காத்தான்குடி நகரசபை அத்துமீறி செயற்படுவதாக கண்டனம் தெரிவித்து ஆரையம்பதியில் உண்ணாவிரதம் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக தற்காலிகக் கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.
ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் திருமதி மேரி கிருஷ்ணாசாந்தன் தலைமையில் ஏழு பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் கடந்த பல காலமாக காத்தான்குடி நகரசபை பல அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது தொடர்பாக இப்பகுதி மக்களும் ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்புகளும் அரசியல் வாதிகளும் அரச உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து அத்துமீறல்கள் தொடர்வதால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த அத்துமீறல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் கோரிக்கைகள் தொடர்பான கடிதம் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதியமைச்சர் வி.முரளிதரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரசபைக்கெதிராக ஆரையம்பதி பிரதேச சபைத்தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் \உண்ணாவிரதப்போராட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்நிரகாந்தன் தலையிட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.