சர்வாதி காரமாக செயற்படக்கூடிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் 50 கடைப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
அரசாங்கம் சொல்லுகின்றது நாம் பல வருடங்களாக திட்டமிட்டே ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்தோம். எனினும் அதில் எந்த ஒரு உண்மையுமில்லை. நாம் பல்வேறு கொள்கையுடைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.பொது நோக்கம் ஒன்றுக்காக இன்று எவருமே எதிர்பாராத வகையில் ஒன்று சேர்ந்துள்ளோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். முப்பது வருடங்களாக எமது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று சர்வாதிகாரமாகச் செயற்படக்கூடிய அதீத அதிகாரமுடைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கவே ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தியுள்ளோம். இவரை நாம் அனைவரும் ஒன்றுபடுவதனூடாக வெற்றிபெறச் செய்வோம்.
அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது நான் ஏழை விவசாயிகளின் அன்பளிப்புகளை பெற்றாலும் பிரபாகரனது தாய் தந்தையரது பணத்தைப் பெறப்போவதில்லை என்றார். அன்று எமது ஜனாதிபதி வேட்பாளர் உரையாற்றும்போது எனது கொள்கைகளை பிரபாகரனின் தாய் தந்தையர் ஏற்றுக்கொண்டு வந்தாலும் அவர்களையும் ஏற்றுக்கொள்வேன் என்றே கூறினார். இதனை விளங்கிக் கொள்ளாமலே பணம் பெறுவதுபற்றி ஜனாதிபதி கருத்துத்தெரிவித்துள்ளார். எமது நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மகிந்தவைப் பற்றி நன்கு தெரியும்.எனவே இம்முறை சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கவே முடிவுசெய்துள்ளனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் என்னை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். அவர்களும் சிறந்த முடிவொன்றை வெளிப்படுத்துவர். கல்முனை, மட்டக்களப்பு பிரதேசங்களில் தமிழ்,முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சரத் பொன்சேகாவை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய முன்வந்துள்ளனர்.