கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப் பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் வெடிபொருட்கள் குறித்து அவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பளை நகரம், புலோப்பளை கிழக்கு, புலோப்பளை, முள்ளியடி, தம்பகாமம், தர்மக்கேணி, சோரன்பற்று, மாசார், இயக்கச்சி, ஆகிய கிராமங்களில் மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் தென்பட்டால் அவற்றைக் கைகளால் தொடமாமல் உடனடியாக பிரதேசச் செயலகம் அல்லது பிரதேசசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதே வேளை, குப்பைகளை எரிக்காமல் குழிகளில் வெட்டிப் புதைக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. போரினால் இப்பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
._._._._._.
கிளிநொச்சி பச்சிலைப் பள்ளியில் ஒன்பது கிராமங்களில் மீள்குடியேற்றம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட ஒன்பது கிராமங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் Oct 14 2010 வியாழக்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இடம் பெயர்ந்து வுவனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உணவல்லாத பொருட்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன. மீள்குடியேறும் இம்மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரைச்சிப் பிரிவிலுள்ள மக்கள் மீள் குடியேறுவதற்கான பதிவுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டத்தில் இடம்பெற்றது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கயிருந்து பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்து வந்த பலர் இன்று கரைச்சிப் பிரிவலுள்ள தங்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்வதற்காக பதிவுகளை மேற்கொண்டனர்.