்டியுங்கோ இல்லை ஊரோட போய் 27இல் செத்த அனைவருக்குமாய் அஞ்சலி செலுத்துங்கோ.

  Reply
 • மாயா
  மாயா

  நாதன் ; போராட்டங்கள் நடக்காத நாடுகளோ அல்லது போர்கள் நடக்காத நாடுகளோ இல்லை. இந்த நாடுகள் ஒவ்வொரு வருடமும் போரில் அல்லது போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதில்லை. நினைவு கூரவில்லை என்பதற்காக இறந்த மக்களை அவர்கள் மதிக்கவில்லை என்று சொல்வதற்கும் இல்லை.

  தமிழர்கள் நடத்துவது வியாபாரம். விளம்பரம். மரணங்களையே நினைவு கூர்ந்து மரணித்துப் போன மக்களாக தமிழர்கள்தான் இருக்கிறார்கள். இதை உங்களால் உணர முடிகிறதோ தெரியாது? ஆனால் உண்மை அதுதான். மனோ தத்துவ விஞ்ஞானிகளைக் கேளுங்கள். நிச்சயமாக இந்த மனநிலையில் உள்ளவர்கள் மரணத்தை நோக்கி மட்டுமே செல்வார்கள் என சொல்வார்கள்.

  உண்மையில் தமிழீழ போராட்டத்தில் யாரும் தன்னால் அடையாளம் காணப்படக் கூடாது என உயிர்நீத்தவர் சிவகுமாரன்தான். அவனுக்கு யாருடைய தூண்டுதலோ அல்லது அச்சமோ இருக்கவில்லை. தன்னால் யாரும் அகப்படக்கூடாது என்ற மனம் மட்டுமே இருந்தது. அது இந்த மாவீரர் நிகழ்வுகளை செய்யும் எவருக்கும் தெரியாது.

  மாவீரர் கொண்டாட்டங்களில் அப்பாவிகளை நினைவு கூருவதில்லை. அவர்களும் இதே காரணத்துக்காகவே கொல்லப்பட்டவர்கள். ஏனைய இயக்கத் தோழர்களும் அப்படியேதான். தலைமைகள் விட்ட தவறுகளுக்கு அப்பாவிப் போராளிகள் உடந்தைதான் ; ஆனால் அவர்கள் முழுக் காரணமல்ல. இதனால் தலைமைகள் அழிந்தன. அதுவே உண்மை. நியதி.

  காலையில் எழும் எவனும் இன்றைய நாள் நல்ல நாள் என்றே படுக்கையை விட்டு எழுகிறான். இன்றைக்கு நாசம்தான் என எவனும் படுக்கையை விட்டு எழுவதில்லை. ஒரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்கை. நம்பிக்கைதான் வாழ்கை.

  மரணித்தை நினைத்து வாழ்ந்த சமுதாயம் மரணித்து விட்டதில் எந்த வியப்பும் இல்லை.

  Reply
 • மகுடி
  மகுடி

  //ஆக குறைஞ்சது தங்கட அமைப்பிலிருந்து செத்த போரளிகளின் பேர் விபரம் கூட இல்லை. பல இயக்கங்கள் அவற்றை வைத்திருக்காததன் ஓருநோக்கம் தங்களின் உட்கட்சி படுகொலைகளும் வெளிவநதுவிடும் என்பதால் – யேவாயn//

  காட்டிக் கொடுப்பும் / உட் கொலைகளும் அதிகம் நடந்த இயக்கம் புலிகளியக்கம்தான். மாத்தையாவும் / அவரது புலிப் படைக்கும் என்ன நடந்தது? கருணாவின் பின்னால் வந்து கடைசியில் சரணடைந்த போராளிகளை எப்படிக் கொன்றீர்கள்? உங்கள் தலைவன் கற்பழித்துக் கொல்லச் சொன்னானே? அவர்களுக்குமா உங்கள் மாவீரா; நாள்? பல இயக்கங்கள் வீரமக்கள் தினம் என்றும் இறந்து போனவர்களுக்கான அஞ்சலி என்றும் நடத்துகிறார்கள். கேள்விப்பட்டதில்லையா நாதன்?

  Reply
 • Nathan
  Nathan

  //போராட்டங்கள் நடக்காத நாடுகளோ அல்லது போர்கள் நடக்காத நாடுகளோ இல்லை. இந்த நாடுகள் ஒவ்வொரு வருடமும் போரில் அல்லது போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதில்லை. நினைவு கூரவில்லை என்பதற்காக இறந்த மக்களை அவர்கள் மதிக்கவில்லை என்று சொல்வதற்கும் இல்லை//

  மாயா நீங்கள் எந்த கிரகத்தை பற்றி கதைக்கிறீர்கள்? எனக்குத்தெரிந்து போரட்டம் நடைபெற்று அதில் கொல்லப்ட்டவர்களை சிறியளவிலாவது நினைவுகூறாத நாடே இல்லை எனலாம். உங்களிற்கு தெரியாததால் இல்லை என்பது முடிவாகாது.
  மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுவது மரணமடைந்த போரளிகளையும் மக்களையும் நினைவுகொள்ளத்தான். வசதி கிடைத்தால் ஏதாவது மாவீரர் நிகழவொன்றுக்கு போய் பாருங்கோ. அதில அகவணக்கம் செலுத்தேக்க என்ன சொல்லி செலுத்தினம் என்று.

  உங்களிற்கு இது விளம்பரமாய் தெரிவதால் இது விளம்பரமல்ல. தாம்பெற்ற பிள்ளைகளை சகோதரனை சகோதரியை நண்பனை மக்களை நினைப்போர்க்கு இது புனிதம். விளம்பரகண்ணாடி போடுவோர்க்கு விளம்பரம்.

  மரணத்தை நினைவு கூறுவோர் என்ன நாளைக்கு சாக வேண்டும் என்று இருப்பவரா? சைவ சமயத்தில் ஆண்டுத் திவசம் என்றொறு நிகழ்வுண்டு. இறந்தவரை நினைந்து வாழ்பவன் செய்யும் கிரிகை. அப்ப அதை செய்யிறவர் மனநிலை சரியில்லாதவரா?

  Reply
 • Nathan
  Nathan

  //காட்டிக் கொடுப்பும் ஃ உட் கொலைகளும் அதிகம் நடந்த இயக்கம் புலிகளியக்கம்தான். மாத்தையாவும் ஃ அவரது புலிப் படைக்கும் என்ன நடந்தது? கருணாவின் பின்னால் வந்து கடைசியில் சரணடைந்த போராளிகளை எப்படிக் கொன்றீர்கள்? உங்கள் தலைவன் கற்பழித்துக் கொல்லச் சொன்னானே? அவர்களுக்குமா உங்கள் மாவீரா; நாள்? பல இயக்கங்கள் வீரமக்கள் தினம் என்றும் இறந்து போனவர்களுக்கான அஞ்சலி என்றும் நடத்துகிறார்கள். கேள்விப்பட்டதில்லையா நாதன்//

  மகுடி, முதல்ல நான் சொன்னது மரணித்த உறுப்பினர் விபரம் முழுமையாய் பல இயக்கங்களிடம் இல்லை என்பதே அன்றி மற்ற இயக்கங்கள் நினைவு கூர்ந்தார்களா இல்லையா என்றில்லை. மற்றும் இதில் புலிகள் கொன்றது கூடவா மற்றவர்கள் கொன்றது கூடவா என்பதல்ல கேள்வி. ஏனெனில் ஏறக்குறைய எல்லா இயக்கங்களுமே சகோதர உட் படுகொலை மற்றும் சித்திர வதையில் பேர் போனவர்கள். புலியை சொல்லி எல்லாத்துக்கும் தப்பிக்க வேண்டாம். தீப்பொறி என்ற புத்தகத்தில் ஒரு இயக்கத்தை பற்றிய இரத்தம் உறையும் உண்மகள் வெளிவந்தது என்பது வரலாறு. இதைவிட பல இணையங்களில் அந்தக்கால பின்தளமான தமிழ் நாட்டில் போரட போன எமது அண்ணன் அக்கா மற்றும் நண்பர்களுக்கு நடந்த அனுபவங்கள் வாக்குமூலங்களாய் வெளிவந்துள்ளன.

  சும்மா புலியை எதிர்ப்பதை அரசியலக கொள்ளாமல் இதயசுத்தியுடன் போரடி மரணித்தஉயிர்களை மதியுங்கள். புலித்தலமை தனக்கு சரியெண்டதை செய்தார்கள் ஆனால் அது பிழையாய் போனது வரலாறு. எவ்வளவு காலம்தான் அரைத்த மாவை அரைப்பீர்கள?

  Reply
 • மாயா
  மாயா

  //சைவ சமயத்தில் ஆண்டுத் திவசம் என்றொறு நிகழ்வுண்டு. இறந்தவரை நினைந்து வாழ்பவன் செய்யும் கிரிகை. அப்ப அதை செய்யிறவர் மனநிலை சரியில்லாதவரா?//
  நீங்கள் நடத்துவது திவசமா? செத்த வீட்டில் பாட்டும் கூத்துமல்லவா நடக்கிறது. திவச வீட்டில் இதுவா நடக்கும்?

  //புலித்தலமை தனக்கு சரியெண்டதை செய்தார்கள் ஆனால் அது பிழையாய் போனது வரலாறு. எவ்வளவு காலம்தான் அரைத்த மாவை அரைப்பீர்கள?//
  நீங்கள் மட்டும் எதை அரைக்கிறீர்கள். பிழையாய் போனதை உணர்ந்தால் ; அதை தொடர்ந்து செய்யாதீர்கள்.

  வேதனை கொண்ட இந்தக் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?
  http://thesamnet.co.uk/?p=23453

  Reply
 • thurai
  thurai

  //சும்மா புலியை எதிர்ப்பதை அரசியலக கொள்ளாமல் இதயசுத்தியுடன் போரடி மரணித்தெளயிர்களை மதியுங்கள். புலித்தலமை தனக்கு சரியெண்டதை செய்தார்கள் ஆனால் அது பிழையாய் போனது வரலாறு. எவ்வளவு காலம்தான் அரைத்த மாவை அரைப்பீர்கள?//நாதன்

  இதய சுத்தியுடன் போராடி மரணித்தார்கள் ஏற்கின்றோம். இதய சுத்தியுடன் புலம்பெயர் நாடுகளில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள் அதனையும் ஏற்கின்றோம். அதற்காக புலிகள் தாங்கள்தான் என்று கூறி புலம் பெயர்நாடுகளையும் சுத்தி, புலம்பெயர் தமிழர்களையும் சுத்தி, தொடர்ந்தும் பணத்தை எவ்வாறு சுத்தலாமென திட்டமிடுபவர்களையும் மதிக்க வேண்டுமா? இவர்களிற்கும் பெயர் விடுதலைப் புலிகளா? இவரகள் இதுவரை காட்டிய விடுதலையின் வழிகளென்ன? யார் புலி, யார் எலி,யார் குள்ளநரிகள் என்பதை தெரியாமல் தவிக்கின்றோம். –துரை

  Reply
 • மாயா
  மாயா

  புலிக்கு சார்பாக பாட்டெழுதிய இவன் ; ஒரு குறும் படத்தைத் தந்ததால் இவனும் துரோகியாம். இவனை படுக்க வைக்க பல சருகுப் புலிகள் தொலைபேசி மிரட்டலாம்? என்னடா உலகம்?
  முக்கியமான ஒரு பகுதி இது :
  -http://www.youtube.com/watch?v=CyGfHJX4C1s&feature=player_embedded

  Reply
 • palli
  palli

  மாவீரர்களை நான் மதிக்கிறேன்; ஆனால் யார் மாவீரர்கள் என்பதே என் கேள்வி: பாரிஸ்சில் கஜன், நாதன் இருவரும் மாவீரராக சொல்லபட்டு அவர்கள் புதைக்கபட்ட இடத்தில் 27.11.10 பல மக்கள் கூடி கண்ணீர் தெளித்தனர், இதில் தப்பு இல்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னால் இவர்கள் இருவரும் ஏதோ புலி பணத்தை கயாடல் செய்ததாக புலியாலேயே கொல்லபட்டது தமிழர் அறிந்த விடயம், அப்படி இருக்கும்போது ஒரு துரோகியை எப்படி இன்று மாவீரர் ஆக்கினார்கள்? இவர்களை புலி கொல்லவில்லை என சொல்லி அவமானபட வேண்டாம்; எனக்கென்னமோ மாவீரருக்கு மாலைபோட இரு அமரர்கள் தேவை என்பதால் திலீபன்போல் இவர்களும் தர்மகொலையோ என எண்ண தோன்றுகிறது, உன்மையிலேயெ இன்று மாவீர வன்னியில் அல்லது முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களே அவர்களுக்காய் தினம் தினம் மாவீரர்தினம் கொண்டாடுங்கள் தப்பில்லை; அதைவிட்டு குளிருக்காய் மண்டபம் எடுத்தோம் என மாவீரர் தினத்தை சொல்லி குளிர்காய்வது நல்லதல்ல;

  Reply
 • jivan_raj
  jivan_raj

  மாவீரர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள்; அவர்களின் துயர் பகிரும் நாளிலும் கேக் வெட்டி குதூகலித்துக் கொண்டாடுகின்றார்களே!

  Reply
 • மாயா
  மாயா

  தாய்வீடு கரண் கைது ; புலத்தில் வறுகிய பணத்தில் தமக்கு சொத்து சேர்த்ததோடு நிற்கவில்லை. இவர்களில் பலர் நாட்டிலும் சொத்து வாங்கப் பொய் மாட்டிக் கொண்ட ஒரு செய்தி. புலி; பொறியில் சிக்கிய எலியானது. புலிகளே தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நரகத்தில் ; வறுகியோர் சுவர்க்கத்தில் :

  Powerful LTTE suspect who arrived from Switzerland arrested
  (Lanka-e-News, Nov.29, 2010, 10.15PM) A suspected powerful member of the LTTE Organization who had come from Switzerland and was staying at Colombo Hilton Hotel was taken into custody on 25th November by the Terrorist investigation division (TID).

  It is reported that his name is Karan and the TID had arrested him following information received from Switzerland..

  Karan had been a powerful member of the LTTE in the East and north war operations. Later in 1990 he had left for Switzerland.
  According to sources from the TID, since he fled, he had been collecting funds for the LTTE from Switzerland and has been engaged in arms procurement and supplies to the LTTE.

  Though the TID took him into custody on the 25th of November, he had arrived in Sri Lanka a couple of weeks earlier. The TID had been trailing Karan and have had him under its surveillance until the time of his arrest, reports say.

  Within the short period in SL following his arrival he has bought a tea estate 50 acres in extent at Deniyaya. He had also been preparing to open a foreign currency exchange center in Colombo, TID sources say.

  -http://www.lankaenews.com/English/news.php?id=10348

  Reply
 • Abdul
  Abdul

  1990களில் புலியமைப்பு கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களில் படுவேகமான ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. அவர்களின் பிரசார உத்தியில் சிக்குண்டு பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் புலியில் இணைந்தனர் (அதில் எனது உறவினர் ஒருவரும் ஆரம்பப் பாடசாலை நண்பர்களும் அடக்கம்).இணைந்தவர்கள் கடைசி வரை வீடு திரும்பவில்லை. சண்டையில் இறந்தவர்கள் போக மீதியானவர்கள் புலியாலேயே சமாதி கட்டப்பட்டனர்.மன்னிக்கவும் மண்டையில் போடப்பட்டனர்.நிச்சயமாக அவர்கள் இவர்களின் மாவீரர் பட்டியலில் இருக்க மாட்டார்கள். அவர்களையும் மாவீரர்களாக்கும்படி கேட்கவும் மாட்டோம்.

  இதை நான் எழுதுவதின் நோக்கம் முஸ்லிம்கள் எதைக் கிளித்தார்கள்?எனக் கேட்கின்ற முஸ்லிம்கள் எப்போதும் இராணுவத்துடனேயே இருந்து தமிழர்களுக்கெதிராக செயற்பட்டார்கள் எனத் திரும்ப திரும்ப கோஷமிடுகின்ற அந்த ஜீவன்களுக்காக பரிதாபத்துடன் தகவல் தெரிவிப்பது மட்டுமே..
  நன்றி.

  Reply