இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களாக பேச முடியாமல் கஷ்டப்படுவதாகவும்,அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாக அவரை பரிசோதித்த விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருப்பதாகவும் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தனது கணவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை மூடி மறைத்து வருவதாகவும் அனோமா பொன்சேகா அரசு மீது குற்றம் சுமத்தினார்.நேற்று வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகாவின் றோயல் கல்லூரி வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் முறையிட்ட போது அவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களின் அனுதாபத்தை தேடுவதற்காக நாம் பொய் சொல்வதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்க தெரிவித்திருந்தார். நான் எனது கணவரைச்சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது உடல் நிலையில் தாக்கம் ஏற்பட்டு வருவதை உணரமுடிந்தது. இப்போது அவரால் பேசமுடியாது. கஷ்டப்பட்டு வருகிறார். வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவரமுடியாது அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்.
அவரைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு சுமார் மூன்று நாட்களாக தொடர்ந்து பரிசோதித்த பின்னர் அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து ஆறு வகையான மருந்துகளை பாவிக்க நியமித்திருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை எனது கணவருக்கு மருந்துகளை விட சூழல் வசதிகளே முக்கியமானதாகக் கருதுகின்றேன். அவரை அடைத்து வைத்து நோய்க்குள்ளாக்கி இயற்கை மரணத்தின் பக்கம் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுமே ஏற்கவேண்டியேற்படுமெனவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.