இந்த வருடத்தில் இரு வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்காக ஜுலை மாதத்தில் மினி வரவு செலவுத் திட்டமொன்றும் 2011 ஆம் ஆண்டிற்காக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முழுமையான வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது திரைசேரியினூடாக பணம் பெற்று அரச செலவினங்களை சமாளிக்க அரசாங்கம் தயாராவதாக ஐ. தே.க. குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறோம். அழுத்தம் காரணமாக நாம் வரவு செலவுத் திட்டத்தை தாமதப்படுத்தவில்லை.
ஏப்ரல் 22ஆம் திகதியே புதிய அமைச்சுகள் நியமிக்கப்பட்டன. பல அமைச்சுக்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவுகளின் அடிப்படையிலேயே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதால் இதில் தாமதம் ஏற்பட்டது. எஞ்சிய மாதங்களுக்கான மினி வரவு செலவுத் திட்டம் ஜுலை மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். 2011ஆம் ஆண்டிற்கான முழுமையான வரவு செலவுத் திட்டம் வருட இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்