பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

சிறுவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை சட்ட ரீதியான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முறையான வேலைத் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வசதிகளுடன் உள்ள மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் வகையில் உள்ள சிறுவர் இல்லங்களை இனங்கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  (09) அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கூறிய பணிப்புரையை விடுத்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலன் பேணல் பற்றி கண்டறிய சகல சிறுவர் இல்லங்களின் அருகிலும் சிவில் கமிட்டியொன்றை நியமிப்பதன் அவசியம் பற்றியும் அவ்வாறான கமிட்டியில் கிராமப்புற விஹாரையின் தேரர், பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச அரச அதிகாரியொருவரும் உள்ளடங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

வெளிநாடு செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் தடுப்புக் காவலில் உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளின் மன நிலையை கட்டியெழுப்புவதற்கான விசேட திட்டங்களை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.

அதேவேளை பெண்கள் எவ்வித இம்சையும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்களை தைரியமூட்டும் மற்றும் அவர்களது நலன் பேணுவது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ள தாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் தாய், மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கு உரிய இடத்தை வழங்குவதுடன் சிறுவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் அளிக்க வேண்டிய பொறுப்புகளை வழங்குவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அங்கு விளக்கினார்.

முன்பள்ளி சிறுவர்களுக்கு ஒரு குவளை பால் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும், பாடசாலை செல்லாத சிறுவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறும் சகல சர்வதேச பாடசாலைகளிலும் சரித்திரத்தை படிப்பிக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சிறுவர் குற்றவாளிகள் மற்றும் சத்தேகநபர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் தொடர்பான திட்டத்தை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *