ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் 80 வீதத்தால் தணிய ஐரோப்பிய விமானப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று (ஏப்ரல் 20 2010) இரவு பத்து மணி முதல் இயங்க ஆரம்பித்தது. பிரித்தானியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் இன்று முதல் இயங்க ஆரம்பித்து உள்ளன. விமான நிறுவனங்களின் விமானங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் தரையிறக்கப்பட்டதால் வழமையான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதும் ஐரோப்பா முழுவதும் 75 வீதமான விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் காரணமாக கடந்த ஆறு நாட்களாக பெரும்பாலும் மூடப்பட்டு இருந்த ஐரோப்பிய விமானப் போக்குவரத்து ஐரோப்பிய பொருளாதாரத்திலும் ஐரோப்பிய சகஜ வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பினும் கடந்த ஆறு நாட்களாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டதன் தாக்கத்திலிருந்து ஐரோப்பா இன்னமும் முற்றாக விடுபடவில்லை. குறிப்பாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயணித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வர முடியாமல் தங்கள் விமானப் பயணத்திற்காகக் காத்திருக்கின்றனர். இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய தலைநகரங்களுக்கு வரவேண்டிய விமானங்கள் இன்றும் புறப்படவில்லை.
இந்த விமானப் போக்குவரத்துத் தடையால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமல்ல உல்லாசப் பயணத்துறை மற்றும் ஏற்றுமதிகளில் பெரும்பாலும் தங்கியுள்ள கென்யா போன்ற நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளது.
எரிமலைக் குமுறல்கள் ஏற்படுவது இது முதற் தடவையாக இல்லாத போதும் சர்வதேச விமானப் போக்குவரத்து இவ்வளவு தூரம் தாக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். எரிமலைக் குமுறலினால் வளிமண்டலத்துக்கு தள்ளப்பட்ட புகைமண்டலத்தில் காணப்பட்ட துகள்களே விமானப் பயணங்கள் தடைப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இத்துகள்கள் விமானத்தின் என்ஜினுக்குள் சென்று அதனைச் செயலிழக்கச் செய்யும் என்ற அச்சம் காரணமாகவே விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் இருந்து தரையிறக்கப்பட்டது.
ஆனால் இத்துகள்கள் விமான என்ஜினைச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என இறுதியில் முடிவெடுக்கப்பட்டு ஐரோப்பிய வான் பரப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருக்கலாமா என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகின்றது. மேலும் வான் பரப்பை மீண்டும் திறந்துவிட எடுத்த முடிவு விஞ்ஞானிகளின் முடிவு என்பதிலும் பார்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்கள் வழங்கிய கடுமையான அழுத்தம் காரணமாகவே உடனடியாக ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்ற வாதமும் பலமாக உள்ளது. மேற்படி முடிவை எடுப்பதற்கு முன் விமான நிறுவனங்களின் தலைமைகள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. அதன் முடிவிலேயே வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது.
தூசு மண்டலத்தின் செறிவு ஒரு கன மீற்றருக்கு 0.002கிராம் இற்கு குறைவாக இருந்தால் விமானங்கள் பயணிக்க முடியும் என்ற முடிவுக்கு தற்போது Civil Aviation Authority (CAA) வந்துள்ளது. தற்போது பிரித்தானிய வளிமண்டலத்தில் ஒரு கன மீற்றருக்கு 0.0001 கீராம் செறிவிலேயே தூசு காணப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவித்தக்கப்பட்ட போது தற்போதைய செறிவு எல்லைக்கு மிகக் குறைவாக கன மீற்றருக்கு 0.0004 கிராம் செறிவிலேயே பிரித்தானிய வளிமண்டலத்தில் துகள்களின் செறிவு காணப்பட்டதாக சில விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அதனால் ஐரோப்பிய வான் பரப்பை முற்றாக போக்குவரத்திற்கு உகந்ததல்ல என்று தடை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற குற்றச்சாட்டு விமான நிறுவனங்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒரு தேவையற்ற எச்சரிக்கை நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானப் போக்குவரத்து கடந்த ஆறு நாட்களாகத் தடைப்பட்டதால் விமான நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக International Air Transport Association (IATA) மதிப்பிட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடுசெய்வதற்கு விமான நிறுவனங்கள் அரச நிதியுதவியை ஏதிர்பார்த்துள்ளன. ஆனால் கூடுதல் விமானச் சேவையை மேற்கொள்வதன் மூலம் இந்த நட்டத்தை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
ஏற்கனவே பிரித்தானியாவில் பள்ளிகள் கல்லூரிகள் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்ரர் விடுமுறையைக் கழிக்க உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் தங்கள் விடுமுறைக் காலத்திற்கு அதிகமான காலத்தை கழிப்பதால் தங்கள் விடுமுறையை இழக்கின்றனர். அல்லது சம்பளம் அற்ற விடுமுறையாக அவை கணிக்கப்படுகின்றது. மேலும் எப்படியாவது நாடு திரும்ப முற்பட்டவர்கள் மேலதிக கட்டணங்களைச் செலுத்தி நாடு திரும்ப வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட போதும் விமானப் போக்குவரத்து மே முதல் வாரமளவிலேயே வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.