வடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர்களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள். தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக் காலை (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.
இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன.
இதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000 பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000 ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத்துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.
பதாகை, சுவரொட்டிகளை காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட தினங்களில் அவற்றை வைத்ததுடன் கூட்டங்களையும் நடத்தினர். இது தவிர எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் வாக்களித்தார்கள். அதனை நன்கு ஆய்வு செய்த பின்னரே வாக்குகளை எண்ணுவதற்கு ஆயத்தமானோம்.