நாடாளு மன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:
பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பிரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.