எந்தவித சக்திகளிலும் தங்கியிராத பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற மொன்றை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தைத் தேர்தலின் பின் நாம் மறந்துவிடவில்லை. யுக யுகமாக அதனை முன்னெடுத்து ஆசியாவின் ஐஸ்வர்யமிக்க நாடாக இலங்கையை உருவாக்க நாம் கட்டுப்பட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘மஹிந்த சிந்தனை’ எதிர்காலத்திட்டம் சம்பந்தமாக தொழிற்சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-
மஹிந்த சிந்தனையை வெளியிட்டு நாம் அதன் மூலம் செயற்பட்டோம். மக்கள் பிரசாரங்களால் அதனை அறிந்து கொள்ளவில்லை. நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தித் திட்டங்களே மஹிந்த சிந்தனையை மக்களுக்குக் காண்பித்தன. அதன் மூலம் நாம் சொன்னதைச் செய்தோம். அதுவே அத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் நாம் 350 ரூபாவுக்கு உரம் வழங்குகிறோம் என்றதையும் நாட்டை ஒன்றிணைப்போம் என்று உறுதியளித்ததையும் நம் தலைவர்கள் பலர் நம்பவில்லை. அதை பகற்கனவு என்றனர். பிரபாகரன் கூட இதெல்லாம் மஹிந்தவின் கனவு எனவும் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது.
கடினமானது கஷ்டமானது என எதனையும் நாம் செய்யாமலிருக்கவில்லை. கைவிட்டு தப்பியோடவும் நினைக்கவில்லை. கஷ்டம் கடினம் என்றில்லாமல் நாட்டுக்கு எதுதேவையோ அதனை முன்கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றினோம். மஹிந்த சிந்தனையானது இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப்பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டமாகும். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு உரிமையில்லாத நிலை இருந்தது. ஒன்றிணைந்த நாடு எமக்கு இழக்கப்பட்டிருந்தது.
மஹிந்த சிந்தனை மூலம் இவற்றை நாம் நிறைவேற்றியது மட்டுமன்றி நாட்டிற்கும் மக்களுக்குமான கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்தோம். சுதந்திரம், சமாதானம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றையும் மஹிந்த சிந்தனை மூலம் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. முழு உலகமே பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுத் தவித்த வேளையில் எம்மால் துணிவுடன் எழுந்து நிற்க முடிந்தது.
சுதந்திரத்தின் பின்னர் உருவான பல்வேறு நாட்டினதும் நகலாக நாம் இருக்கக் கூடாது. சிலர் இந்த நாட்டைச் சிங்கப்பூராக்குவோம் என்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பை இங்கு திணிக்கப் பார்த்தார்கள். வேறு நாடுகளில் வழங்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வுகளை இங்கும் நடைமுறைப்படுத்த தயாராகினர்.
இதனால் எமது தனித்துவம் இல்லாது போகும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நாம் எந்த நாட்டினதும் நகலாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் இலங்கையை இலங்கையாகக் கட்டியெழுப்பவே மஹிந்த சிந்தனை மூலம் முயற்சித்தோம். அரசியல் ஆரம்பமாவது மக்கள் ஒன்றிணையும் இடத்தில்தான். நாம் மக்களிடம் சென்று அவர்களுடன் செயற்பட்டு, அவர்களிடம் பாடம் கற்று அவர்களுக்குச் சேவை செய்தே அரசியலைக் கற்றுக் கொண்டோம்.
மஹிந்த சிந்தனையைத் தயாரித்தது வெளிநாட்டு நிபுணரல்ல. நம் நாட்டு சாதாரண மக்களின் தரிசனமே மஹிந்த சிந்தனை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தொழிற்சங்கப் போராட்டங்களின் போது உயிரைத் தியாகம் செய்த தொழிற்சங்கவாதிகளின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஞாபகச் சின்னம் மற்றும் உதவித் தொகையொன்றையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.