தேர்தல் முடிவை ஆட்சேபித்து திங்கள் எதிரணி மனுத்தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவை ஆட்சேபித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்யவிருக்கின்றன. இந்த மனு நேற்றுத்தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக உருவான நிலைமைகளால் மேற்படி ஆட்சேபமனு தாக்கலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்துக்கு முந்திய தேர்தல் பிரசார காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள், தாக்குதல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை, வாக்களிப்பின் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்களில் இடம் பெற்ற முறைகேடுகள், இறுதி முடிவுகள் தொடர்பிலான முறைகேடுகள் என பல்வேறு விடயங்கள் ஆதார பூர்வமாக இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் காலப்பகுதியில் சட்ட விவகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலீடுபட்ட மூன்று சட்டத்தரணிகளை அப்பதவிகளிலிருந்து நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மற்றொரு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட லால்பெரேரா நேற்று புதன்கிழமை மற்றொரு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கிறார். ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் சரூக், சட்டத்தரணி சரத் கோங்கஹகே, சட்டத்தரணி காலிங்க நந்தக இந்த திஸ்ஸ ஆகியோருக்கு எதிராகவே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *