பொன்சேகாவின் கைது அரசியலமைப்புக்கு முரண், நாட்டில் ஜனநாயகம் இல்லை; முன்னாள் பிரதம நீதியரசர்

sarath_silva.jpg“கருத்து பேதத்துக்கு இடமில்லாவிடின் ஜனநாயகம் இல்லை என்பதே எனது கருத்து” என்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்றும் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக சரத் என் சில்வா மேலும் தெரிவித்ததாவது;

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அதிகாரமுள்ள நீதிமன்றத்தில் இன்னும் ஆஜர்படுத்தப்படாமல் இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைத்திருந்து தற்போது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இது சட்டபூர்வமானதா இல்லையா என்பதே இங்கு அடிப்படை பிரச்சினையாகவுள்ளது.

எமது நாட்டில் அரசியலமைப்பே உயரிய சட்டமாக இருக்கிறது. இதில் அடிப்படை உரிமைகள் என்பது பல வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறது. இதில் பிரதான அடிப்படை உரிமையாக தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. அப்படி அதை மட்டுப்படுத்தி யாதுமொரு நபரை கைது செய்யவோ அல்லது சிறைவைக்கவோ வேண்டுமெனில் அரசியலமைப்பின் 13(1) சரத்தின் பிரகாரமே அதைச் செய்ய வேண்டும். அந்த சரத்தில் தனிநபர் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது யாதுமொரு நபரை தனிநபர் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி கைது செய்யவோ அல்லது சிறை வைக்கவோ வேண்டுமெனில் நாட்டின் சட்டத்திற்கு அமையவே அதை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்படிக் கைது செய்யப்பட்ட நபரொருவர் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 13(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளை செயற்படுத்தும் ஏனைய சட்டங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 13(3), 13(4), 13(5) ஆகிய சரத்துகளில் விபரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் யாதேனுமொரு நபருக்கு தண்டனை வழங்கப்படும் முன்னர் சாதாரண நீதிமன்றத்தில் திறந்த விசாரணை நடத்தி சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்து சட்டத்தின் மூலமான ஏற்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

எனினும் இங்கு அது தலைகீழாக நடந்துள்ளது. குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கக் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. யாதுமொரு குற்றம் பற்றி தகவல் கிடைத்தால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து, அது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்ய செயற்பட வேண்டும் என அச் சட்டத்தின் 109 ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் யாதுமொருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணம் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 32 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர இராணுவ அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது இச் சட்டத்தின் 37 ஆவது சரத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்துக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும். இதில் எதிலும் சரத் பொன்சேகாவின் உரிமை பாதுகாக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13(1), 13(2) சரத்துகள் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 109, 32, 37 சரத்துகள் என்பன இங்கு பாதுகாக்கப்படவில்லை.

இதேநேரம், இங்கு இலங்கைச் சட்டம் மட்டும் முக்கியமல்ல. எமது அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டரீதியான சட்டம் இருக்கிறது. எமது அடிப்படை உரிமைகளானது சர்வதேச ரீதியில் மனிதஉரிமைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் மனிதஉரிமைகள் சர்வதேச பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் 3 ஆம் மற்றும் 9 ஆம் சரத்துகளில் நாம் முன்பு கூறிய உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது தனிநபர் சுதந்திர உரிமை மற்றும் தன்னிச்சையான கைதிலிருந்து நபரொருவர் பெற்றிருக்கும் சுதந்திரம் என்பன இதில் அடங்கும். ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்திலும் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த இந்த சாசனத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை பங்காளியானது. அதன் பின்னர் இலங்கைக்கு ஒரு அரசு என்ற வகையில் நாட்டிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளது. எனவே தான் இந்தக் கைதானது அரசியலமைப்புக்கு மட்டுமல்லாது ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்திற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானது.

இதேநேரம் இந்தக் கைதானது இராணுவச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள். இலங்கை இராணுவச் சட்டமானது இராணுவத்தின் ஸ்தாபிப்புக்காகவும் நடப்புக்காகவும் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இராணுவச் சட்டத்தின் பிரகாரமான பல குற்றங்கள் இருக்கின்றன. எனினும் அவை அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே பொருந்தும். எனவே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்கள் யார் என்பது அந்தச் சட்டத்தின் 34 ஆவது சரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது சாதாரண இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், தொண்டர்படை அதிகாரிகள் அதன் சிப்பாய்கள் ஆகியோர் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனினும் இராணுவத் தளபதியை அதிகாரியாக கருவதே இங்கு சிக்கலாகியுள்ளது. எனினும் அப்படியொன்று நடக்க இந்தச் சட்டத்தில் இடமில்லை.

இராணுவச் சட்டத்தின் 162 ஆவது சரத்தில் “அதிகாரி எனும் சொல் வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது இராணுவத்தில் அதிகாரமளிக்கப்பட்டவர் மட்டுமே அதிகாரியாக வரைவிலக்கணப் படுத்தப்படுகிறார். எனவே அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்படும் சிப்பாய்களும் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி என்பவர் பற்றி இராணுவ சட்டத்தின் 2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அவர்களது பதவியுயர்வு, பதவி நீக்கம் என்பன சட்டத்தின் 12 ஆவது சரத்தின் பிரகாரம் மேற்கொள்ள முடியும். அத்துடன் சிப்பாய்கள் ஆட்சேர்ப்பு பற்றி இராணுவச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் குறிப்பிடப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *