மூத்த பிரஜைகளுக் கான 20 சதவீத வட்டிக் கொடுப்பனவு வழங்கல் நாளை ஆரம்பமாகிறது. 2010 ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவே நாளை வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் பெயர்களில் பேணப்படும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் மீது 20 சதவீதமான மேலதிக வட்டி வழங்கப்படும். அவ்வாறு மூத்த பிரஜையொருவருக்கு வருடமொன்றிற்கு 120,000 ரூபாய் வரையறைக்குட்பட்டு 01.01.2010 இலிருந்து வழங்கப்படும்.
மூத்த பிரசைகளினுடைய ஏற்னவேயுள்ள அல்லது புதிய மற்றும் கூட்டு அல்லது தனி சேமிப்பு அல்லது நிலையான ரூபா வைப்புக்கள், மூத்த பிரசைகளும் அவர் தம் வாழ்க்கைத் துணையும் கூட்டாக பேணும் ஏற்கனவேயுள்ள அல்லது புதிய வைப்புக் கணக்கு/ கணக்குகள் மீது வட்டி வழங்கப்படும்.
01.01.2010 இற்கு முன்னர் தொழிற்படுகின்ற, (வாழ்க்கைத்துணை தவிர்ந்த) அறுபது (ஆண்டுகள்) வயதிற்குட்பட்ட தனிநபர், தனிநபர்களுடன் இணைந்து மூத்த பிரசைகள் பேணும் கூட்டு வைப்புக் கணக்குகள், இவ் வகையான புதிய கூட்டுக் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.
ஏற்புடைய வைப்பாளர்களுக்கான 2010 ஜனவரி மாதத்திற்குரிய வட்டிக் கொடுப்பனவுகளை 18.03.2010 இலிருந்து பின்வரும் வங்கிகள் வழங்க ஆரம்பிக்கும். இலங்கை வங்கி, சிற்றி பாங்க் என்ஏ, டொயிஸ் பாங்க் ஏஜி, அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி, ஐசிஐசிஐ பாங்க் லிமிடெட், எம்பிஎஸ்எல் சேவிங்ஸ் பாங்க் லிமிடெட், நேசன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி, பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி, மக்கள் வங்கி, ரஜரட்ட அபிவிருத்தி வங்கி, சம்பத் பாங்க பிஎல்சி, த கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்பிரேசன் லிமிடெட், யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு லிமிடெட், சப்ரகமுவா அபிவிருத்தி வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், வயம்ப அபிவிருத்தி வங்கி என்பனவாகும்.
ஏனைய உரிமம் பெற்ற வங்கிகளின் வைப்பாளர்களுக்கான மேலதிக வட்டிக் கொடுப்பனவு, அவ் வங்கிகளினால் அவசியமான தகவல்கள் வழங்கப்பட்டவுடன் 2010 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குரிய கொடுப்பனவுகள் ஒன்றாக வழங்கப்படும். கொடுப்பனவுகளை இலகுபடுத்தும் முகமாக மூத்த பிரஜை ஒருவருக்கான மேலதிக வட்டியின் சிறிய தொகைகள் ரூ. 100 அல்லது அதனிலும் மேலான தொகைக்கு ஒன்று சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.