மனித உரிமை அரசியல் : த ஜெயபாலன்

Nelson_Mandela”ஒடுக்குமுறையும் அதற்கான எதிர்ப்பும் நிகழ்ந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை. உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவினால் மட்டும் அவை குணப்படுத்தக் கூடியவையல்ல. எங்களுடைய பொது மனிதத்துவத்தை இழிவுபடுத்துகின்ற இன அடிப்படையில் ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரிக்கின்ற அமைப்புமுறையில் இருந்தும் எங்களை ஒடுக்கப்படுபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றதில் இருந்தும் நாங்கள் எங்களை விடுவிக்க வேண்டும்.”
நெல்சன் மண்டேலா, October 29 1998

_._._._._

வருமுன் காப்பதே மிகச் சிறந்த அரசியல் இராஜதந்திரம். ஆனால் வந்த பின் அதனை வைத்து அரசியல் செய்வதற்கும் ஒரு பிரிவினர் உள்ளனர். வருமுன் காக்கப்பட வேண்டியதில் மனித உரிமைகளும் விதிவிலக்கல்ல. மனித உரிமைகள் ஏனைய அனைத்து உரிமைகளிலும் முதன்மையானது. எந்த உரிமைகளுக்காகவும் மனித உரிமைகளை பணயம் வைக்க முடியாது. நாம் வாழ்கின்ற உலகு சமத்துவமான உலகல்ல. ஏற்றத் தாழ்வுகளையுடைய, முரண்பாடுகள் நிறைந்த, ஒடுக்குமுறைகள் தலைதுக்கி நிற்கின்ற உலகு. இதுவே மனித உரிமை மீறல்களுக்கான விளைநிலமாக உள்ளது. இதற்கு மேற்குலகு முதல் மூன்றாம் உலகு வரை விதிவலக்கல்ல. இங்கு மனித உரிமை மீறல்களின் அளவும் கொடூரமும் வேறுபடுகின்றனவே அல்லாமல் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றது. நிகழ்த்தப்படுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த அதே ஆண்டு 1948ல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனாலும் இலங்கை உட்பட உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வடிவங்களில் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுக்கொண்டே உள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. முரண்பாடுகளை வன்முறையற்ற வழிமுறைகளில் தீர்ப்பதற்கான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததன் விளைவு முரண்பாடுகள் கூர்மையடைந்து மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படுவதில் முடிவடைகின்றது.

இவ்வாறு மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்ற சூழலிலும் மனித உரிமைகளைக் கண்காணிக்கின்ற அமைப்புகள் அதனை மீறுகின்ற நாடுகளுக்கோ அமைப்புகளுக்கோ எதிராக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைக் கண்காணிப்பு என்பது அறிக்கை தயாரித்தலுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. அறிக்கைகளுக்கு அப்பால் சென்று மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது அரசியல் சார்ந்ததாகி விடுகின்றது. மே 28 2009ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகள் எவ்வளவுதூரம் அரசியல் சார்ந்தது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம், இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த இத்தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

இவ்வாறு மனித உரிமைகள் என்பது அரசியல் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது.

Omar_al_Bashirசுடானின் டாபூர் பிரதேசத்தில் ஒமர் ஹசன் அகமட் அல் பசீரின் ஆட்சிக்காலத்தில் 200,000 முதல் 400,000 பேர்வரை கொல்லப்பட்டனர். அல் பசீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க் குற்றங்கள் மற்றும் மனித்துவத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மார்ச் 4 2009ல் பிடியாணையை விதித்தது. ஆனாலும் 2010 ஏப்ரல் 26ல் அல் பசீர் மீண்டும் சூடானின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியை நடத்துகின்றார். சர்வதேச நீதிமன்றத்தின் பிடியானை அர்த்தமற்றதாக்கி உள்ளது.

மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு சர்வதேசத் தலையீட்டுடன் தனிநாடுகளாகத் தங்களை அமைத்துக் கொண்டவை ஈஸ்ற் தீமோரும் கொசோவோவும். இவ்விரு நாடுகளிலும் இலங்கையில் இடம்பெற்றது போன்று அரச இராணுவத்துடன் ஒரு யுத்தத்தை மேற்கொள்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற கட்டமைக்கப்பட்ட பலமான இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கவில்லை. கிழக்கு தீமோரில் இந்தோனேசிய இராணுவமும் கொசோவோவில் யுகோஸ்லோவிய படைகளும் மோசமான இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. கிழக்கு தீமோரில் அவுஸ்திரேலியாவும் கொசோவோவில் நேட்டோ நாடுகளும் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தங்கள் அரசியல் நலனுக்கு சாதகமாக்கிக் கொண்டன. மேலும் கிழக்கு தீமோரும் கொசோவோவும் அமைந்திருந்த புவியியல் அமைவு, மற்றும் சர்வதேச அரசியல் சூழலும் அதற்கு இயைவாக அமைந்தது.

Kosova_Today_Eelam_Tommorrowஅதேசமயம் நேரடியான ஒடுக்குமுறையாளர்களாக இருந்த இந்தோனேசிய அரசிடம் இருந்தும் யுகோஸ்லாவிய அரசிடமிருந்தும் கிழக்கு தீமொரும் கொசோவோவும் விடுதலை பெற்றமை ஓடுக்கப்பட்ட தேசங்களைப் பொறுத்தவரை சாதகமாக அமைந்தது. இதனை முற்றிலும் மாறுபட்ட அரசியல் புவியியல் சூழலுடைய இலங்கையிலும் பிரதியீட செய்து தமிழீழம் பிரித்தெடுக்கப்படும் என்று தனிநாட்டு மனக்கோட்டை கட்டியவர்கள் பலர். தங்கள் மனக்கோட்டைக்கு பல்லாயிரக் கணக்கான வன்னி மக்களை இவர்கள் பலியிட்டனர்.

இந்த மனித உரிமை அரசியலின் அடிப்படையிலேயே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டே வந்துள்ளது. தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டு மலையக மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் போராட்டமும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கானோரின் உயிர்வாழ்வதற்கான உரிமையும் பறிக்கப்பட்டு உள்ளது. இதன் உச்சமே மே 18 2009 வரை இடம்பெற்ற மனித அவலம்.

இயற்கை அனர்த்தங்களால் மோசமான அழிவுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த இயற்கை அனர்த்தங்களை தடுக்கின்ற ஆற்றல் மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்துகின்ற அழிவை மட்டுப்படுத்த முடியுமே அன்றி தடுக்க முடியாது. ஆனால் மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்துகின்ற அவலங்கள் மனித சமூகத்தாலேயே மனிதத்துவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை. இதனை முழுமையாகத் தடுப்பதற்கு மனித சமூகத்தால் முடியும். எப்போதும் வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அறிவார்ந்த செயல். மனித உரிமை மீறல்களுக்கு இட்டுச்செல்லக் கூடிய சூழல் தவிர்க்கப்பட வேண்டும்.

Rwandan_Genocideஆனால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று அவலங்கள் நிகழ்ந்த பின் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் முனைப்பு அம்மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது தடுப்பதற்கு காட்டப்படவில்லை. இந்த மோசமான தவறு 1994ல் ருவாண்டாவில் இடம்பெற்றது. ருட்சி – குற்ரு இனக்குழுக்களுக்கு இடையே இனமுரண்பாடு கூர்மையடைந்திருந்த ருவாண்டாவில் ருவாண்டாவின் குற்ரு இன ஜனாதிபதியும் புரூன்டி ஜனாதிபதியும் பயணம் செய்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்து இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஐநா படைகளில் 10 பேர் கொல்லப்பட்டதையடுத்து ஐநா தனது படைகளை விலத்திக்கொண்டது. ருவாண்டாவின் மனித அவலத்தில் சர்வதேசம் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஏப்ரல் 6 1994ல் முதல் 100 நாட்களில் 800,000 பெரும்பாலும் ருட்சி இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

Kofi_Annan_2004ருவாண்டா படுகொலையின் 10வது ஆண்டு நினைவு மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் கொபி அனன் “The international community failed Rwanda and that must leave us always with a sense of bitter regret. – சர்வதேச சமூகம் ருவாண்டா விடயத்தில் தவறு செய்துவிட்டது. அது எங்களை எப்பொதும் கவலைகொள்ள வைக்கின்ற உணர்வை விட்டுச்சென்றுள்ளது.” எனத் தெரிவித்தார். ருவாண்டா படுகொலையின் போது கொபி அனன் ஐநா அமைதிப்படைக்கு தலைமை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Romeo_Dallaire_UN_Rawanda_PKFஅதே மாநாட்டில் உரையாற்றிய ருவான்டாவில் இருந்த சிறிய அமைதிகாக்கும் படைக்கு தலைமை தாங்கிய Lieutenant General Romeo Dallaire வருமாறு தனது அதிருப்தியை வெளியிட்டார். “I still believe that if an organisation decided to wipe out the 320 mountain gorillas there would be still more of a reaction by the international community to curtail or to stop that than there would be still today in attempting to protect thousands of human beings being slaughtered in the same country. – நான் இப்பொழுதும் நம்புகின்றேன், ஒரு குழு மலைகளில் உள்ள 320 கொரில்லாக்களை இல்லாமல் ஒழிக்க முடிவெடுத்தால், சர்வதேச சமூகம் இன்றும் அதே நாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதைக் காட்டிலும் கூடுதலான கவனத்தை அந்த கொரில்லாக்கள் கொல்லப்படுவதைதத் தடுப்பதில் காட்டும்.”

ருவாண்டா படுகொலைகளில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறிவிட முடியாது. ருவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னரே இலங்கையில் மற்றுமொரு மனித அவலம் நிகழ்ந்து உள்ளது. ஏன் இவ்வாறான மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியவில்லை என அப்போதைய கனடிய வெளிவிவகார அமைச்சர் Bill Graham, இவ்வாறு கூறுகின்றார். “We lack the political will to achieve the necessary agreement on how to put in place the type of measures that will prevent a future Rwanda from happening. – எதிர்காலத்தில் ருவான்டாவில் நிகழ்ந்தது போன்றதொன்று நிகழாமலிருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கான அரசியல் விருப்பு எங்களிடம் குறைவாகவே உள்ளது.” மனித உரிமை அரசியலின் யதார்த்தத்தை அப்போதைய கனடிய வெளிவிவகார அமைச்சர் மேற்கூறியபடி வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்ததும் இலங்கை அரசு இனமுரண்பாட்டை இராணுவ ரீதியிலே கையாள முற்பட்டதும், இலங்கை மனித உரிமை மீறல்களின் விளைநிலமாகியது ஆச்சரியப்படுவதற்கில்லை. மே 18 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசும் ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களும் தம் பங்கைக் கொண்டுள்ளன. இம்மனித உரிமை மீறல்களை முற்றாக தவிர்த்திருக்கக் முடியாது போனாலும் வெகுவாக அதனை மட்டுப்படுத்தி இருக்க முடியும்.

சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதனை தனது அரசியலமைப்பிலும் கொண்டுள்ள இலங்கை அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை.

TE_LTTE_Pirabaஇலங்கை அரசு பேரினவாத ஒடுக்குமுறை அரசு என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட விடுதலை அமைப்புகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிலும் பார்க்க மோசமான மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் மீதும் சக போராளிக் குழுக்களின் மீதும் சக இனமக்களின் மீதும் மேற்கொண்டன. இவ்வகையான மனித உரிமை மீறல்கள் மே 18 2009 வரை இலங்கை அரசினாலும் அதற்கு ஆதரவாக ஆயுதக் குழுக்களினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை கூட அவரவர் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப ஆறாயிரத்தில் இருந்து ஐம்பதினாயிரம் வரை மதிப்பிடப்படுகின்றது.

யுத்தம் எப்போதுமே மிகக் கொடுமையானது. யுத்தத்தில் முதலில் பலியாக்கப்படுவது உண்மை. இப்போது யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகியும் யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகள் வெளிவரவில்லை. இந்த யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளை ஆராய்வதில் அதனைக் கண்டறிவதில் இலங்கை அரசுக்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ எவ்வித அக்கறையும் இல்லை. இவர்களுடைய கவனம் முழுவதும் எதிர்த் தரப்பை அரசியல் ரீதியாக முறியடிக்க மனித உரிமையைப் பயன்படுத்த முற்படுகின்றனர்.

ஓகஸ்ட் 25 2009ல் சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்கின்ற காட்சி பிரித்திhனியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது. (http://link.brightcove.com/services/player/bcpid1529573111) இதே போன்று மற்றுமொரு இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்ற காட்சி படங்களாக மே 2010ல்  வெளிவந்தள்ளது. இக்கொடுரங்கள் 2009 ஜனவரியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது. மேலும் மே 18 2010ல் பிரித்தானிய சனல் 4 செய்திக்கு பேட்டியளித்துள்ள யுத்த களத்தில் நின்ற முன்னிலை இராணுவ வீரர் சரணடைந்த பொது மக்களையும் புலிகளையும் சித்திரவதை செய்ததாகவும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். வே பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் தன்னுடைய மெய்பாதுகாவலர்களுடன் சரணடைந்த போது தகப்பனின் இருப்பிடத்தைக் கேட்டு சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

மே 21 2009ல் தேசம்நெற்றில் வெளியான இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதப்பட்டு உள்ளது. மேலும் மே 17 2009ல் நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்என்ற கட்டுரையில் சரணடைய உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு உள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவற்றுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தேன். ஏப்ரல் 16 2009ல் வெளியான கட்டுரையில் புலிகளின் கையில் ஆயுதம் எதற்கு என்ற கேள்வியை ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். பெப்ரவரி 23 2009ல் ”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் ரவி சுந்தரலிங்கத்தின் நேர்காணல் வெளியானது. இதே போன்று பெப்ரவரி 06 2009ல் ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் என்று சிவாஜிலிங்கம் வழங்கிய நேர்காணல் தேசம் நெற்றில் வெளியானது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2008 நவம்பரிலேயே இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ள மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் தெருநாடகம் ஒன்றை தேசம்நெற் நடத்தி இருந்தது.

Pearl_Logoவன்னி இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தடுப்பதற்கு குறைந்தபட்சம் அதன் அவலத்தை மட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இருந்தும் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டது. இன்று மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அன்று யுத்த களத்தின் யதார்த்தத்தை ஏற்கமறுத்து அடம்பிடித்தனர். இன்னும் சொல்லப்போனால் யுத்தகளத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேசம் முயற்சிகள் எடுக்க முயன்றபோது அதற்கு எதிராக அறிக்கைகள் கூட வெளியிடப்பட்டது. யுத்தத்தின் கோரத்தில் சிக்குண்ட மக்களுக்கு அதுவே அவர்களின் பூர்விக மண் என்றும் அங்கிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்றும் இந்த அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டது. முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் என்ற மார்ச் 3 2009ல் வெளியான செய்திக்கட்டுரையில் ‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.’ என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற தமிழ் ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் பெரும்பாலும் அன்று யுத்தத்தின் உண்மைத் தகவல்கள் மக்களைச் சேரவிடாமல் இருட்டடிப்புச் செய்தன. யுத்தத்திற்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் களநிலவரம் பற்றிய மயையிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த ஊடகங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களது வலையில் இம்மக்கள் வீழ்த்தப்பட்டனர். அதனால் அவர்களால் வன்னி மக்களை அவலத்தில் இருந்து மீட்க முடியாதது மட்டுமல்ல தங்களை அறியாமலேயே வன்னி மக்களின் அழிவுக்கு இம்மக்களும் உடந்தையாக்கப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை படிப்படியாக மீறிவந்திருக்கின்றது. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இறுதியில் தமிழ் தலைமைகள் தாங்கள் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்போம் என்றும் அதற்கு தாங்களே ஏகபோக தலைமை என்றும் அறிவித்தனர். இந்தச் சூழலில் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை யாருடன் யுத்தம் புரிகின்றோமோ அவர்களிடம் ஒப்படைக்க முடியுமா? அதனால் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற பொறுப்பு தமிழ் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் உரியது. இந்தப் பொறுப்புக்களை பொறுப்பற்ற விதத்தில் தட்டிக்கழித்தது மட்டுமல்ல தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியவர்களே அம்மக்களின் உரிமைகளை மட்டுமல்ல அம்மக்களையே பணயம் வைத்து யுத்தம் புரிந்தனர்.

இன்றும் இந்த உண்மையை இருட்டடிப்புச் செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் சொல்லும்படி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். எதிரியிடம் நியாயம் கேட்கும் தமிழ் அரசியல் தலைமைகள் இன்னமும் தமது சொந்த மக்களுக்கு நியாயம் சொல்லவில்லை. ‘ஏன் பேச்சுவார்த்தைகளைக் குழப்பினீர்கள்? ஏன் யுத்தத்திற்குச் சென்றீர்கள்? ஏன் வன்னிக் குழந்தைகளை பலாத்காரமாக இழுத்துச் சென்றீர்கள்? ஏன் யுத்த பிரதேசத்திற்குள் மக்களை பலாத்காரமாகத் தடுத்து வைத்தீர்கள்? ஏன் யுத்தத்தில் இருந்து தப்பியோடிய மக்களைச் சுட்டுக் கொன்றீர்கள்?’ ஏன் இது பற்றியெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்று வாய் திறக்கவில்லை?’

இந்த நாடுகடந்த தமிழீழம் குழுவும் வட்டுக்கோட்டைக் குழுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளும் மௌனம் காத்து வன்னி மக்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்தனர். எதிரியிடம் கேட்ட நியாயத்தில் சிறிதளவையாவது தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கியும் தங்களை நோக்கியும் கேட்டு இருந்தால், இந்த உண்மைகளை அன்றே வெளியே கொண்டுவந்திருந்தால் இந்த இழப்புகளை முற்றாகத் தடுத்திருக்காவிட்டாலும் பெருமளவில் மட்டுப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் எதிரியிடம் நியாயம் கேட்பதற்கு இருந்த வெளி தங்கள் சொந்தத் தலைமைகளிடம் கேட்பதற்கு இருக்கவில்லை என்பதே யதார்த்தம். தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களுக்கு எண்ணற்ற நியாயங்கள் இருந்தது. இன்றும் இருக்கின்றது. ஆனால் தமிழ் தலைமைகளின் பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் தமிழ் அமைப்புகளின் குறுகிய அரசியல் நலன்களும் வறட்டுத்தனமான அரசியலுமே அந்த நியாயங்கள் அனைத்தையும் சிதைத்து வெறும் மனித அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற கீழ்த்தரமான நிலையை ஏற்படுத்தியது.

LTTE_Training_Civiliansமே 18 2009 முள்ளிவாய்காலுக்கு முன்னதாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அரசியல் மையத்தை சற்று பார்ப்பது இங்கு பொருத்தமானது. மாவிலாறு அணையை மூடுவதற்கு முன்னதாகவே மக்களை ஆயுத மயப்படுத்துகிறோம் மக்களுக்குப் பயிற்சி அளிக்கின்றோம் என்ற புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் வெளிவரத் தொடங்கியது. மாவிலாறு அணை மூடப்பட்டு யுத்தத்திற்கு அழைப்பு விடப்படுகின்றது. சர்வதேசம் எங்கும் தமிழ் மக்கள் வாழும் நகரங்களில் பொங்கு தமிழ் நடாத்தி யுத்தத்திற்கான முரசு கொட்டப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு வேண்டுமானால் யுத்தம் என்பது அவர்களின் குழந்தைகள் விளையாடும் ‘எலக்ரோனிக் கேம்’ அக இருக்கலாம். ஆனால் தாயக மக்களுக்கு யுத்தம் என்பது இரத்தமும் சதையும் கொண்ட அவலம். மனித உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறுவதற்கான விளைநிலம் தான் யுத்தகளம். இந்த யுத்தகளத்தை அமைத்துவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவது பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதைப் போன்றது.

யுத்த முரசு கொட்டிய போதும் யுத்தத்தின் ஆரம்பக் கட்டத்திலும் மனித இழப்புகளும் அவலங்களும் பற்றிக் கேள்விகளை எழுப்பிய போது இவர்கள் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கவில்லை. ‘விடுதலைப் போராட்டத்தில் இவை தவிர்க்க முடியாதவை. இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைய முடியாது.’ என்றெல்லாம் இவர்கள் ழுழங்கி யுத்த வேள்விக்கு நெய்வார்த்தனர்.

Kosovo_Tamil_Eelamபின்னர் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்த வேளையில் கொசோவோ, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற அவலங்களை முன்வைத்து வன்னி மக்களை யுத்த வேள்விக்கு பலியிடவும் தயாராய் இருந்தனர். தமிழ் மக்களின் மனித அவலம் மோசமாக மோசமாக கொசோவோ, கிழக்கு தீமோர் போன்று சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்றும் விளக்கம் தரப்பட்டது. தமிழ் மக்கள் மனித அவலத்தின் உச்சியில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் தலைமைகளும் ஊடகங்களும் அமைப்புகளும் தமிழீழத்தை நெருங்கிவிட்டதாகவே பிரச்சாரம் செய்தன. வன்னி மக்கள் யுத்த அவலத்தின் வலியில் துடித்துக் கொண்டிருந்த அப்போதும் இவர்கள் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவில்லை.

மே 18 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்து தற்போது ஓராண்டு ஆகியுள்ள வேளையில் கோமாவில் இருந்து எழும்பியவர்கள் போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுவிட்டதாக கோசம் எழுப்புகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் தலைமைகளும் ஊடகங்களும் அமைப்புகளும் இன்று எழுப்புகின்ற மனித உரிமை மீறல் தொடர்பான கோசங்கள் அவர்களின் அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக தங்கள் குறுகிய அரசியல் நலன்களையும் வியாபாரங்களையும் பேணுவதற்காக வைக்கப்படுகின்ற கோசங்களே. இவர்கள் மனித அவலத்தை அரசியலாக்கி மீண்டும் ஒரு மனித அவலத்திற்கு வித்திடக் கூடியவர்கள்.

அதேசமயம் இலங்கையில் வன்னி யுத்தம் உட்பட இதுவரை மீறப்பட்டு வந்த மனித உரிமைகள் தொடர்பான தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் நியாயமான குரல்கள் வலுப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயங்கள் கிடைப்பதற்கான வழி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமூகங்களிடையே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சமூகங்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் மீளுறவும் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அவலங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது வெறுமனே நீதி கிடைப்பது ஆகாது. நீதி என்பதும் ஒரு வகையில் பழிவாங்குவதே.

நூறுநாட்கள் ருவாண்டாவில் இடம்பெற்ற ருட்சி இனத்தவர்களின் படுகொலைகள் 1994 யூலை அளவில் குற்ரு அரசு சரிந்து Rwandan Patriotic Front (RPF) ருட்சி அரசு ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. 1994ல் நூறுநாட்களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் 120 000 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். விசாரணைகளை மேற்கொள்ள 100 வருடங்கள் ஆகும் என மதிப்பிட்ட ஆர்பிஎப் அரசு குறைந்த குற்றம் இழைத்த 20 000 பேரை 2003ல் விடுதலை செய்தது. 2004ல் குற்றங்களை ஒப்புக் கொண்ட 30 000 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பவர்கள் விடுவிக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற சட்டத்துறை சார்ந்தவர்கள் அல்லாமல் கிராமப் பெரியவர்களின் தலைமையில் தொகையாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. ஆனாலும் 1994 யூலையில் ஆர்பிஎப் அரசமைத்ததை அடுத்து 2 மில்லியன் குற்ரு இனத்தவர்கள் கொங்கோவில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்து குற்ரு ஆயுதக் குழுக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் 5 மில்லயன் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கொன்கோலிஸ் ருட்சி ஆயுதக் குழுவும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. தாங்கள் ஆயுதத்தை வைத்தல் தங்கள் மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என அவர்கள் கருதுகின்றனர்.

ஒரே மொழி பேசுகின்ற ஒரே ஒரே பாரம்பரியத்தையுடைய ஒரே பிராந்தியத்தில் வாழ்பவர்களான ருட்சி – குற்ரு சமூகக் குழுக்களால் மீளுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அங்கு இனப்படுகொலைக்கு உள்ளான ருட்சி இனத்தவர்களே ஆட்சியைக் கைப்பற்றிய போதும் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்ட போதும் அங்கு இனமுரண்பாடு இன்னமும் கூர்மையாகவே உள்ளது. 1994 இனப்படுகொலையில் கொல்லப்பட்டது போன்று ஐந்து மடங்கு மக்கள் 5 மில்லியன் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் பாதிக்கப்பட்ட சாட்சிகள் பலரும் தேடிக் கொல்லப்பட்டனர்.

இந்த வகையில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட Truth and Reconciliation Commission – உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு ஒரு முன்னுதாரணமாகும். 21000 சாட்சியங்களின் வாக்குமூலங்களுடன் 3500 பக்கங்களில் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதை தென்னாபிரிக்காவின் இனஒடுக்குமுறை அரசின் அதிபராக இருந்த டிபிள்யு டி கிளார்க், இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினருமே எதிர்த்தனர், அவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையிலும் இறங்கினர். இவ்வறிக்கை எவ்வித பாரபட்சமும் இன்றி சகல தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தது. இம்மனித உரிமை மீறல்களில் டபிள்யு டி கிளார், வின்னி மண்டேலா உட்பட முக்கிய அரசியல் புள்ளிகளினது பாத்திரம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Nelson_Madela_and_Desmond_TuTuஉண்மையறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அச்பிசப் டெஸ்ட்மன் ருரு ”Fellow South Africans, accept this report as a way – an indispensible way – to heal. – சக தென்னாபிரிக்கர்கள் இந்த அறிக்கையை ஏற்பட்ட காயங்களில் இருந்து குணம் அடைவதற்கான வழியாக தவிர்க்க முடியாத ஒரே வழியாகக் கொள்ள வேண்டும்” என இவ்வறிக்கையை அப்போதைய தென்னாபிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவிற்கு கையளிக்கும் போது தெரிவித்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு கருத்து வெளியிட்ட நெல்சன் மண்டேலா “The wounds of the period of repression and resistance are too deep to have been healed by the TRC alone. We are extricating oursleves from a system which that insulted our common humnaity by dividing us from one another on the basis of race and setting us against each other, as oppressed and oppressor. – ”ஒடுக்குமுறையும் அதற்கான எதிர்ப்பும் நிகழ்ந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை. உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவினால் மட்டும் அவை குணப்படுத்தக் கூடியவையல்ல. எங்களுடைய பொது மனிதத்துவத்தை இழிவுபடுத்துகின்ற இன அடிப்படையில் ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரிக்கின்ற அமைப்புமுறையில் இருந்தும் எங்களை ஒடுக்கப்படுபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றதில் இருந்தும் நாங்கள் எங்களை விடுவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா, டெஸ்மன்ட் ருரு போன்ற மாண்புமிகு தலைவர்களால் தென்னாபிரிக்கா இன ஒடுக்குமுறையில் இருந்து தன்னை குறிப்பிடத்தக்க அளவில் விடுவித்துக் கொண்டது மட்டுமல்ல சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக மற்றுமொரு இனஒடுக்குமுறையை தாங்கள் மேற்கொள்ளாமலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குச் செல்வதில் இருந்தும் தென்னாபிரிக்காவை தற்காத்துக் கொண்டனர். இதன் மூலம் சர்வதேசத்திற்கு இனமுரண்பாடுகளை அணுகுவதற்கும் பகைமையுண்ட சமூகங்களிடையே மீளுறவை ஏற்படுத்துவதற்கான யதார்த்தமான செயன்முறையை வழங்கி உள்ளனர்.

உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு மூன்று குழுக்களைக் கொண்டிந்தது. அதில் முதன்மையாக இருந்தது மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகளை அறிவது. இக்குழு பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளையும் அவர்களின் சாட்சியங்களையும் பதிவு செய்தது. இரண்டாவது குழு இரு தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தது. மூன்றாவது குழு பொது மன்னிப்பு அளிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தது. தங்களுடைய செயற்பாடுகள் பற்றி முழுமையாக ஒத்துக்கொண்டு உண்மையை அறிய உதவியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதில் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் புதிய தேசத்தை கட்டமைப்பதற்கு உண்மைகளை வெளிக்கொண்டுவந்து மீளுறவை ஏற்படுத்துவதே சரியான வழியாக கணிக்கப்படுகின்றது.

gl-hilary.bmpரமிழ்ஸ் போர் ஓபாமா என்று ‘அணிவகுத்த தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற’ ஒபாமா அரசு இலங்கை அரசின் Lessons Learnt and Reconciliation Commission – பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு  என்ற ஆணைக்குழுவை வரவேற்றுள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து மே 19 வரையான நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்றதற்கான காரணங்களையும் சுழலையும் அறிவதும் அதற்கு குறிப்பிட்ட நபரோ, குழுவோ, நிறுவனமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமா என்பதை கண்டுகொள்வதம் எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதுமே இந்த ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடாக உள்ளது. இங்கு மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், பற்றி எதனையும் இலங்கை அரசு குறிப்பிட்டு இருக்கவில்லை. இது ஐ நா வின் விசாரணைக் குழுவை அமைத்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பதிலாக இந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தென்னாபிரிக்காவின் உண்மையை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவில் இருந்து இக்குழு அதன் அடிப்படை நோக்கத்திலேயே வேறுபடுவதால் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவின் உருவாக்கம் இலங்கை அரசு பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கின்றது என்ற ஐயப்பாட்டையே தருகின்றது.

Mahinda Rajapaksaஇலங்கை அரச படைகள் மனித உரிமைகளை மீறவில்லை, இந்த யுத்தத்தில் பொது மக்களின் ஒரு சொட்டு இரத்தமும் சிந்தவில்லை போன்ற உண்மைக்கு முற்றிலும் முரணான விடாப்பிடியான இலங்கை அரசின் கருத்துக்கள் இவ்வரசு உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை என்பதனையே காட்டுகின்றது. தவறுகளை ஏற்றுக்கொள்ளாத எவரும் அத்தவறுகளில் இருந்து தம்மைத் திருத்திக்கொள்ள முடியாது. அதற்கு இலங்கை அரசும் விதிவிலக்கல்ல. இலங்கை அரசு தென்னாபிரிக்காவின் பாடங்களைக் கற்றுக்கொண்டு உண்மையை அறியவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். இங்கு உண்மையை அறிவது தண்டனை வழங்குவதற்காக அல்ல அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு புதிய பாதையில் மீளுறவை ஏற்படுத்தி பயணிப்பதற்காகவே.

இலங்கை அரசு மனித உரிமைகள் பற்றிய உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கின்றதன் அடிப்படைக் காரணம் அது வெற்றி பெற்ற தனது இராணுவத்தை தண்டனையை நோக்கித் தள்ளிவடும் என்பதும் அதனால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற அச்சமும். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்களில் இருந்து எழுகின்ற மனித உரிமைக் கோசங்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு எப்படியாவது இலங்கை அரசைப் பழிவாங்கி விடவேண்டும் என்கின்ற ஆவல். இந்த கோல்போஸ்ட்டுகளுக்கு இடையே மனித உரிமைகள் என்கின்ற பந்து உதைபடுகின்றது.

இவற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு முரண்பட்டு, பிளவுண்டுள்ள சமூகங்களிடையே எதிர்காலத்தில் இவ்வாறான துயர் மிகு அவலங்கள் நிகழாது என்ற அச்சத்தைப் போக்கும் வகையிலும் சமூகங்களிடையே நம்பிக்கையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் வகையில் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உண்மைகளை அறியவும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவையானாலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நட்ட ஈட்டை வழங்கி அவர்களுடைய புனர்வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும். இங்கு கேட்கப்படுகின்ற நீதி தண்டனை வழங்குவதற்கான பழிவாங்குகின்ற நீதியல்ல மாறாக சமூகத்தின் மீளுருவாக்கத்திற்கான நீதி.

Show More
Leave a Reply to Jeyabalan T Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    பல்லாயிரக் கணக்கான மக்களினினப் படுகொலையும், இன்றைய வதைமுகாம் வாழ்வும், தமிழர்நில சிங்கள ஆக்கிரமிப்பும் நடந்தபடி இருக்க, மனித உரிமை, போர்க்குற்றம், நாடு கடந்த அரசு என்று தமிழ் அரசியல் வாதிகளும்,

    தமிழர்களின் தார்மீக உரிமைகளை மூர்க்கத்தனமாக சிதைப்பதிலும், இனியொரு விடுதலைப் போராட்டம் முனைப்படையாமல் நுனியில் கருக்கவும், சிங்கள பவுத்த பேரினவாதத்தை செழுமைப்படுத்துவதிலும் சிங்கள அரசியல் வாதிகளும் தொடர்ந்து செல்கிறார்கள்.

    இதற்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் சர்வதேச கழுகுக் கண்களுக்கு வனப்பாக இருக்கிறது.

    இனி சிங்கள-தமிழ் போராட்டம்,தம்மிடையே நடப்பதாக நம்பியவர்கள், வல்லாதிக்கங்களுக்காக மீண்டும் வாழ்விழந்து போகப் போகிறார்கள்.

    ….யானும் இட்ட தீ மூள்க,மூள்கவே என்றபடி ‘பட்டினத்தாராக’ வேண்டியதுதான்,வேறு வழி…….

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    மனித உரிமை = தமிழர்களுக்கு மட்டுமான உரிமை= புலிகளின் உரிமை

    இதை பின்வரும் இரண்டு சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

    3ம் திகதி மே 2009 UK பாராளுமன்ற சதுக்கத்தில் சட்டத்தரணிகள் உண்ணா நோன்பு இருக்கின்றனர். வழமை போல் இலங்கை அரசை மாத்திரம் போர் நிறுத்தக் கோரும் சனக் கூட்டம். அந்த நேரத்தில் வெள்ளை துணியில் கறுப்பு நிறத்தில் பொறிக்கப்பட்ட வாசகத்தை கொண்ட banner ரை நான் தாங்கியிருந்தேன். அதிலே பொறிக்கப்பட்டிருந்த வாசகம் ” If you’re neutral in situations of injustice you’ve chosen the side of the oppressor” என்பதாகும். இது archbishop Desmond Tutu வின் வாசகம்.

    அப்போது அங்கே IBC radio வுக்காக நேர்முக வர்ணனை கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் பண்டிதரான பொறியியளாளர் ஒருவர் இந்த வாசகம் முற்றும் முளுதாக அரசாங்கத்ததையே oppressor ராக காட்டுவதாக கற்பனை செய்து கொண்டு அதை வானொலியிலும் வர்ணிக்கின்றார். இப்போது என்னிடம் mic தரப்படுகின்றது. நான் நேரடி ஒலிபரப்பு இணைப்பில் இருந்தேன். இந்த வாசகத்தின் உண்மை பொருளையும் எனது நோக்கம் நடந்து கொண்டிருக்கும் injustice க்கு பொறுப்பான எல்லோரையும் கண்டிப்பதற்கே இதை தாங்கி நிற்கின்றேன் என்றேன். இந்த கருத்து நேரடியாக ஒலிபரப்பப்பட்டதா என்று எனக்கு தெரியாது. சற்று நேரம் கழித்து தீபம் தொலைகாட்சி அதை ஒளிபரப்பிய போது ஒரு சட்டத்தரணி அரசாங்கத்தை மாத்திரம் இது குறிப்பது போல் பேட்டி கொடுக்கின்றார். நான் இருபக்க injustice சையும் சாடுகிறேன் என்று தெரிந்தும் கூட.

    அடுத்த சம்பவம், மே/ஜுன் மாதம் 2009 Miss. Jane Jananayagham( independent candidate for EU Parliament Election from UK) Al- Jesira TV க்கு பேட்டி கொடுக்கிறார். காரசாரமாக இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை எடுத்து கூறுகிறார். அப்போது புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அவரின் பதில் ”அதை புலிகளிடம் சென்று கோளுங்கள்” என்பதாகும்.

    இப்போது எனது சமன்பாட்டை மீண்டும் சரி பாருங்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகள் உதை வாங்கி ஓடும்போது வெளிநாட்டு புலிகள் “மனித உரிமை” பற்றி கதைப்பது வழக்கம். புலிகளின் “மனித உரிமை” மீறல்கள் பற்றி இன்றும் “மவுனம்” சாதிக்கும் “தமிழ் வீரர்கள்” இப்போது இலங்கை அரசுக்கெதிராக சாடுவது இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நல்வாழ்வு பற்றியதாக இருக்கவில்லை.

    வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தங்களின் இருப்புக்களை பலப்படுத்த பல வேஷங்கள் போடுகிறர்கள்.

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    //இப்போது எனது சமன்பாட்டை மீண்டும் சரி பாருங்கள்.
    மனித உரிமை = தமிழர்களுக்கு மட்டுமான உரிமை= புலிகளின் உரிமை// Mohamed Nisthar
    இது எவ்வாறு சமன்பாட்டில் வரையறுக்கப்படும் என்பதை சமன்பாடு பற்றி தெரிந்தவர்கள் இலகுவாய் தெளிந்து கொள்வர்.

    ஒடுக்கப்பட்ட இனக் குரலின் வாக்கியத்தை எடுத்து, உலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தையும், அதே உலகத்தால் நிராரிக்கப்பட்ட ‘பயங்கரவாத அமைப்பையும்’ சமன்படுத்தி வெளிக்காட்ட, ‘பயங்கரவாத ஆதரவாளர்’ அரங்கைப் பாவித்து விட்டு, இப்போது வந்து “நான் எதையோ செய்து, எங்கோ முட்டையிட்டேன். பாருங்கள் என் குஞ்சை, அவர்களுக்கு சரியாக அடை காக்கத் தெரியாது” என்று கூறுகிறீர்கள் நன்றாக.

    விடுதலை, போராட்டம், புரட்சி என்று எடுபட்டு வந்து புறங்கையை நக்கியவர்கள், புறங்காலால் தள்ளப்பட்டால், இழந்து போன எலும்புத் துண்டுக்காய் எங்கையேனும் நாக்குத் தொங்கப் போடலாமா?

    ஒரு போராளி என்பவன் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்பவனே தவிர, ஓங்கி நிற்கிறதின் பின்னால் ஓடுபவனல்ல.

    ‘நோய் நாடி, அதன் முதல் நாடி’ என்பதே தீர்வுக்கான சரியான வழி; மனித உரிமை என்கிற மாயமானின் பின்னே அல்ல, புரிந்துணர்வு என்ற பொய்ம்மானின் பின்னேயுமல்ல.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //ஒரு போராளி என்பவன் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்பவனே தவிர, ஓங்கி நிற்கிறதின் பின்னால் ஓடுபவனல்ல.// தமிழ் வாதம்
    ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்கிறதெல்லாம் நல்ல விசயம் தான். ஆனால் தங்களுக்கு ஆபத்து வருகிறது என்றவுடன் ஒடுக்கப்பட்ட மக்களைப் பணயம் வைத்து தப்பிக்க நினைத்தது தான் இங்கு பிரச்சினை.

    //மனித உரிமை என்கிற மாயமானின் பின்னே அல்ல, புரிந்துணர்வு என்ற பொய்ம்மானின் பின்னேயுமல்ல.// தமிழ் வாதம்
    என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

    ஒருபுறம் அரசாங்கம் ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. மறுபுறம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்களும் அம்மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளைத் திருப்புகின்றனர். இலங்கைக்கு வெளியே உள்ள புரட்சிகர சக்திகளோ அந்த மக்கள் வலியுடன் இருந்தால் தான் போராட்டம் கூர்மையடையும் அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை நீக்க உதவக் கூடாது என்கின்றனர். அப்ப ஒடுக்கப்பட்ட மக்கள் என்ன தான் செய்ய?

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    போராளி என்றால் புலி, இலங்கைக்கு வெளியே உள்ள புரட்சிகர சக்திகள் என்றால் புலிகள் என்கிற உங்களது சமன்பாடுகள் சரியாக அமையவில்லை. இது மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகப் படுவதுதான். எனது கருத்துகளும் உங்கள் கேள்விகளும் தொடர்பற்று நிற்கின்றன.
    புலிகள் தவறிப் போனார்கள் என்பதால் எமது போராட்டமே தவறு என்பதன் மூலம், ஒடுக்குமுறையாளனை உயர்த்தி விடுவது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆன்மாவை சிதைத்து விடுகிறீர்கள்.
    ‘மகாவம்சமாக’ கட்டியெழுப்பப்பட்ட சிங்கள பவுத்த பேரினவாதத்தின் முன்னே, தமிழினத் தலைமைகள் இலங்கையராகவே திகழ்ந்தது எமக்கு முன்னெ நடந்ததுதான். பேரினவாத அடக்குமுறைகளின் பின்னமே தமிழினத் தேசியம் தற்காப்பு நிலையில் உருவானது.
    ஆயினும் வரலாறு இன்றுவரை சுழல்வது இப்படித்தான்.

    சுந்தரலிங்கம்-பொன்னம்பலம்.
    பொன்னம்பலம்- செல்வநாயகம்.
    பிரபாகரன் – உமாமகேஷ்வரன்.
    காஷ்ரோ – கே.பி.
    தமிழ்த் தலைவர்கள் தம் தனிமனித முரண்பாட்டால் தமிழர்களை அழித்துப் போனார்கள்.பேரினவாதத்திற்கு தமிழர்களை அர்ப்பணம் செய்தார்கள்.

    அதற்காக தமிழர்தம் தலை விதி அழிந்து போவதா?

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை.ஓரினம்,ஒரு நாடு ஒருபோதும் தீர்வுக்கு இட்டுச் செல்லாது.

    வீரகேசரி செய்தி இவ்வாறு சொல்கிறது.(http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23946)

    பயிற்சிகள் போதும்; விடுதலை தாருங்கள்..!:முன்னாள் புலிப் போராளிகள் வேண்டுகோள்.

    விடுதலை……!!

    Reply
  • NANTHA
    NANTHA

    தங்களுடைய குழுநலஙளுக்காக காவப்படும் அல்லது ஏவப்படும் ஒர் காரணம்தான் “அரச ஒடுக்குமுறை” என்ற வசனம்.

    எல்லா வகையிலும் “ஒடுக்கப்பட்ட” மக்களான தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கமும் பிறக்காத வேளையில் யாழ்ப்பணத்தில் உள்ள அதாவது தோட்டத்தொழிலாளர்களை விட பல மடங்கு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் “ஒடுக்குமுறை” தஙகள் மீது அரசு செய்கிறது என்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதன் பலாபலன் இப்போது தெரிந்துள்ளது.

    எறும்பு பிரச்சனையை “பூதம்” என்று காட்டினால் யார் நம்புவார்கள்?

    Reply
  • thurai
    thurai

    //சுந்தரலிங்கம்-பொன்னம்பலம்.
    பொன்னம்பலம்- செல்வநாயகம்.
    பிரபாகரன் – உமாமகேஷ்வரன்.
    காஷ்ரோ – கே.பி.
    தமிழ்த் தலைவர்கள் தம் தனிமனித முரண்பாட்டால் தமிழர்களை அழித்துப் போனார்கள். பேரினவாதத்திற்கு தமிழர்களை அர்ப்பணம் செய்தார்கள். அதற்காக தமிழர்தம் தலை விதி அழிந்து போவதா?//தமிழ்வாதம்

    இந்தக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

    //ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஓரினம், ஒரு நாடு ஒருபோதும் தீர்வுக்கு இட்டுச் செல்லாது// தமிழ்வாதம்

    இதுவே இன்று விவாதிக்கப்பட வேண்டியதொன்று.

    முதலில் ஈழத்தமிழர் தம்மை ஓர் இனமென்று கூறுவதற்கு எந்தவகையில் தகுதி பெற்ரிருக்கின்றார்கள். ஒருநாட்டினுள் பிராந்திய ரீதியாக் மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் தாழ்த்தி வாழ்வதிலும், இதற்காக சிங்கள அரசுடன் பேரம் பேசுவதிலுமே யாவ்ரும் முன்நிற்கின்றனர்.

    ஆயுதப்போர் தொடங்கும்போது எங்களிற்குள் இருந்த பகைமைகள் மறைக்கப்பட்டிருந்தன்வே தவிர மறக்கப்படவில்லை. இதுவே இன்றும் புலம்பெயர் நாடுகளிலும் தொடரும் கதை. முதலில் எங்களிற்கு என்றொருநாடு வேண்டுமென்பதற்கு முன். நாங்கள் அனைவரும் தமிழர்களே என்ற உணர்வையே நம்மிடையே வளர்க்க வேண்டும்.

    அதனை விடுத்து சிங்கள பேரினவாதம், தனிநாடு என்று நம்மிடையே தோன்றும் உணர்ச்சிகள் யாவும் தமிழரைத் தமிழரே அழிக்கும் தீயாகவே இருக்கும்.

    முதலில் தமிழர் தமிழரிற்குள்ளே தமிழரின் அழிவில் ஆனந்தமாக வாழும் வாழவிரும்பும் தமிழர்களை இனம் கண்டு கொள்வதே விடுதலையின் முதற்படியாக அமையும்.

    துரை

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    துரை!
    எம்மை தேசிய இனமாக வளர்த்து விட்டதே ஒடுக்குமுறையாளந்தான். அதைத்தான் பேரினவாத அடக்குமுறைகளின் பின்னமே தமிழினத் தேசியம், தற்காப்பு நிலையில் உருவானது எனக் குறிப்பிட்டு இருந்தேன்.

    மற்றும் தமிழர்களை இனம் கண்டு கொள்வது என்கிற உங்கள் சிந்தனை சகோதரப் படுகொலைகளின் தோற்றுவாய்.

    வெளிநாட்டுத் தமிழர்களின் கருத்தாலும்,பணத்தாலும் ஆக்கிரமிக்கப் படாத தமிழ் நிலத் தலைமையை தானெழுந்து வரவிடுவதே எமது விடுதலையின் முதற்படி என்பது என் தாழ்மையான கருத்து.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    தமிழ் வாதம்,

    ஜெயபாலனும், நந்தாவும் எனது job சுலபமாக்கிவிட்டார்கள். ஆகவே மீதமுள்ள விடயத்தை பார்ப்போம்.

    1. ” பயங்கரவாத ஆதரவாளர் அரங்கை பாவித்து விட்டு ” அந்த அரங்கை பயங்கரவாத அரங்கு என்று confirm பண்னியதற்கு நன்றி. மேலும் பயங்கரவாத ஆதரவாளர்களின் இடத்துக்கு போய் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கையை வெளிப்படுத்துவதென்பது முற்றிலும் சரியான விடயம் அல்லவா? அதற்கு ஒரு துணிவும் வேண்டும் அல்லவா? “நெற்றிக் கண்னை காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று நான் சொன்னால் அது ஏன் உங்களுக்கு பிழையாகப்படுகிறது.

    2. ” விடுதலை, போராட்டம், புரட்சி என்று எடுபட்டு வந்து புறங்கையை நக்கியவர்கள், புறங்காலாள் தள்ளப்பட்டவர் இழந்து போன எலும்பு துண்டுகளுக்காய் எங்கேனும் நாக்கை தொங்க போடலாமா?” கொஞ்ஞம் விளக்கமாக சொல்வீர்களானால் பதில் சொல்ல இலகுவாக இருக்கும்.

    Reply
  • thurai
    thurai

    //எம்மை தேசிய இனமாக வளர்த்து விட்டதே ஒடுக்குமுறையாளந்தான். அதைத்தான் பேரினவாத அடக்குமுறைகளின் பின்னமே தமிழினத் தேசியம், தற்காப்பு நிலையில் உருவானது எனக் குறிப்பிட்டு இருந்தேன்./தமிழ்வாதம்

    இந்த விடயத்தில் தமிழரிடமும் பாரிய தவறுகள் உண்டு. தன் சமூகத்துடன் இணைந்து வாழாமலும், இணைந்து வாழவிடாமலும் சில தீய சக்திகள் அன்றும் இன்றும் தமிழரிடம் உள்ளதே இந்த நிலைமைக்குக் காரணம்.

    சிங்கத்துடன் மோத புறப்பட்ட நாங்கள், இன்று சிங்கத்தின் கூட்டுக்குள் விழுந்து கிடக்கின்றோம். இதிலிருந்து முதலில் எப்படித் தப்புவதென்பதே இன்றைய ஈழ்த்தமிழரின் நிலமை. இதற்காக் அறிவாற்ரல் மிக்கவர்களின் பங்களிப்பே இன்று எங்களிற்கு அவசியம். இவர்கள் நம் மண்ணிலெயே தோன்ற வேண்டும். புலத்திலல்ல.

    துரை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    ஓடுக்கப்பட்ட மக்களுடன் நிற்க வேண்டும் என்கிறோம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிறோம் அப்படியானால் இந்த மக்களை அழிவில் இருந்து காக்க வேண்டி பொறுப்பு யாருடையது.

    இலங்கை அரசு ஒடுக்குமுறையை மேற்கொள்கின்ற அரசு. அதனை நாம் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளோம். அப்படி இருக்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களை ஒடுக்குமுறையில் இருந்தும் அழிவில் இருந்தும் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு யாருடையது?

    அன்று முள்ளிவாய்க்கால் நோக்கி அழைத்துச் சென்ற அதே அரசியல் தலைமைகள் தான் இன்றும் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குகின்றனர். நபர்கள் தான் மாறியிருக்கின்றனரே அல்லாமல் அவர்களின் அரசியல் மாறவில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சிங்கத்துடன் மோத புறப்பட்ட நாங்கள், இன்று சிங்கத்தின் கூட்டுக்குள் விழுந்து கிடக்கின்றோம். இதிலிருந்து முதலில் எப்படித் தப்புவதென்பதே இன்றைய ஈழ்த்தமிழரின் நிலமை.//
    இதை விரிவு படுத்தும் போது நாம் இன்னும் பாதிக்கபடுகிறோம் என்பது உன்மையாகிறது;

    Reply
  • NANTHA
    NANTHA

    ஒடுக்கப்பட்ட தமிழர்கள் யார்? தமிழர்களுக்கு பிரச்சனை என்போரின் நடவடிக்கைகள் “தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்யும்” உரிமையை தாங்களாகவே எடுத்துக் கொண்டவர்கள் என்பதையே வரலாறு காட்டிநிற்கிறது.

    தமிழரசுக்கட்சி தொடக்கம் நம்ம இயக்கங்கள் வரை அதே போக்குத்தான். இதுவரையில் “தமிழ் பிரச்சனை” எதுவென்று அறுதியாகவும் இறுதியாகவும் கூற முடியாது தத்தளிக்கும் இயக்கங்கள், கட்சிகள் தமிழரின் வாக்குப் பலத்தை வைத்து தென்னிலங்கை அரசியல் வாதிகளுடன் பேரம் பேசி சிங்கள்வருக்கும் தமிழருக்கும் இடையே ஒரு மதிலைக் கட்டுவதையே முயற்சிக்கிறார்கள்.

    ஒடுக்கப்பட்ட மக்கள், சிங்கள பவுத்த பேரினவாதம், என்னும் வார்த்தைப் பிரயோகங்கள் சிறுபான்மை மக்களை பெரும்பான்மையுடன் “மோத” விட்டு அரசியல் பண்ணும் நபர்களின் முதலீடுகள்.

    தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள பிரச்சனைகளை நோக்கும் போது தமிழர்களுக்குள்ள “விசேஷ” பிரச்சனை என்னவென்று இதுவரையில் யாரும் கண்டு பிடிக்கவில்லை!

    குளத்தைக் கலக்கி பருந்துக்கு இரை கொடுத்தது போல இந்த தமிழ் “பிரச்சனை” மூலம் இலங்கைக்கே சமபந்தமில்லாத ஆசாமிகளுக்கு லாபம் தேடிக் கொடுத்ததுதான் கடைசி வரலாறு.

    வார்த்தைகளை அள்ளி வீசுவது சுலபம். அதன் அர்த்தங்களை சாதாரண மக்களுக்கு விளங்க வைப்பதுதான் கஷ்டம்.

    “தமிழ்” என்று புறப்படும் கோஷ்டிகள் பற்றி தமிழர்கள் ஜாக்கிரதையாகவே இருந்தாலே போதும்!

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    Mohamed Nisthar!
    எதையாவது எழுதி விட வேண்டுமென்ற வேணவா, எழுதுகிற விடையத்தைக் கிரகித்துக் கொள்கிறதில் பின்னடைந்து போகிறது. விளக்கமற்றதிற்கு வினா எழுப்புவதைத் தவிர்த்து, விடை தர முற்படுவது என்பது வீணடிக்கப்பட்ட ரவை.

    கணிதமும் அரசியலும் தெரியாத சமன்பாடுகள் கஞ்சிக்காவது பயன்பெறட்டும்.

    நீங்கள் எழுதியதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். ‘அநியாயங்களுக்கு நடுநிலை வகிப்பவன் ஒடுக்குமுறையாளனோடு ஒருங்கிணைந்து போகிறான்.’ (If you’re neutral in situations of injustice you’ve chosen the side of the oppressor) இதை சொன்னது யார்? இதில் யார் பயங்கரவாதம் வெளிப்பட்டு நிற்கிறது?
    இதை ibc யும் தீபமும் தங்கள் நோக்கிற்காய் பிராச்சாரப்படுத்தினார்கள். உங்களது விளக்கம் வெளிவந்ததா என்பது உங்களுக்கே தெரியாது, போராட்டம் நடத்தியதாக தேசத்தில் வந்து மார் தட்டுகிறீர்கள்.

    இந்த வாசகத்தின் அடுத்த வரிகளையும் சேர்த்து (If you are neutral in situations of injustice, you have chosen the side of the oppressor. If an elephant has its foot on the tail of a mouse and you say you are neutral, the mouse will not appreciate your neutrality. ‘அநியாயங்களுக்கு நடுநிலை வகிப்பவன் ஒடுக்குமுறையாளனோடு ஒருங்கிணைந்து போகிறான். எலி வாலில் வைக்கப்பட்ட யானையின் அழுத்தம் நடுநிலையாயின், அந்த நடுநிலை எலியால் பாராட்டப்படக் கூடியதல்ல.) கொழும்பில் நின்று காட்டுங்கள். நெற்றிக் கண்னை காட்டினாலும் குற்றம் குற்றமே என்று அவர்களிடமும் சொல்லுங்கள். உங்கள் தோள்களில் தட்டுகிறேன்.

    எறும்புப் பிரசசனைக்காய் எழுதிக் குவிக்கிறவரோடு இணைந்து கொள்ளலும், சின்ன உதவிக்காய் சிந்தனைகளை பறிகொடுத்தவரோடு ஒட்டிக்கொள்ளலும், என் கருத்துகள் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை, என்பதைத்தான் எடுத்தியம்புகிறது.

    விழலுக்கு நீர்ப் பாய்ச்சி………வேண்டாம் என்னை விட்டு விடுங்கள்.

    ….யானும் இட்ட தீ மூள்க, மூள்கவே!

    Reply
  • thurai
    thurai

    //அன்று முள்ளிவாய்க்கால் நோக்கி அழைத்துச் சென்ற அதே அரசியல் தலைமைகள் தான் இன்றும் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குகின்றனர். நபர்கள் தான் மாறியிருக்கின்றனரே அல்லாமல் அவர்களின் அரசியல் மாறவில்லை.//ஜெயபாலன்

    முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் சென்றவர்கள் யார்?

    விடுதலை என்பது தமிழரைத்தமிழர் ஆழும் தமிழர்களிற்கான உருமை என்னும் ஓர் தவறான கருத்தாகவுள்ளதாகவே நான் கருதுகின்றேன். சமூகத்தில் அடித்தளத்தில் அடக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தமிழனின் உருமை மீட்புப் போராட்டமே தமிழரின் விடுதலையாக அமையும் என்பதே என் கருத்து.

    இதுவரை நடந்தது சிங்களவர், தமிழர் மீது கொண்டுள்ள அதிகாரங்களை தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்கு தமிழரின் மேலாதிக்கவாதிகளால் பரம்பரை பரம்பரையாக எடுக்கும் முயற்சிகளேயாகும். இவர்களிற்கு மக்களின் அழிவு பெரியதல்ல. தங்களின் பரம்பரை பெயர்களைக் காப்பதே உள்நோக்கம். இவர்கள்தான் தமிழரின் முதலெதிரிகள், அழிவிற்கு காரணமான்வர்கள்.

    துரை

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    தமிழ் வாதம்,
    சரி,சரி! கணிதமும், அரசியலும் இன்னும் எமக்கு தெரியாது என்னென்னவோ எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று (ஒரு பேச்சிற்காகவேணும்) எடுத்துக் கொள்வதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் Desmond Tutu வின் வசனங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு பாசிச புலிகளின் பொது மக்கள் மீதான பயங்கரவாத்தை மூடி மறைக்க ஒரு முயற்சி எடுத்துள்ளீர்களே அடடா அற்புதம், அற்புதம்.

    இன்னொன்றையும் அவதானியுங்கள். D.Tutu வின் வாசகத்தை கொழும்பில் சொன்னால் முதுகில் குத்தி, மண்னிக்கவும் தட்டி கொடுப்பதாக கூறியுள்ளீர்கள். புலிகளுக்கு நான் சொன்ன இடமும் சொன்னவிதமும் சரி ஆகவே அதை இப்போது பிரச்சினையின் அடுத்த தரப்பினருக்கும் சொன்னால் நீங்கள் திருப்தி அடைவீர்கள். ஆமாம் உங்கள் தட்டி கொடுப்பு ஒரு நொபல் பரிசு, அதற்காக நான் நாக்கை தொங்கப்போட வேண்டுமா என்ன?

    அது சரி நான் போராட்டம் செய்ததாக எப்போது சொன்னேன். அதைவிடவும் அன்று அங்கே புலிக்கொடி தூக்கியோரெல்லாம் செய்தது போராட்டமென்றல் நான் செய்தது போராட்டம் என்று “சமன்பாட்டு ரீதியில்” கூறலாம் அல்லவா. அதாவது தத்துவ சமன்பாட்டில். உதாரணமாக ” மேகம் கறுத்தது அதை தொடர்ந்து மழை பெய்தது, ஆகவே மேகம் கறுத்தால் மழை பெய்யும்” என்ற மாதிரியாக. உங்கள் அறிவு வீச்சுக்கு இந்த உதாரணம் எம்மட்டு. ஆனால் நமக்கு முடிந்தது இவ்வளவுதான்.

    மேலும் கொழும்பு என்று நீங்கள் குறிப்பிட்டது இலங்கையை குறிப்பிடவே அல்லாமல் வெறுமனே தலைநகரை அல்ல என்று நினைக்கிறேன். நம் நாடுதானே உரிமையை, சுதந்திரத்தை உரசிபார்க்க சிறந்த இடம் அதைவிட வேறு எது இருக்கப்போகிறது. இதோ ஏப்ரல் 6ம் திகதி இலங்கை பொது தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாள் ஜனாதிபதியின் சமய விகாரங்களுக்கான ஆலோசகர் ஒருவரும், பெளத்த குரு ஒருவரும், ஏனைய அரசியல் பேச்சாளர்களும் வீற்றிருந்த மேடை அதிலே நாம் பேசுகிறோம், “இந்த நாடு ராஜபக்சேக்கு மாத்திரமான நாடல்ல, எனக்கும், இங்கு பிறந்த அனைவருக்கும் உரிய நாடு. ராஜபக்சேக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இங்குள்ள சோனகர், தமிழர், சிங்களவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் உண்டு”. நீங்கள் முதுகில் தட்டவேண்டும் என்று இதை சொல்லவில்லை. எமக்கு உள்ள உரிமையை எங்கு சொல்வதிலும் தயக்கமில்லை என்பதை சொல்லவே இதை சொல்கிறேன். இதிலும் உங்களுக்கு உடன்பாடு இருக்காது என நினைக்கிறேன். உங்களிடம்தான் முட்டையிடல், அடைகாத்தல், யானை வால், எலி என்று ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்குமே. அதை எடுத்து விட்டு, நீர் உரிமையை பற்றி கதைத்துள்ளீர் ஆனால் அவர்களின் பயங்கரவாதம் பற்றி கதைக்கவில்லையே என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அல்லது இப்படி ஒரு விடயமே நடக்கவில்லை என்றும் சொல்லலாம்.

    தமிழ் வாதம், எம் அறிவுக்கு எட்டிய வகையில் யாரும் “தமிழ் வாதம்” என்று பெயர் வைப்பதில்லை. உங்கள் உண்மை பெயரை குறிப்பிடாமல் புனை பெயருக்குள் மறைந்திருப்பதில் இருந்து கொண்டு மற்றவரின் துணிவு, துணிவிண்மை பற்றி கதைப்பது சிரிப்பாக இல்லையா? தமிழ் வாதம் தான் உங்கள் பெயர் என்றால் என் அறியாமைக்காக வருந்துகிறேன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தமிழ் வாதத்தின் கருத்துக்கள் சில சமயம் பக்கவாதம் கொண்ட கருத்தாகிவிடுகின்றது.

    அவர் நிஸ்தாருடைய கருத்துப்பற்றி வருமாறு தெரிவிக்கிறார்:
    //இதை ஐபிசி யும் தீபமும் தங்கள் நோக்கிற்காய் பிராச்சாரப்படுத்தினார்கள். உங்களது விளக்கம் வெளிவந்ததா என்பது உங்களுக்கே தெரியாது, போராட்டம் நடத்தியதாக தேசத்தில் வந்து மார் தட்டுகிறீர்கள்.//
    நிஸ்தாருடைய விளக்கம் ஐபிசி யிலோ தீபத்திலோ வந்தது என்று நிஸ்தார் அறிந்திருக்க வேண்டும் என்று என்ன அவசியம். நிஸ்தார் எழுப்பிய பிரச்சினை அவருடைய கருத்து ஐபிசி யில் அல்லது தீபத்தில் வந்ததா என்பதல்லவே?

    //எதையாவது எழுதி விட வேண்டுமென்ற வேணவா, எழுதுகிற விடையத்தைக் கிரகித்துக் கொள்கிறதில் பின்னடைந்து போகிறது. விளக்கமற்றதிற்கு வினா எழுப்புவதைத் தவிர்த்து, விடை தர முற்படுவது என்பது வீணடிக்கப்பட்ட ரவை.//
    தமிழ் வாதத்தினுடைய கருத்து அவருக்கே மிகப் பொருத்தமாக அமைவதாகவே நான் நினைக்கிறேன்.

    //சின்ன உதவிக்காய் சிந்தனைகளை பறிகொடுத்தவரோடு ஒட்டிக்கொள்ளலும், என் கருத்துகள் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை, என்பதைத்தான் எடுத்தியம்புகிறது.//
    ஆணுக்கும் பெண்ணுக்கும் தாம்பத்தியம் மூலம் கிடைக்கும் கலவி உறவை சிற்றின்பம் என்று வரையறுக்கும் சமயம் ஆண்டவனுடன் கலக்கும் உறவே பேரின்பம் என்கிறது. அந்தப் பேரின்பப் பெருவாழ்வைப் பெற சிற்றின்பத்தை மானிடர் துறக்க வேண்டும் என்கிறது சமயம்.

    அதே போன்ற தமிழ் வாதம் போன்ற சிந்தனைச் சிற்பிகள் சின்ன உதவிகள் கொடுப்பதும் பெறுவதும் சிற்றின்பம் என்றும் தங்கள் சிந்தனைகளோடு கலப்பதே பேரின்பம் என்றும் வரையறுக்கின்றனர். தமிழ் வாதம் பறிகொடுக்காமல் இன்னமும் வைத்திருக்கின்ற அந்தச் சிந்தனைதான் என்ன என்று எழுதாமல்
    //என் கருத்துகள் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை, என்பதைத்தான் எடுத்தியம்புகிறது. விழலுக்கு நீர்ப் பாய்ச்சி………//
    என்று எழுதி இருக்கிறார்.

    இந்த உலகம் முழுவதும் ஒடுக்கபட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உள்ள இடைவெளி இதுதான். ”என் கருத்துகள் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை. விழலுக்கு நீர்ப் பாய்ச்சி……”அதனால் தான் பிரித்தானியாவிலும் சரி இலங்கையிலும் சரி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்காகக் குரல்கொடுப்பவர்களுக்கு வாக்களிப்பதில்லைப் போலும்.

    Reply