முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.