ஆறாவது ஜனாதிபதியும் புலி(சிவா)ஜியும்: முகம்மது நிஸ்த்தார்.

mahinda ,sarath2010 ல் இலங்கையின் 6ம் ஜனதிபதிபதியை தெரிவதற்கான காலம் முன்னகர்த்தப்பட்டது ஒரே ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். அதாவது நவீன துட்டகெமுனுவான இன்றைய ஜனாதிபதியின் புலி பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றி சிங்கள மக்கள் மனங்களில் இருந்து காய்வதற்குமுன் இரண்டாம் முறையும் இலகுவாக பதவிக்கு வரவேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் விடயங்கள் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்வதாகவும் ராஜபக்சவின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதிலும் இரண்டாம் சுற்று இல்லாமலே அந்த வெற்றி அமையுமானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற கூற்றும் நிலவுகிறது. அதே நேரத்தில் சரத் பொன்சேகாவின் வருகை என்பது கடைசி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வந்த சாரா பெளின்னின் வருகைக்குச் சமனானதாகவும் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் ஆனால் அது எப்படி மெக்கெய்ன்னின் வெற்றிக்கு வழி சமைக்கவில்லையோ அப்படியே சரத் பொன்சேகா(ரனில்) வெற்றி சலசலப்புடன் நின்று விடுமென்றே பேசப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜபக்ச தோல்வியடைவதை விட அவர் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் நிறையவே உள்ளன என்பதை நாம் மறக்க முடியாதுள்ளது. 30 வருட பயங்கரவாத நோய் குணமாக்கப்பட்டுள்ளதும், ஜனாதிபதி ஜே.ஆர் நாட்டை பிரிக்க போட்ட அத்திவாரம் சுக்குநூறாக்கப் பட்டுள்ளதும், நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக் குழுவினர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் சந்தோசப்படும் வேளையில் தமிழ் கற்று, தமிழருடன் தமிழில் கதைக்க ஆர்வம் கொண்டவராக இருப்பதும், நாட்டின் அபிவிருத்தியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் கடந்தகால அனுபவங்களை மறந்து தமது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலேயே கவனம் செலுத்துவர் என்பதில் நம்பிக்கை கொண்டவராகவுள்ளதும், சர்வதேச பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வழி தேடுபவராக இருப்பதும், 180 நாட்களுக்குள் அகதிகளை சொந்த இடங்களுக்கு அனுப்புவேன் என்று கூறி ஓரளவு வெற்றி கண்டதும், வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உண்மை கூறுவதும், சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திக்காவின் கூற்றை நிறைவேற்றியதும், சிங்களவர் மாத்திரம்தான் இலங்கையர் என்ற சரத்பொன்சேகாவின் யுத்தகால கூற்றுக்கப்பால் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற பேதமில்லை எல்லோரும் இலங்கையர்(?) என்று கூறுவது போன்ற பல்வேறு அடிப்படை காரணங்களுடன், திடீர் விலை குறைப்பு ஏற்பாடுகள், சம்பள உயர்வு அறிவிப்புகள் என்ற சில்லறை காரணங்கள் கூட மகிந்தாவின் வெற்றியை உறுதி செய்யப் போதுமானதாக பேசப்படுகின்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி த.தே.கூ ( TNA ) க்கும் சரத் பொன்சேக்காவிற்கும் இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் நாட்டை பிரிக்க எடுக்கும் பாரதுரமான தேசத்துரோகமாக சிங்கள மக்களிடையே சொல்லப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக த.தே.கூ யின் புலி ஆதரவு நிலைபாட்டை முன்னிறுத்துகின்றார் ராஜபக்ச. எனவே இவையெல்லாம் இவர் வெற்றி பெறுவார் என்றே கட்டியம் கூறுகின்றன.

இருப்பினும் ராஜபக்ச வெற்றி பெறுவார் அல்லது தோற்றுபோவார் என்பதற்கு அப்பால் இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டிய வலுவான காரணங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

sarath.jpgஅதற்கு இசைந்தாற்போல் முதலில் மற்றைய முக்கிய இரண்டு வேட்பாளர்களான சரத் பொன்சேகாவையும், சிவாஜிலிங்கத்தையும் சற்று தொட்டுச்செல்ல வேண்டியுள்ளது. பொன்சேகாவைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று ராஜபக்ச குடும்பத்துக்குப் பாடம்புகுத்தல், இரண்டு சிறுபான்மையினரை அவர்களின் இடத்தில் வைத்தல். ஆக இவருக்கு நாட்டின் அமைதியில், அபிவிருத்தியில் அக்கறை இல்லை. ரனில் விக்கிரமசிங்கவின் அரசியல் மதிஈனத்தால், தன்னால் என்றுமே ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில், தன்னால் முடிந்த ஆகக்கூடிய கைங்காரியத்தைச் செய்யும் முகமாக பொன்சேகாவைத் தன் கட்சியூடாக பொது வேட்பாளராக அமர்த்தியுள்ளார். தட்டில் வைத்துக் கொடுத்த பலகாரத்தை யார்தான் தட்டிக்கழிப்பர். தன் புதிய திட்டத்துக்குக் கனிந்து வந்த சந்தர்ப்பம் இது பொன்சேகாவிற்கு, சும்மா இருப்பாரா, ஆகவேதான் 13+ என்றும், ஜனநாயகத்தை கட்டிகாத்தல், மனித உரிமை, அது இது என்று தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் பேசுகிறார். தற்போதய அரசியல் நகைச்சுவையாளர் இவரே. போதாக்குறைக்கு த.தே.கூ.யின் ஒத்துழைப்பு பொன்சேகாவை பொறுத்தவரை பழத்துடன் கூடிய பலகாரத்தட்டு. ஆனானப்பட்ட ரனிலுக்கே புத்தி பேதலித்துவிட்டதென்றால் சம்பந்தருக்குக் கேட்கவாவேண்டும். ஆள் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தாங்கள் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட எடுக்கும் முயற்சியே இது என்பதைக்கூட விளங்கமுடியாத அளவுக்கு வயதாகிவிட்டது போலும்.

வாக்களிக்கும் உரிமை எமது ஜனநாயக உரிமை என்பதால் நிச்சயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்பதில்லை. வாக்கு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பதென்பதும் எமது ஜனநாயக உரிமையே. கடைசி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத போது உணரப்படாத இந்த உரிமை இப்போது மாத்திரம் உணரப்பட்டது விசித்திரம் மாத்திரமல்ல இது ஆபத்தானதும் கூட. மொத்தத் தமிழ் வாக்காளர்களும் இந்த தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டலாம். இரண்டு போர்க் குற்றவாளிகளில் யாருக்கு வாக்களித்தாலும் தம்மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே த.தே.கூ யின் பொன்சேகா சார்புநிலை என்பது அவர்கள் சுட்டும் ஒட்டுகுழுக்களின் நிலைக்கு ஒப்பானது. பொன்சேகா பொதுவாக சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தழிழருக்கு எதிரானவர் என்பதை விட முழு நாட்டையுமே ஒரு சிக்கல் நிலைக்கு கொண்டுசெல்வார். புதிய ஒரு மியான்மர் (பர்மா)ரை ஆசிய கண்டத்தில் ஏற்படுத்துவார், நாளடைவில் பாக்கிஸ்தான் மாதிரியான நாடாகவே இலங்கையைக் கட்டியெழுப்ப வழி சமைப்பார்.

நாடா அது எக்கேடும் கெடட்டும், அதன் பிரைஜைகளா அது அவர்கள் பாடு, தமிழரா அவர்கள் எப்போதும் ஏமாறியே பழக்கப்பட்டவர்கள் அது பெரிய விடயமே இல்லை. எமக்கு பழிவாங்கலே முக்கியம். அடுத்த பொதுத்தேர்தலே எமது குறிக்கோள் என்றால் த.தே.கூ யின் இந்த சந்தர்ப்பவாதத்தை நாம் குறை கூற முடியாது. ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்திற்கு ராஜ தந்திரம், தமிழர் தொடர்பான நீண்டகால நோக்குதல் அது இது என்றால் இதைவிட ஒரு அரசியல் கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. த.தே.கூ யின் நிலைப்பாடு சரியானதே என்று புலம்பெயர் தமிழ் (புலி) மக்கள் கூக்குரலிடுவது அவர்களும் நாட்டில் வாழும் தமிழரைப்பற்றி, தமது சொந்த பந்தங்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஆக பொன்சேகாவும், த. தே. கூயும் ஒரே மாதிரி சிந்திப்போர், ஒரே திசையில் செல்வோர்.

சிவாஜிலிங்கத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு சரியாயினும், தான் தனித்து நின்று தமிழ் மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்ப்பது சிங்கள அரசிற்கு ஒரு சவால் மாத்திரமல்ல அது தமிழர், சிங்கள இறையாண்மையை ஏற்க்கவில்லை என்பதை நிரூபிக்க கிடைக்கும் சந்தர்பம் என்றாலும், அவரின் கடந்தகால நடவடிக்கை அவரில் கட்டுக்கடங்காத சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

sivaji.jpgகடைசிக் கட்ட போராட்ட காலத்தில் இந்த ஜீ மேற்கு நாடுகளில் புயல் பயணம் செய்து, அனல் கக்கும் பேச்சுக்கள் பேசி தமிழ் (புலி) மக்களை சுயசிந்தனை இழக்கச் செய்தார். அவர் கைகளிலும் இரத்தக்கறை உள்ளதென நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டினோம். ஏனெனில் புலிகளால் மனிதக் கேடயமாக நிறுத்தப்பட்ட மக்கள்பற்றி அன்று இவர் வாய் திறக்கவில்லை. அதை விடவும் பின்வரும் சம்பவம் இந்த ஜீ எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மே 03, 2009. தமிழ் சட்டத்தரணிகளின் முதல் கட்ட உண்ணாவிரதம். பாராளுமன்ற சதுக்கத்தில், தீபம் தொலைக்காட்சிக்கு ஜீ பேட்டி கொடுத்து முடிந்த கையோடு அவரின் முதுகில் தட்டி, ‘மிஸ்டர்.சிவாஜிலிங்கம் நீங்கள் தானே புலிகளுடன் நெருக்கமானவர், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் பரிச்சையமானவர், மேற்குலக தமிழ் மக்களுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் உறவுப்பாலம் அமைப்பவர். ஏன் நீங்கள் புலிகளுடன் பேசி சர்வதேசத்தின் ஊடாக ஆயுதங்களை ஒரு பொதுவான நாட்டிடம் ஒப்படைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடாது. அங்கே தமிழர் அல்லவா சாகடிக்கப்படுகிறார்கள்’ இப்படி நான் கேட்க, சிவாஜிலிங்கத்தின் பதில் ‘ஐயா, இப்போது நாம் தமிழீழம் காணாவிட்டால் நாம் எப்போதும் பெறவே முடியாது. புலிகள் இப்போது ஆயுதங்களை கைவிட்டால் அது தமிழரின் தற்கொலைக்குச் சமனாகும்’ என்றார். இது மாத்திரம் இல்லாமல் இவர் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே கோசம் எழுப்பினார், புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்ததை ஒருபோதும் கண்டிக்கவில்லை என்பது மாத்திரமல்ல அதை கண்டுகொள்ளவுமில்லை.

ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் தேசம்நெட்ருக்கு பேட்டி வழங்கும் போது புலிகள் ஆயுதங்களை சர்வதேச நாடொன்றில் ஒப்படைக்காமல் கடைசிச் சண்டையின் போது நடந்து கொண்டவிதம் பிழையானது என்ற பொருள்பட கூறியுள்ளார். எனவே என்னிடம் கூறியது சரியாயின் தேசத்திடம் கூறியது பிழை. தேசம்நெட்டிடம் கூறியது சரியாயின் என்னிடம் கூறியது பொய். ஆக இவர் ஒரு சந்தர்ப்பவாதி. நிரந்தர கொள்கை இல்லாதவர். இவரின் கவலை எல்லாம் இந்த ஜனாதிபதி தேர்தல் அல்ல. எதிர்வரும் பொதுத்தேர்தலே. இதை விடவும் நகைச்சுவை என்னவென்றால் இவரின் தேர்தல் பிரவேசம் நிபந்தனைகளுடன் கூடிய ஒன்று. அதாவது சிங்கள வோட்டுக்கள் இரண்டாக பிரிந்தால், முன்னிலை வேட்பாளர்கள் 50% ஓட்டுக்கள் எடுக்காவிட்டால், தனக்கு ஆகக்குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்தால், அதுவே இரண்டாம் கட்ட போட்டியை தீர்மானிக்குமாக இருந்தால், தன்னை யாரும் பேச அழைத்தால் என்று நீண்டு சென்று இறுதியில்தான் பேரம்பேசல் என்று முடிகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு. மேல் சொன்னவிதத்தில் எல்லாம் நடக்கும் என்பதற்கு எந்த விதத்திலும் உத்தரவாதமில்லை. மற்றயது இவர் என்ன பேரம் பேசப்போகிறார். கடந்த 60 வருடங்களாக பேசாத பேரம் என்ன இருக்கிறது. இவர் பேரம்பேசத் தகுதியானவர் என்றால் ஏன் மே 18 வரை புலிகள் இவரை பேரம் பேச அனுமதிக்கவில்லை என்ற நியாயமான கேள்விகளுக்கு சிவாஜிலிங்கம் பதில் தரவேண்டும். எனவே இதுவரை காலமும் புலிகளின் சேவகனாக இருந்து விட்டு, மக்களைப் பற்றி கவலைப்படாமல் திடீரென்று ராஜதந்திரம் என்றால் இது மக்களை ஏமாற்றும் நயவஞ்சகமே தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஆக சிவாஜிலிங்கத்தின் களமிறங்கல் நாட்டிலுள்ள தமிழரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. இவரும் கூடவே த.தே.கூ. யினரும் தங்கள் பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வார்களாயின் அதுவே தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான கைங்கரியம். இவர்கள் எவரும் தமிழ் அரசியலை சீவியகால குத்துகைக்கு எடுக்கவில்லையே. புதிய தலைவர்கள் நாட்டுக்குள்ளே இருக்கிறார்கள் அல்லது இனிமேல் பிறப்பார்கள். ஆகவே சிவாஜிலிங்கத்தை நிராகரிப்பதும் தமிழரின் ஜனநாயக கடமை.

ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு சர்வதேசமும் ஆயுத உதவி, பொருளாதார உதவி என்பவற்றோடு அவர்களுக்கு பக்கபலமாக நின்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடாத்தியும் வைத்தனர். இதற்கான ஒரே ஒரு நியாயம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பதே. இப்போது இந்த சர்வதேசத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதை தமிழர் உணர்த்த விரும்பினால் அதை இரண்டு விதமாகவே செய்ய முடியும். ஓன்று ஜனாதிபதி தேர்தலை முற்றாக நிராகரித்தல். இதன் மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதியை உரக்கக் கூறி சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஒரு கெளரவமான தீர்வை ஏற்று கொள்ள தயாராய் இருத்தல். இரண்டு இலங்கையின் இறையாண்மையை ஏற்று ராஜபக்சையை வெற்றி பெற செய்வதின் மூலம் அவரை சர்வதேச சமூகத்துடன் கட்டி போடல். ராஜபக்சேயுடன் இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு அழுத்தம் கொடுப்பதோடு வெளிநாடுகளிலும் இந்த அழுத்தம் மிகவும் அவதானமாகவும் செய்யப்படவேண்டும். இந்த நாடுகடந்த தமிழ் ஈழ அரசு திட்டத்தை( இது ஒரு கேலிக்கூத்து என்பது வேறு விடயம்) ஒரு பேச்சுவார்த்தைக்கான ஊக்குவிக்கும் கருவியாக பாவிக்கலாம்.

ராஜபக்ச தனது வெற்றியுடன் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று கனவு காணமுடியாது, ஆனால் ஆயுத குழுக்களை இல்லாமல் செய்வார் என்பதை நம்பலாம். இருப்பினும் ஜனாதிபதி முறை மாற்றப்படாமல் இலங்கையில் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு பரிகாரம் இல்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாக இருக்க முடியாது. ஆக சிறுபான்மையினர் (தமிழர், சோனகர்) ஒன்றுபடாமலும், சிங்கள நேச சக்திகளை எம்முடன் சேர்க்காமலும், சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமலும் அவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் பரிகாரம் இல்லை என்பதை உணராமல், பழிவாங்கல் ஒன்று மாத்திரமே இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரின் குறி என்றால் நாம் இன்னும் ஒரு 60 வருடங்களுக்கு பழி வாங்கிக்கொண்டு, நாமும் அழிந்து நம் நாட்டையும் அழித்த பெருமையை பெற்றோராவோம்.

நன்றி- முகம்மது நிஸ்த்தார்.

Show More
Leave a Reply to Jhon Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Kumaran
    Kumaran

    ஒரு தெளிவான கட்டுரையை தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்பு கொடுத்ததிட்கு நன்றி. இலங்கையில் உள்ள எல்லா தமிழ் ஊடகங்களும் இதை பிரசுரிக்க வழிவகுத்தால் நன்று.

    Reply
  • ssganendran
    ssganendran

    //ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் தேசம்நெட்ருக்கு பேட்டி வழங்கும் போது புலிகள் ஆயுதங்களை சர்வதேச நாடொன்றில் ஒப்படைக்காமல் கடைசிச் சண்டையின் போது நடந்து கொண்டவிதம் பிழையானது என்ற பொருள்பட கூறியுள்ளார். எனவே என்னிடம் கூறியது சரியாயின் தேசத்திடம் கூறியது பிழை. தேசம்நெட்டிடம் கூறியது சரியாயின் என்னிடம் கூறியது பொய்.//
    சிவாஜிலிங்கம் எப்போ உண்மை பேசினார் எண்று யாருக்குமே தெரியாது.நிஸ்தாரின் கட்டுரை நண்றாகத்தான் இருக்கிண்றது. ஆனாலும் யார் ஜனாதிபதி என்பது 27ம் திகதிநிஸ்த்தாருக்கு புரிந்த்துவிடும். அதன் பின்பும் இப்படியான கட்டுரை தொடர்ந்த்து எழுதவேண்டும்

    Reply
  • mukuntha murali
    mukuntha murali

    mr sivajilingham is timid.adamant disobediant to his superiars there for he is no good for tamils.rajapaksa is kind and caring man he can have another six years in srilanka.as long as he need to win the world cup for lankans.

    Reply
  • Jhon
    Jhon

    I am agreed with Nisthar comments.

    Reply
  • மாயா
    மாயா

    கட்டுரை நன்றாக இருக்கிறது. தமிழ் மக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது? காரணம் , நமது பிரச்சனைக்கு தீர்வு ஒன்றைப் பெறுவதை விட , பழி வாங்குவதையே கொள்கையாகக் கொண்டிருப்பதால் தமிழரை நினைத்து வேதனைப்படாமல் இருக்க முடியாது.

    மகிந்த வந்தாலும் மகிழ்வேன். சரத் வந்தாலும் மகிழ்வேன்.

    காரணம் , மகிந்த அதிபராக வந்தால் , இலங்கைத் தமிழருக்கு இப்போதையை விட சற்று மூச்சுவிடக் கிடைக்கும். பெரிதாக ஒன்றுமே கிடைக்காமல் போனாலும் கூட, சில சொற்ப சலுகைகளாவது கிடைக்கலாம். புலத்து புலிகளுக்கு , புலத்தில் மீண்டும் மக்களிடம் பணம் கறக்க இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

    சரத் அதிபரானால் , மக்கள் வேதனைப்படுவர். பெரிதாக ஏதாவது என்றால் சக்களத்திச் சண்டை ஐதேக , ஜேவீபீ மற்றும் கூட்டு குழுக்களுக்குள் ஏற்பட்டு , அதைத் தீர்க்கவே காலம் கடந்து விடும். புலத்து புலிகளால் ஏதும் பெரிதாக மக்களிடம் கதைக்க முடியாது. அவர்களது சாணக்கியம் , மிஞ்சியவர்களையும் , மீண்டும் முள்ளிவாக்கால் கடற்கரைக்கு கொண்டு சென்றதை உணர்த்த வழி வகுக்கும். புலிகளும் , தமிழ் உணர்வு புலிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பாகும். இதுவும் ஒரு விதத்தில் வரவேற்க வேண்டியதே.

    என்ன இருந்தாலும் மகிந்த 60.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெல்வதை இன்றைய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளதோடு, ரஸ்ய பலல்கலைக் கழகங்களில் ஒன்றான லுமும்பா , உயர் பட்டமொன்றை மகிந்தவுக்கு வழங்கவுள்ளது.

    Reply
  • BC
    BC

    //புலத்து புலிகளுக்கு , புலத்தில் மீண்டும் மக்களிடம் பணம் கறக்க இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.//

    இனியெல்லாம் இது அவ்வளவு சுலபம் அல்ல. புலி ஆதரவாளர்களே உஷார் அடைந்துவிட்டனர். ஆனாலும் காசு சேர்த்து ஏப்பம்விட்டு சுவை கண்ட புலிகள் சும்மா இருப்பார்களா! நாடு கடந்த தமிழீழமே அதற்க்கு தானே.

    Reply