வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்க இணக்கம் தெரிவி த்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியத் தூதுவர் அசோக்காந்தை உத்தியோகபூர்வ மாக சந்தித்துப் பேச்சு நடத்தி யுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். தாம் தமக்கான அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பின் முதல் நடவடிக்கையாக வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்பந்தமாக இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய பிரதியமைச்சர் இப் பேச்சுவார்த்தையின் பயனாக உடனடியாக 25 கோடி ரூபா நிதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.
கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் 49, 000 பேர் உள்ளனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு சுய தொழில்களை மேற்கொள்வதற்கு மேற்படி 25 கோடி ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளது.
இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கமாகுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.