வவுனியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நாளை (15) வவுனியா செயலகத்தில் கூட்டமொன்று நடைபெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்வதுடன், 2010ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா நகர் முழுவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கும் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏ-பீ தரத்திலான சகல பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. புளியங்குளம், நெடுங்கேணி- ஒட்டுசுட்டான் பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகின்றன. நெலுக்குளம்-நேரியகுளம், செட்டிக்குளம் பாதையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.