நாட்டிலுள்ள 24 பாரிய குளங்கள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்றுத் தெரிவித்தார்.
இதேநேரம், கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்த மழை காரணமாகப் பொலன்னறுவை மாவட்டத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர் பி. கே. யு. நாணயக்கார கூறினார்.
இம்மழை காரணமாக பத்து வீடுகள் முழுமையாகவும், நாற்பது வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன மேலும் குறிப்பிடுகையில், அனுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனைகுளம், திஸாவெவகுளம், பதுளை மாவட்டத்தில் தம்பராவ குளம், சந்திஎல, சொரபொற குளம், மட்டு மாவட்டத்தில் வாகனேரி, குளம் உன்னிச்சை குளம், உறுகாமம் குளம், நவகிரி குளம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பந்தகிரிய குளம், தெபராவெவ குளம், மெளஆற குளம், வேரகல குளம், வீரவில குளம், குருநாகல் மாவட்டத்தில் இம்புல்வான குளம், நாகல்லகுளம், பொலன்னறுவை மாவட்டத்தில் கிரித்தல குளம், கெளடுல்லகுளம், மின்னேரிய குளம், பராக்கிரம சமுத்திரம், திருமலை மாவட்டத்தில் மகாதிவுல்வெவ குளம், வான் எல குளம் ஆகியன நூறு சதவீதம் நிரம்பியுள்ளது.
இதன் காரணத்தினால் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் மிக்க ராஜாங்கனை குளத்தின் நான்கு வான் கதவுகளும், வாகனேரி, உறுகாமம் குளங்களின் இரண்டு வான் கதவுகள் படியும், வேரகல குளத்தில் இரு வான் கதவுகளும், இம்புல்வான குளத்தில் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன. இதேவேளை பராக்கிரம சமுத்திரத்தின் சகல வான் கதவுகளும் நேற்று மூடப்பட்டன என்றார்.