அரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.
தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.
கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்
NANTHA
டக்ளசுக்கு பிரச்சனைகளுக்கு ஒரு “முடிவு” காண வேண்டும் என்ற நோக்கம் உள்ளது புரிகிறது. மஹிந்த அழைத்தால் தமது “முடக்கு வாத” அரசியலைத் தொடர ஏதாவது “அவல்” கிடைக்காதா என்று அலையும் சம்பந்தன் கோஷ்டி ஒரு மேசையில் அமர்ந்து பேசுவார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி! ஏனெறால் புலம் பெயர்ந்த “புலன்” இழந்த கூட்டங்களின் “அபிலாஷைகளை” சம்பந்தன் தியாகம் செய்ய முடியுமா?
chandran.raja
இந்த கட்டாக்காலிகளை எல்லாம் பிடித்து மந்தையாகி ஒரு நோக்கத்திற்காக பட்டிக்குள் அடைக்க முடியுமென்று நாம் நினைக்கவில்லை. வேறு வழியில்லாததால் முயற்சித்துப் பாருங்கள். புதுப்புது தளிர்களை மேய்வதிலேயே திமிறிக்கொண்டிருக்கும். தமிழ்மக்களின் அரசியல் பலவீனமே! இவர்களின் பலம்.
inthi
தமிழ்கட்சிகளை ஒற்றுமைப்படுத்த சுவிஸிற்கு அழைத்த போது அங்கு புலிகளின் பாணியில் பேச்சுக்கு வந்து மற்றைய கட்சிகளைப் பார்த்து விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதித்து கூட்டத்தை ஏற்பாடு செய்த ரிஜசி வரதருடன் முறுகி (பாவம் அந்த மனிதன் தான் புலிகள் ஓகோ என இருக்கும் போது லண்டனில் இவருக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததால் நவநாயகம் என்ற புலிப்பினாமியால் தாக்கப்பட்டதை டக்ளஸ் மறந்து விட்டார்.) எல்லோரும் சேர்ந்து எடுத்த படத்தில் கூட நிற்க மறுத்தவர் தமிழ்மக்கள் சம்பந்தர் போன்றவர்களுக்கு வாக்களித்ததால் மாகாண சபை முதல்வர் கனவு கானல் நீராகி விட்டது டக்ளஸிற்கு. எனவே அவர் தனது அரசியலில் குத்துக் கரணம் அடிக்கத் தொடங்கி விட்டார்.
தேர்தலுக்கு முன்பும் புலிகளை ஆதரித்த போதும் தவறாக தெரிந்த கூத்தமைப்புடன் இவருக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? இவரை ஆதரித்த எங்களைப் போன்றவர்களை தோழர் தொடர்ந்தும் காட்டிக் கொடுத்து காலை வாரி விட்டார்.