வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்!

IDP_Camp வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 4ம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கைகள் இம்மாதம் 30 திகதி வரை நடைபெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகள் என்ற அடிப்படையில் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைககள் நடைபெற்று வருகின்றன.  இறுதிக்கட்ட போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா அகதிமுகாம்களில் இருந்து பின்னர் வெளி மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

IDP_Campவெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கான இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவென அறிவிக்கப்பட்டள்ளதால் பெருமளவிலான மக்கள் தற்போது கிளிநொச்சியிலுள்ள தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமரும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளநொச்சி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இடைக்கால முகாமில் வைத்து கிளிநொச்சிப் பகுதி மக்களுக்கான இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை வரை இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் கிராமசேவையாளரின் பதிவுகள், பின்னர் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் பதிவுகள் மற்றும், அவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் பதிவுகளும் பின்னர் அவர்களாலும் புகைப்படம் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவ்வப்பகுதி சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத்தினர் பதவுகளுக்குற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் காணிகளில் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகரங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் தறப்பாள்கள் கொடுக்கப்பட்டன. தற்போது எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தங்கள் வீடுகள் அழிவடைந்த, சேதமுற்ற நிலையில் மிகவும் வசதியற்ற நிலையில் மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.

இதே வேளை, படைத்தரப்பின் பதிவுகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வுகளின் போது மக்கள் நீண்ட நேரங்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *