அசின் நடிப்பதற்கு தடை?

asin.jpgஇலங்கை யில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர் நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ரெடி என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.  முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.  கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் காவல்காரன் என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், காவல்காரன் படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்?” என்றார்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • thurai
    thurai

    அசின் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை செல்வது தவறாக இருக்கலாம். புலிகள் கொடூரக் கொலைகள் செய்யும்போது இந்த நடிகர்கள் திரைப்பட கூட்டமைப்பு எங்கு சென்றிருந்தார்கள்?

    புலத்தில் வாழும் தமிழர்களாலேயே தென்னிந்திய சினிமா உலகம் வாழ்கின்றதா? புலிகளின் வர்த்தக்ர்கள் தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்களென்பதே இதன் அர்த்தம்.

    ஈழத்தமிழர்களிற்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

    துரை

    Reply
  • Waakir Hussain
    Waakir Hussain

    இது என்னப்பா கிரிகெட் ஆட வருபவர்கல் மட்டும் இங்க வரலாம் ஆனா சினிமாகாரன் மட்டும் வர முடியாது.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜயயோ இந்த ஆண்டின் பொருளாதார நெருக்கடியை உலகம் எப்படிதான் சமாளிக்க போகிறதோ??

    Reply
  • மாயா
    மாயா

    இலங்கைக்கு புலத்திலிருந்து முன்னர் போகாத தமிழர்களெல்லாம் இப்ப போகிறார்கள், நடிக-நடிகையர்கள்தான் போகத் தடை விதிப்பாம்? என்ன பகிடி(வதை)? இதுவும் மாறும்; எல்லாம் மாறும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உதே போக்கில் தமிழக சினிமாவிலுள்ள சில அரைவேக்காடுகள் சென்று கொண்டிருந்தால், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது போல், தலையைப் பிச்சுக் கொள்ள வேண்டிய நிலையே தமிழக சினிமாவிற்கும் தோன்றும். சீமான் போன்றவர்கள் வெளிநாட்டு இலங்கைத் தமிழனின் பணங்களைச் சுருட்டிக் கொள்வதற்காக இப்படிக் கோசம் போட, அதை நம்பி சில கூட்டம்.

    Reply