இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 316 இலக்கை இந்திய அணி 11 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்த வெற்றிக்கு காம்பீர் (137 பந்தில் 150 ரன். 14 பவுண்டரி), வீரட் கோக்லி (114 பந்தில் 107 ரன். 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டமே காரணம். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 214 பந்தில் 224 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.
வெற்றி குறித்து இந்திய அணியின் பதில் கேப்டன் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, இலங்கை கேப்டன் “டாஸ்” வென்று முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தவறானது. ஏனென்றால் பனி பொழிவில் பந்து வீச்சாளர்கள் சரியாக வீச இயலாது. பந்தை “கிரீப்” செய்வது கடினம். 2-வது பவுலிங் செய்தால் இந்த நிலைமை இருக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்தோம். நான் “டாஸ்” ஜெயித்து இருந்தாலும் முதலில் பீல்டிங்கைதான் தேர்வு செய்து இருப்பேன். தொடக்கத்தில் எந்தவித ஈரப்பதமும் இல்லாததால் எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசினார்கள்.
315 ரன்னை மிகப்பெரிய ஸ்கோராக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களது பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. ஆனால் எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நானும், தெண்டுல்கரும் எளிதில் ஆட்டம் இழந்துவிட்டோம். காம்பீரும், கோக்லியும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரது ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கோக்லி சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே அவர் இந்த தொடரில் அரைசதம் அடித்து இருந்தார். சாம்பியன் டிராபி போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தார்.
இளம் வீரர்களான கோக்லி, ரெய்னா, ஜடேஜா தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும். கோக்லி திறமையானவர். அவருக்கு காம்பீர் ஆலோசனை வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை காம்பீர் கோக்லிக்கு வழங்கியதை பாராட்டுகிறேன். தெண்டுல்கரின் ஆலோசனைப்படி தில்சானை தொடக்கத்திலேயே “அவுட்” செய்தோம். அவர் பந்தை இடது கால் பகுதியில் போடுமாறு கூறினார்.
இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிக்காக காத்திராமல் கொல்கத்தாவிலேயே வென்று தொடரை வெல்ல விரும்பினேன். நான் விரும்பியபடி நடந்தது. ஏனென்றால் டெல்லி ஆடுகளம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. கடைசி போட்டியில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கைக்குதான் நெருக்கடி என்றார்.
தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது, எங்களது பந்து வீச்சு சரியில்லை. நேர்த்தியாக வீசவில்லை என்றார்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நடக்கிறது.