கிழக்கில் மீண்டும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவடைந்து அமைதி நிலை தோன்றியதற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
படைமுகாம்களைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில காலமாக கைவிடப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளும் மீண்டும் திறக்கப்பட்டு முன்னர் போல் வாகனங்கள் சோதனையிடப்படுவதோடு, பொதுமக்களும் சோதனையிடப்படுகின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பெண் பொலிஸார் உட்பட மூவர் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்த ரி-56 ரக துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளமை மற்றும், அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரப்பசளைகள், அரிசி மூடைகள் எனபன லொறிகளில் கடத்தப்பட்ட சம்பவம். மரங்கள். கஞ்சா போன்றவை கடத்தப்படுகின்ற சம்பவங்கள் என்பவற்றைத் தொடர்ந்தே இப்பாதுகாப்பு மற்றும் வீதிச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.