சாம்பியன் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. ஐ.பி.எல் இல் மட்டுமல்ல சாம்பியன் லீக்கிலும் சாம்பியனாக முடியும் என்பதை சென்னை அணி நிருபித்துள்ளது.
ஜொகனஸ் பேர்க் வோன்டரஸ் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டேவி ஜேகப்ஸ் தலைமையிலான வொரியர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வொரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜேகப்ஸ் 34 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணியின் பந்து வீச்சில் முரளிதரன் அதிரடியாக 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 129 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மைக்கல் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகியோர் நிதானமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர்.
முரளிவிஜய் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களத்தில் மைக்கல் ஹசி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும், ரெய்னா 02 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய தோனி 17 ஓட்டங்களை பெற்றபோது சென்னை அணி இலகுவாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக முரளி விஜய் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.