”ரெலோ, சிறிரெலோ தலைமைகள் கைவிட்டதாலேயே சுதந்திரக் கட்சியில் இணைந்தோம்.” சு க இணைந்த ரெலோ உறுப்பினர் சிவம்: ரி சோதிலிங்கம்

Sri_TELOநவம்பர் 09ல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தமது முன்னைய அமைப்பான ரெலோ அமைப்பிலிருந்து என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டு பிரிந்து சிறிரெலோவை உருவாக்கினார்களோ, அதே குற்றச்சாட்டுக்களினால் பின்னர் சிறீரெலோவிலிருந்தும் வெளியேறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

ரெலோ மற்றும் சிறிரெலோ அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது அக்கறையற்று இருப்பதாகவும் இவர்களும் கடந்தகால மிதவாத அரசியல்வாதிகள் போன்றே செயற்ப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தவர்கள் சார்பாக சிறீரெலோ சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

”ரெலோ இயக்கத்திற்கு பல தோழர்கள் தமது வாழ்க்கையையும் உயிர்களையும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது இக்கட்சியின் தலைவர்கள் தமது சொந்த நலனிலேயே அக்கறையுடன் இருக்கின்றனர். நானும் இன்னும் பல தோழர்களும் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அவஸ்தைப்படுகின்றோம். அதேவேளை ரெலோ தலைவர்கள் எனப்படுவோர் தமக்கென சொத்துக்களை வெளிநாடுகளிலும் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் குடியேற்றியும் உள்ளார்கள். சிலவேளை பாராளுமன்றப் பதவி பறிபோனால் இவர்கள் உடனடியாகவே வெளிநாடு சென்று அங்கு குடியேறி விடுவார்கள். அதிலும் சில தலைவர்கள் பாராளுமன்ற பதவிகளை பெற்றதே இதன் மூலம் தமது குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதற்கே தவிர மக்களுக்கு உதவிசெய்யும் நோக்கில் அல்ல. மேலும் இவர்கள் தமது அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்க்கும் எவ்வுதவிகளும் செய்பவர்களாக இல்லை, செய்யும் நோக்கமும் இல்லை” என்று சிவம் கூறினார்.

”போராட்டம் என்று கூறி தலைவர்களால் மக்களும் இயக்க உறுப்பினர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் மக்களின் அரசியலை வென்றெக்க செய்தது ஒன்றுமில்லை. அல்லது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவாவது ஏதும் செய்தார்களா என்றால் ஒன்றுமில்லை. இவர்களால் மக்களுக்கு ஒருவித பிரயோசனமும் இல்லை. மக்களுக்கென இவர்கள் செய்த சேவைகள் என்ன என்று ஒருவிடயத்தை இவர்கள் எமக்கு தெரியப்படுத்தட்டும் நாங்களும் பதில் அளிக்க தயாராக உள்ளோம்.

இன்று ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சிக்கு வந்து பயங்கரவாதத்தை ஒழித்து உடனடியாகவே மக்களுக்கான உதவிகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார். ஆகவே எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே நாமும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். கடந்த 40 வருடங்களாக அபிவிருத்தி நடைபெறாது போன எமது பிரதேசங்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வளவு காலமாக இயக்கங்களின் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் மறந்து தனிநாடு என்ற கனவு கோசத்தின் பின்னால் திரிந்தவர்கள் இன்று மீண்டும் தேர்தல் நெருங்கியவுடன் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்வதற்கு வந்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இனியும் இடமளிக்கமாட்டோம்” என்றும் சிறீரெலோ சிவம் தெரிவித்தார்.

தாம் இந்த விடயங்களை – தமக்குள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தமது பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் சிவம் தெரிவித்தார். தம்மோடு உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணைவதைவிட வேறு வழியில்லை எனவும் இதுவே இன்றுள்ள யதார்த்தம் எனவும் தமக்கு சுதந்திரக்கட்சியின் பல மூத்த தலைவர்களின் ஆதரவும் ஒத்தாசைகளும் கிடைக்கும் எனவும் சிவம் நம்பிக்கை கொள்கிறார்.

இன்று நாட்டிலுள்ள நிலைமையிலும் பெரும்பான்மை மக்கள் சுதந்திரக் கட்சியுடனேயே இணைய விருப்பமாக இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி மூலமே நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதாகவும் இல்லையேல் இன்றும் இந்நாட்டில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

சிறீரெலோவில் உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார்கள், இவர்களும் ரெலோ தலைவர்களால் கைவிடப்பட்டவர்கள். தற்போது ரெலோவினர் தமது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்தல் மூலம் தமது வருவாயீட்டும் தொழிலை ஆரம்பிக்க உள்ளனர். ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் அழைத்து தம்மை ஏன் சுதந்திரக்கட்சியில் இணைகிறீர்கள் என்று கேட்டபோது இவற்றையே தான் கூறியதாகவும் சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பலர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் பலர் பல மாவட்டங்களிலிருந்தும் இணைய உள்ளதாகவும் இது ஒரு பாரிய மாற்றத்தை ரெலோவின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதியுடன் பேசும்போது திருகோணமலையில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் கிழக்கு மாகாணத்து விதவைகள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறியதாகவும் இப்பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் மக்கள் தற்போது உறுதிகள் அற்ற அரச காணிகளிலேயே வாழ்வதையும் சிலர் பல வருடங்களாக அவ்வாறே வாழ்வதையும் தாம் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியபோது இவர்களுக்கான உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்குத் தெரிவித்தாகவும் கூறினார்.

வட கிழக்க மாகாணத் தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினைக்கு தீர்வு தனது அரசாட்சிக் காலத்தில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும் தான் அரசியல்த்தீர்வு முன்வைக்கும்போது எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்து தனக்கு ஒத்தழைப்பு வழங்கும் இதை நம்புங்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சிவம் தெரிவித்தார்.

சிறிரெலோ தமிழர்களில் பலர் இராணுவ பொலீஸ் பதவிகளில் சேர்வதை ஊக்குவிப்பதாகவும் இதன் மூலமே எமது தமிழ் பிரதேசத்தில் எமது நிர்வாகங்களை தமிழில் நடாத்த முடியும் எனவும் எமது பிரதேசங்களில் வழங்கப்படும் உதவிகள் வேலைவாய்ப்புக்களில் விதவைகளிட்கு ஒரு குறிக்கப்பட்ட விகிதம் ஒதுக்கப்படுவதை தாம் விரும்புவதாயும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தான் கிளிநொச்சியில் தங்கியிருந்து, தமிழ் மக்களின் அந்தப் பிராந்திய மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பேன் இது மிக விரைவில் நடக்கும் என்று கூறியதாகவும் சிவம் தெரிவித்தார்.

இலங்கையில் உடனடியாக தேவையாக உள்ளது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்று வினவியதாகவும் பலரும் பல கருத்துக்களை முன்வைத்த போதும் சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண செயலாளர் திரு புஞ்சிநிலமே இப்போதுள்ள பிரச்சினை வட – கிழக்கில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளே என்றும் இவைகள் தீர்க்கப்பட்ட பின்பே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கருத்து முன்வைத்ததாகவும் சிவம் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருணா தங்களுடன் நன்றாக உரையாடியதாகவும் தன்னுடன் சிறீரெலோவை கைகோர்த்து வேலைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தனியாகவும் கூட்டாகவும் நடந்ததாகவும் சந்திப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே நடைபெற்றதாகவும் ஜனாதிபதி தமிழில் சரளமாக பேசியதாகவும் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் தமக்கும் சிறீசபாரத்தினத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் குறையாமல் இருக்கும் என்றும் சிவம் கூறினார்.

பிரிவுற்ற சிறீரெலோவின் இணைப்பாளராக பாரிசில் வதியும் திரு சாந்தகுமார் இயங்குகிறார்.

Show More
Leave a Reply to senthil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • senthil
    senthil

    ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருணா தங்களுடன் நன்றாக உரையாடியதாகவும் தன்னுடன் சிறீரெலோவை கைகோர்த்து வேலைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சிவம் தெரிவித்தார்…….. சிறிடெலோ இயக்கத்துக்கும் கருணாவின் பிரதிநிதி செந்தமிழ் என்பவருக்கும் இடையே ஒன்று சேர்வதான சு.கட்சியில் பேரம் இரு மாதங்களுக்கு முன்னர் வவுனியா அலுவலகத்தில் இரகசியமாக நடைபெற்றது. இங்கு சிவம் சொல்வது முரண்படுகிறது. இவர் சொல்வதில் இருந்து இவர் இனியும் நேர்மையாக மக்களுக்கு செய்வாரா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.

    Reply
  • babu
    babu

    இவ்வளவு காலமாக இயக்கங்களின் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் மறந்து தனிநாடு என்ற கனவு கோசத்தின் பின்னால் திரிந்தவர்கள் இன்று மீண்டும் தேர்தல் நெருங்கியவுடன் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்வதற்கு வந்துவிட்டார்கள்//.

    இது சிவாஜி செல்வத்திற்கு சமர்ப்பணம்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அவர்கள் எடுத்த முடிவு சரியானதே! தாகமாகயிருந்த மக்களுக்கு கானல்நீரை காட்டாமல் ஊறுகிற நீரில் மக்களின் வாய்க்கு ஒரு சிறுபகுதியாவது தாகத்தை தீர்க்கமுடியும். இன்று உள்ள நிலையில் அரசியல் முறையிலும் முற்போக்கானதே!. ஓரளவிலாவது மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்.

    Reply
  • Ruban
    Ruban

    நல்ல விஷயம். எல்லா தமிழ் கட்சிகளுக்கும் இது ஒரு உதரணமாக இருக்க வேண்டும்.TNA , PLOT , EPRLF இன்னும் மிட்சமாக இருக்கும் குழுக்களின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் , தொண்டர்கள் நேரடியாக ஜனதிபதிஉடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் முன்னணித் தலைவர்களை ஓடக் கலைக்க வேண்டும். சங்கரியில் தொடங்கி சம்பந்தன் கொம்பனியில் தொடர்ந்து, சித்தன், ஸ்ரீ வரை ஒடக்கலைக்க வேண்டும்.
    கருணா, டக்லஸ் ஜனாதிபதி மூலம் ஒரு நல்ல வழி சமைத்து மக்களுக்கு கொஞ்ச நன்மை என்றாலும் செய்வார்கள்

    Reply
  • Thaksan
    Thaksan

    டெலோ இயக்கத்தில் அரசியலை தேடுவது இன்றைய யதார்த்தத்துடன் ஒப்பிடுவதானால் பிரபாகரனை வன்னிக்குள் தேடுவதற்கு ஒப்பானது. தங்கதுரையுடன் டெலோவின் அரசியலும் மரணித்துவிட்டது என்பது எனது அபிப்பிராயம். சிறீசபாரத்தினமோ செல்வமோ சிவாஜிலிங்கமோ அரசியல் பாதையை கொண்டவர்களல்லர். அதனை புரிந்து கொள்ளும் ஆற்றலை அவர்களிடம் எதிர்பார்ப்பது அறியாமை. செல்வத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் பாராளுமன்ற கதிரையின் சுகம் போதுமானது. இல்லையெனில் புலிகளுக்கு சேவகம் செய்ய மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டு வந்திருப்பார்களா? பாராளுமன்ற கதிரைக்கு குறுக்குவழி புலிப் புராணம் என்பதை உணர்ந்துகொண்ட இவர்களுடன் சுரேஸ்பிரேமச்சந்திரனும் தன்வசதிக்கு பல்டி அடித்தார். சுரேஸ்> செல்வத்தை புலிகள் ஏற்றுக்கொண்டபோதே புலிகளின் கழிசறை அரசியல் அம்பலமாகிவிட்டது.

    Reply
  • palli
    palli

    தக்ச்சன் தலமைகளை வைத்து கொண்டு உனர்வுகளை மதிப்பீடு செய்வது சரியா?? ஒரு குழந்தை உருவாக பல ஆயிரம் விந்து அணுக்கள் வீணாகி போய் அதில் ஒன்றுதான் மிக அழகான குழந்தையாக வருவதாக மருத்துவம் சொல்லுகிறது, அந்த அணுக்களுக்கே இப்படி வலு இருக்கும்போது அந்த அணுவால் உருவான பல ஆயிரம் பேரையும் ஒன்றாய் மதிப்பீடு செய்வது பல்லியால் ஏற்றுகொள்ள முடியவில்லை;

    Reply
  • Thaksan
    Thaksan

    நட்புடன் பல்லிக்கு>
    டெலோ எந்த சந்தர்ப்பத்திலும் தனது அரசியல் கருத்தை முன்வைத்ததில்லை என்பதே எனது கருத்து. டெலோவின் தலைமைத்துவம் என்பதையே டெலோ என குறிப்பிடுகிறேன். அதற்காக அந்த இயக்கத்தில் இணைந்திருந்த அனைவரையுமே அரசியல் கருத்தற்றவர்கள் என்பதல்ல. அந்த இயக்கத்தில் இருந்து தமது உயிர்களை தியாகம் செய்தவர்களையோ புலிகளால் ஏன்? எதற்கு என புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே கொல்லப்பட்டவர்களையோ நான் விமர்சிக்கவில்லை. எந்த இயக்கத்தை சேர்ந்திருந்தவர்களெனினும் அவர்களின் உயிர்த்தியாகத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரவர்களின் தலைமையின் தவறுகளே பெரும்பாலான உயிரழிவிற்கு காரணமாக இருந்துள்ளது. பிரபாகரன் கூட 1979ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் (அப்போது உமாவின் தலைமையில் இருந்த) உடைவின்போது தங்கதுரை> குட்டிமணியுடன் தன்னை இணைத்துக் கொண்டு நீர்வேலி வங்கிக் கொள்ளை வரை செயற்பட்டவர் தானே. குட்டிமணி> தங்கதுரை> ஜெகன் ஆகியோர் பிரபாகரனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அரச படையினரால் கைதுசெய்யப்பட்டவர்களென்பது எத்தனை பேருக்கு தெரியும்? தங்கதுரை குட்டிமணி சிறையிலிருந்த காலத்தில் அப்போது சிறையிலிருந்த இப்போதும் உயிருடனிருக்கும் சிலருக்கு இது குட்டிமணி தங்கதுரையால் சொல்லப்பட்ட விடயம். இன்றும் உயிருடனிருக்கும் அந்தச் சிலரில் சிலரின் பெயர்கள் வருமாறு: டக்ளஸ் தேவானந்தா> பரந்தன் ராஜன்(ஈ.என்.டி.எல்.எவ்)> பாபுஜி(தற்போது கனடாவில் வசிக்கிறார்)> மகேந்திரன்(மாமா)> ஈழமணி(டேவிட்சன்)> சின்னராசா> தங்க மகேந்திரன்> டேவிட் ஐயா(காந்தீயம்)> பாரூக்(புளொட்டில் இருந்த இவர் புலிகளால் 2005ல் வவுனியாவில் கடத்தப்பட்டார். அவரின் தற்போதைய இருப்பு கேள்விக்குறியாகவுள்ளது). அந்த நீர்வேலி வங்கிக் கொள்ளைப் பணத்தை வைத்தே பிரபாகரன் சீலன்>சங்கர்>மாத்தையா>கிட்டு உட்பட்ட சிலருடன் மீளவும் 1980ல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இயங்க ஆரம்பித்தார். உமா> சுந்தரம்> சந்ததியார் புளொட் ஐ உருவாக்கி இயங்கினர்.

    Reply
  • palli
    palli

    தக்ச்சன் பல்லி இடையூறு செய்யவில்லை தொடருங்கள்; தேவையான தகவல்தான்; இந்த பெயர்களுடன் அளககிரியையும் சேர்த்து கொள்ளுங்கள்; இவர்களின் நாரதரே (நாகராஜா) கனடாவில் ஒரு குட்டி முதலாளியாமே உன்மையா??

    Reply
  • gopal
    gopal

    தக்ஸன் இலங்கையில் ஒருகட்சி 4 பாராளுமன்ற கதிரைகளை வைத்திருக்கும் கட்சி ரெலோ நீங்கள் அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி கருத்து எழுதுகிறீர்கள் நீங்கள் என்ன அரசியல் எழுதுகிறீர்கள் என்று விளங்கவில்லை இலங்கை அரசியல் என்பதே பா.ஊ பதவிகள் தானே இதற்கும் மக்களுக்கும் எப்பவாவது தொடர்பு இருந்ததா? அடுத்த பா.தேர்தலில் ரெலோ 6 எம்பி பதவிகளைப் பெறுவர் இது எனது எதிர்பார்ப்பு அதன்பின்னரும் உங்கள் கருத்தில் மாற்றம் வருமா?

    Reply
  • yoga
    yoga

    சிறீரெலோவின் கட்சிதாவலுக்கும் இன்றய ரெலோவின் தலைமைக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு என்பதை மறந்த இருக்க முடியாத காரணம் ரெலோவின் தலைவர்கள் எனப்படுவோர் தாங்கள் தங்கள் கொள்ளைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் தாம்சேர்த்த பணத்தில் தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலேயே இவர்களது காலம் அரசியல் எல்லாம் மக்களின் பெயரால் நடந்தது.

    உதாரணங்கள் செல்வம் சிறீகாந்தா வினோ போன்றோர் அதேவேளை ஜிவாஜி தனது ஊரவன் பிரபாகரனுக்கு சேவைசெய்து தனது ஊரவனை அரசாட்சி ஏற்றும் முயற்சியே தவிர மக்களுக்கான சேவை அல்ல ஆனால் எல்லாம் மக்களின் பெயரால்

    ரெலோ என்றுமே வெளிநாடகளில் உள்ள முன்னாள் போராளிகளில் அவர்களது பங்களிப்புக்களில் அக்கறை காட்டவில்லை அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்ததும் இல்லை இவர்களுக்கு தொடர்ந்து தமது பணக் குவிப்பே காரணம் மக்களும் அல்ல ரெலோ போராளிகளும் அல்ல இந்த முக்கியமான காரணங்களே இந்த ரெலோ உறுப்பினர்கள் சுதந்திரக்கட்சியில் சேர்ந்து கொண்டனர் இவர்களை இவர்களது சாதாரண உணவு வாழ்க்கை விடயத்தில் கூட இவர்கள் அக்கறை காட்வில்லை என்பதே இதன் உண்மை.

    இது தனிய ரெலோவுக்கு மட்டுமல்ல மற்றய புலி இயக்கத்தின் தலைமையின் நடத்ததையே கருணா இப்படி அரசுடன் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதேபோல பிள்ளையான் தலைமையிலான இயக்கமும் இதே போன்று நடந்து கொண்டது அதனாலே சங்கீதாவும் சுதந்திரக்கட்சியில் இணைந்தார்
    மொத்தத்தில் தமிழ் தலைமைகள் எல்லோருமே இப்படித்தான் நடந்து கொண்டார்கள் ஈபிஆரஎல்எப சரி ஈரோஸ் சரி ஈபிடிபி சரி எல்லோரும் இதே நிலைதான் இதில் சிறீரெலோ இன்று நாளை மற்றவர்களும் கியூ நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை

    Reply