ஜீ-15 நாடுகளின் 14வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மெஹேராபான் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாவதுடன் அதன் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையேற்றுக் கொள்கிறார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து ஜனாதிபதி மேற்படி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்பகல் 11.20 அளவில் தெஹ்ரானின் மேஹேராபான் விசேட பிரமுகர்களுக்கான விமான நிலையத்தைச் சென்றடைந்தார். இம்முறை ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ளதால் புதிய தலைவருக்கு வரவேற்பளிப்பதற்காக விமான நிலையத்தில் விசேட வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற்ற ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டின் போது மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஈரானிய ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் தகமதீ நெஜாத் ஏற்றுக் கொண்டதுடன் இம்முறை மாநாட்டில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார். இன்று அந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைப்பதானது ஆசிய பிராந்தியம் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு இதுபெரும் பலமாக அமையுமென ஜீ-15 நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக மேற்படி அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று முன்தினம் தெஹிரான் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டின் போதே வெளிவிவகார அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள் ளனர்.
இன்று ஆரம்பமாகும் ஜீ-15 அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பு, இரு தரப்பு உறவுகள், பல்தரப்பு வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாடு, நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து உலக பொருளாதாரத்துடன் இணைந்து செற்படல் போன்றவற்றிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.